வேதத்தை வாசித்து தியானியுங்கள்! -12 ஜுலை 2018

“வேதத்தைக் கேளாதபடி, தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும், அருவருப் பானது” (நீதி. 28:9).

இன்றைக்கு அநேகர் ஜெபிப்பார்கள். ஆனால், வேதத்தை வாசிப்பதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலே, ஆலயத்திற்கு வருவார்கள். ஆனால், வேதத்தைக் கொண்டு வருவதில்லை. நான், “ஒரு தொழிலை தொடங்க வேண்டும், திருமணம் செய்ய வேண்டும், எனக்காக ஜெபியுங்கள்” என்பார்கள். ஆனால், அவர்களோ, தனிப்பட்ட முறையில் ஜெபிப்பதில்லை. வேதத்துக்கு செவிகொடுப்பதில்லை.

ஜெபத்தைக் கேட்கிற தேவன் தாமே, வேதத்தை உங்களுக்கு அருளிச் செய்திருக்கிறார். வேதத்தை, எந்த தத்துவஞானியும் எழுதவில்லை. கர்த்தர்தாமே, தம்முடைய மகத்துவங்களை, வேதத்தின் மூலமாக, உங்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். ஆவியும், ஜீவனுமான இந்த வசனத்தை, நீங்கள் அசட்டை செய்வீர்களானால், அவரும் உங்களை அசட்டை செய்வார் அல்லவா? கர்த்தர் துக்கத்தோடு சொல்லுகிறார், “நீ அறிவை வெறுத்தாய். ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும், உன்னை வெறுத்து விடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய். ஆகையால், நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்” (ஓசியா 4:6).

இந்த வேதம், உங்களுடைய கைகளிலே தவழ்வதற்கு, எத்தனையோ பக்தர்கள் தங்கள் உயிரையும் தியாகம் பண்ணியிருக்கிறார்கள். எத்தனையோ இரவு பகல் விழித்திருந்து, மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். இந்த வேதம், உங்களுடைய கைகளில் தவழும்படி, கோடிக்கணக்கான ரூபாய் செலவில், வேதாகம சங்கங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

எல்லா புத்தகங்களிலும், இந்த ஒரு புத்தகம்தான், பரலோக தேவனால் எழுதப் பட்டு, மனுக்குலத்துக்கு ஆசீர்வாதமாக கொடுக்கப்பட்ட ஒன்றாகும். மற்ற மதங்களி லெல்லாம், புனித நூலாக, “புராணங்கள்” இருக்கின்றன. அவைகளெல்லாம், மனிதனுடைய கற்பனையிலிருந்து தோன்றிய, நீதிநெறிகளாகும். ஆனால், இந்த வேத புத்தகத்தில், கர்த்தருடைய ஆவியிருக்கிறது. கர்த்தருடைய ஜீவனிருக்கிறது. ஆகவே, வேத வசனங்கள் ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கின்றன. எனவே, கர்த்தர் வசனத்தை அனுப்பி, ஜனங்களைக் குணமாக்குகிறார்.

நெகேமியாவின் நாட்களிலே, வேதத்தை வாசிப்பதிலே ஒரு எழுப்புதல் உண்டானது. “அப்பொழுது ஒரு ஜாமமட்டும், அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும், அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டார்கள்” (நெகே. 9:3).

முதல் சங்கீதத்திலே, சிறந்த வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:2,3).

தேவபிள்ளைகளே, வேதம் உங்களுக்கு மனமகிழ்ச்சியாயிருக்கிறதா? அதை வாசித்து தியானிக்கிறீர்களா? வேதம், உங்களுடைய ஆவிக்குரிய உணவாயிருக்கிறது என்பதையும், குழந்தைகளுக்கு ஞானப்பாலாயிருக்கிறது என்பதையும், உணர்ந்திருக்கிறீர்களா?

நினைவிற்கு:- “நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான். விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது” (1 தெச. 2:13).