கெஞ்சும் ஜெபம்! – 14 ஜுலை 2018 – அன்றன்றுள்ள அப்பம்

“இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்” (மல். 1:9).

“கெஞ்சுதல்” (Beseeching) என்பது, ஒரு வகை ஜெபமாகும். தேவனிடத்தில் வருந்தி கேட்கும் வார்த்தை. சில நேரங்களில், தாய் தன் மகனிடத்தில், “இப்படி செய்யாதே மகனே, தயவுசெய்து இப்படி செய்து விடாதே” என்று, பல காரியங் களைக் குறித்து, கெஞ்சி சொல்லுவாள். தகப்பனைப்போல அடிக்க மாட்டாள். கோபமாய் பேசமாட்டாள். செல்லமாக கெஞ்சுவாள்.

வேதத்தில் அதிகமான பக்தர்கள், கர்த்தரிடத்திலே கெஞ்சி கேட்டு ஜெபித்தார்கள். உரிமையோடு கேட்பதற்கு, தகுதியில்லையென்று உணர்ந்து, கர்த்தருடைய கால்களைப் பிடித்து, தங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கதறி கேட்பார்கள்.

யாக்கோபைப் பாருங்கள்! தன் மூத்த சகோதரனாகிய ஏசாவை, சமாதானத் தோடு பார்க்க வேண்டுமென்றால், ஆண்டவருடைய கிருபையும், ஆசீர்வாதமும் வேண்டும் என்பதை உணர்ந்தார். வேதம் சொல்லுகிறது: யாக்கோபு, “தன் பெலத்தினால், தேவனோடே போராடினார். அவர் தூதனானவரோடே போராடி மேற்கொண்டார். அழுது அவரை நோக்கிக் கெஞ்சினார்” (ஓசியா 12:3,4). கர்த்தர் அந்த கெஞ்சுதலை கேட்டு, மனமிரங்கி, யாக்கோபை ஆசீர்வதித்தார். மட்டுமல்ல, யாக்கோபின் வாழ்க்கையிலே, மாபெரும் திருப்பத்தைக் கொண்டு வந்தார். “தேவ பிரபு” என்று அர்த்தங்கொள்ளும், “இஸ்ரவேல்” என்ற பெயரைச் சூட்டினார்.

மோசே, இஸ்ரவேலரை வனாந்தரத்துக்கு அழைத்துக் கொண்டு வந்தபோது, ஒருமுறை, அவர்கள் ஒரு மாபெரும் பாவத்தையும், பாதகத்தையும் செய்து விட்டார்கள். தங்களுக்கு தெய்வமாய், பொன் கன்றுக்குட்டிகளை உண்டாக்கினார்கள். “எகிப்திலிருந்து நம்மை விடுவித்த தெய்வம் இதுதான்” என்று சொல்லி, அந்த பொன் கன்றுக்குட்டிக்கு, பண்டிகையை ஆசரித்தார்கள். மலையிலிருந்து இறங்கிய மோசே, இஸ்ரவேலர் செய்த பாதகத்தை அறிந்தபோது, உரிமையோடு கர்த்தரு டைய சமுகத்திற்கு அவரால் வர முடியவில்லை. அவர் எப்படி ஜெபித்தார் தெரியுமா? “உமது தாசராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரவேலையும் நினைத்தருளும். அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக் கொண்டே அவர் களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று, கெஞ்சிப் பிரார்த்தித்தான்” (யாத். 32:13).

கர்த்தருடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு, விடாப்பிடியாய் ஜெபிக் கும் ஜெபம் உண்டு. ஆனால், கர்த்தரை துக்கப்படுத்தி விட்டாலோ, அவருக்கு பிரியமில்லாத காரியத்தை செய்துவிட்டாலோ, உங்களை தாழ்த்தி, கெஞ்சி பிரார்த் திக்க வேண்டும். தாவீது சொல்லுகிறார், “கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட் டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன். என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப் பண்ணினீர்” (சங். 30:10,11). பாடகராகிய ஆசா சொன்னான், “நான் தேவனை நோக்கி, என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன். என் சத்தத்தைத் தேவனிடத்தில் உயர்த்தினேன். அவர் எனக்குச் செவிகொடுத்தார்” (சங். 77:1).

ராஜாவாகிய மனாசேயைப் பாருங்கள்! அவர், கர்த்தருக்கு விரோதமாய் நடந்தவர். ஒருநாள் அவர் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி கெஞ்சி, தேவனுக்கு முன்பாக, தன்னை மிகவும் தாழ்த்தினார். தேவபிள்ளைகளே, குற்ற மனச்சாட்சி உங்களை வாதிக்கும்போது, தேவ சந்நிதிக்கு முன்பாக நிற்க தகுதி யற்றவர்கள் என்று உணர்ந்து, கர்த்தரிடத்தில் கெஞ்சி ஜெபியுங்கள்.

நினைவிற்கு:- “அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்” (2 நாளா. 33:13).