முகத்தைத் தேடுங்கள்!

“என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள், தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி” (2 நாளா. 7:14).

ஒரு தேசம், கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்து, வேறே தேவர்களை பின்பற்ற ஆரம்பித்து, விக்கிரக ஆராதனைக்குள் செல்லுவார்களென்றால், பல விதமான சாபங்களை சந்திக்க வேண்டியிருக்கும். மழை பெய்யாமல், பஞ்சம் வரும். எங்கிருந்தோ வெட்டுக்கிளிகள் வந்து, பயிர் பச்சைகளை நாசமாக்கும். துஷ்ட ராஜா, அந்த தேசத்திற்கு விரோதமாய் படையெடுத்து வருவான். கொள்ளைநோய் ஏற்படும். தொடர்ந்து பாவம் செய்வார்களென்றால், அந்த தேசம் சிறையிருப்புக்குள் செல்லும். மரணங்கள் சம்பவிக்கும்.

இதையெல்லாம் தடுப்பது ஒன்றே ஒன்று. அதுதான் “ஜெபம்.” தங்களைத் தாழ்த்தி, ஜெபிக்கிற ஜெபம். தேவ முகத்தைத் தேடுகிற ஜெபம். இந்த ஜெபத்தினால், உங்களுடைய தோல்விகள் ஜெயமாய் மாறும். தாவீது ஆண்டவரை நோக்கி, “என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே என்று, என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று என்றார்” (சங். 27:8). வாக்குத்தத்தங்களைப் பிடித்துக்கொண்டு அவர், மன்றாடினார்.

தகப்பனிடத்தில், உரிமையோடு கேட்கும் புத்திர சுவிகாரம், பிள்ளைகளுக்கு உண்டு அல்லவா? “தகப்பனே, உமது முகத்தை, உம்முடைய வார்த்தையின்படியே தேடுகிறேன். உமது முகத்தின் ஆசீர்வாதங்களை, என்மேல் பொழிந்தருளும். என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே. தேசத்தில் வந்த சாபங்கள் மாறட்டும். குடும்பத்திலே வீசின புயல்காற்று, கொந்தளிப்பு அமரட்டும்” என்று ஜெபியுங்கள்.

கர்த்தருடைய முகத்துக்கு நேராய், இன்றைக்கு உங்களுடைய முகத்தைத் திருப்புங்கள். கர்த்தரை அன்போடும், எதிர்பார்ப்போடும் நோக்கி பார்ப்பதும் ஜெபமாகும். மனுஷர் மட்டுமல்ல, மிருகங்களும், ஜீவராசிகளும்கூட, கர்த்தரு டைய முகத்தைத் தேடுகின்றன. “எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக் கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங் கொடுக்கிறீர்” (சங். 145:15). “ஏற்ற வேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்” (சங். 104:27). அப்படி யானால், ஆறறிவுள்ள மனுஷராகிய நாமும், கர்த்தருடைய முகத்தைத் தேடுவதும், அவருடைய முகத்தை நோக்கிப் பார்ப்பதும், எவ்வளவு அவசியம்!

வான மண்டலத்திலுள்ள சகல கிரகங்களும், கோளங்களும், கர்த்தருடைய முகத்தை நோக்கியே சுழலுகின்றன. நேரான பாதையிலே, செம்மையாய் ஓட, கர்த்தர் கிருபை செய்கிறார். “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாயவிரிவு, அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” (சங். 19:1). கேருபீன்களும், சேராபீன்களும், தேவதூதர்களும், கர்த்தருடைய முகத்தை நோக்கியே நிற்கிறார்கள். கர்த்தர் மோசேயிடம், “கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக” (யாத். 25:20) என்று, ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றிய, தமது கட்டளையைக் கொடுத்தார்.

கர்த்தருடைய முகத்திலிருந்து இரட்சிப்பு வருகிறது. “சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப் பண்ணும். அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்” (சங். 80:19). சகேயு மரத்திலே ஒளிந்திருந்தாலும், கிறிஸ்துவின் முகத்தைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவலோடு காத்திருந்ததினால், குடும்பத்தாருக்கும், இரட்சிப்பு வந்தது அல்லவா?

நினைவிற்கு:- “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்” (ஏசா. 45:22).