விண்ணப்பங்கள்! – 13 ஜுலை 2018

“இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்” (ஆதி. 17:18).

முதன்முதல் “விண்ணப்பம்” என்கிற வார்த்தை, இங்கேதான் வருகிறது. வேதத்திலே, சுமார் ஐம்பது இடங்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஒருவர், ஒரு நாட்டின் அதிகாரத்திலும், ஆளுகையிலும் பெரியவராயிருக்கும் போது, அவரிடம் சமர்ப்பிக்கும் மனுதான், “விண்ணப்பம்” என்று அழைக்கப்படுகிறது.

சாலொமோன் ஆலயத்தை பிரதிஷ்டை பண்ணினபோது, கர்த்தருக்கு முன்பாக, நிறைய விண்ணப்பங்களை சமர்ப்பித்தார். “என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பதையும், வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும்” (1 இரா. 8:28) என்று ஜெபித்தார். 1 இராஜா. 8-ம் அதிகாரத்திலே, இஸ்ரவேல் ஜனங்களுக்காக, சாலொமோன் பன்னிரண்டு விண்ணப்பங்களை ஏறெடுத்தார் என்று அறியலாம்.

பழைய ஏற்பாட்டில், ஜெபத்துக்கு அடையாளமாக, “தூபவர்க்கத்தில்” “வெள்ளைப்போளம்” விளங்கும். கூரிய கத்தியினால், வெள்ளைப்போள மரத்தை கிழிக்கும்போது, பிசின் தைலமாக, வெள்ளைப்போளம் வழிகிறது. அது கசப்பானது. மென்மையானது. அதே நேரம், நறுமணமிக்கது. வாழ்க்கையில் பல விதமான பிரச்சனைகளினால் உள்ளம் தொய்யும்போது, கண்ணீரோடு கர்த்தருடைய சமுகத்திலே ஏறெடுக்கப்படும், ஜெபத்திற்கு வெள்ளைப்போளம் அடையாளமானது.

உதாரணமாக அன்னாள். அவள் தேவ சமுகத்திற்கு, தேவ ஆலயத்துக்கு வந்தபோது, அழுது கண்ணீரோடு கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினாள் (1 சாமு. 1:10). அப்படியே, அவளுடைய ஜெபத்துக்கு பதிலாக தீர்க்கதரிசியாகிய சாமுவேலை பெற்றுக்கொண்டாள். தமிழ் பண்டிதர் ஒருவர் விண்ணப்பத்தைக் குறித்து, விண்+அப்பம் என்றார். “விண்” என்றால், “பரலோகம்.” “அப்பம்” என்றால், “ஆகாரம்” என்று அர்த்தம். மனிதனுக்கு தேவையான ஆசீர்வாதங்கள், விண்ணப்பத்தினாலே, விண்ணிலிருந்து அவனுக்கு அருளப்படுகிறது.

ஒரு குழந்தை, தன் தேவைகளை தாய்க்குத் தெரியப்படுத்தும்படி அழுகிறது. எறும்பு கடித்துவிட்டால் அழுகிறது. பசியாயிருந்தால் அழுகிறது. கீழே விழுந்து விட்டால் அழுகிறது. அந்த அழுகையின் குரலை, தாய் கேட்டு ஓடி வந்து, பிள்ளையின் தேவைகளை சந்திக்கிறாள். நமக்கு தாயும், தகப்பனுமாயிருக்கிறவர், கர்த்தர் ஒருவர்தான். அவர் உங்கள் விண்ணப்பங்களை அல்லத்தட்டுவதில்லை.

தாவீது ராஜா சிறிய விண்ணப்பங்களை, தேவனிடத்தில் ஏறெடுத்தார். “நான் உம்மிடத்தில் விண்ணப்பம் பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்” (சங். 5:2) என்றார். அதைப் பற்றி இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவர் சொன்னார்: “கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்” (சங். 6:9).

அதே நேரம் அப். யாக்கோபு, “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்” (யாக். 4:3) என எச்சரிக்கிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் தேவ சித்தத்தின்படி விண்ணப்பம் பண்ணுங்கள்.

நினைவிற்கு:- “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டு தலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (பிலி. 4:6).