சுத்திரகரிப்பின் ஜெபம்!

“யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே, அற்புதங்களைச் செய்வார் என்றான்” (யோசு. 3:5).

ஜனங்கள், கர்த்தரிடத்தில் அற்புதங்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் கர்த்தரோ, ஜனங்கள் தங்களை சுத்திகரித்து, பரிசுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். கர்த்தர், எனக்கு இந்த அற்புதத்தை செய்துவிட்டால் குடும்பமாக, ஞானஸ்நானம் பெற்றுவிடுவோம் என்கிறார்கள். ஆனால் கர்த்தர், “நான் உங்களுக்கு அற்புதம் செய்வேன். அதற்கு முன்பாக உங்களை சுத்திகரித்து, பரிசுத்த பாத்திரமாக ஒப்புக்கொடுங்கள்,” என்கிறார்.

இஸ்ரவேல் ஜனங்கள், யோர்தானைக் கடப்பதற்கு முன்பாக, தங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளவேண்டுமென்று, கர்த்தர் எதிர்பார்த்தார் (யோசு. 3:5). அப்படியே அவர்கள் பரிசுத்தம்பண்ணி, ஆசாரியர்கள் யோர்தானில் கால் வைத்தபோது, யோர்தான் பின்னிட்டுத் திரும்பி வழி விட்டது. அந்த வெற்றியை தொடர்ந்து, இஸ்ரவேல் ஜனங்கள், எரிகோ மதிலை ஏழு நாட்கள் சுற்றி வந்து, மகா சத்தமாய் ஆர்ப்பரித்தபோது, எரிகோ மதில்கள் விழுந்தன.

எரிகோ மதில்கள் விழுந்ததும், இஸ்ரவேலர் வெற்றியை கொண்டாடினார்கள். அவர்களில் ஒருவனாகிய ஆகான், அந்த வெற்றியின் மகிழ்ச்சியிலே, எரிகோவிலுள்ள தீட்டானவைகளை எடுத்து, தன் கூடாரத்தில் ஒளித்து வைத்தான். கர்த்தர், அந்த பாவத்தை அவன் அறிக்கை செய்து, விட்டுவிட வேண்டுமென்று விரும்பினார்.

அதை அறியாமல் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும் ஆயி பட்டணத்திற்கு யுத்தம் செய்யப் போனபோது, அங்கே பயங்கர தோல்வியைக் கண்டார்கள். இஸ்ரவேலில், 36 பேர் வெட்டப்பட்டார்கள். எதிரிகள் ஜெயித்தார்கள். இஸ்ரவேல் சபைக்குள்ளிருந்த பாவமே, அந்த சங்காரத்திற்கு காரணம் என்பதை உணர்ந்தார்கள்.

“அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும், கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு கிடந்தார்கள்” (யோசு. 7:6). தங்களை சுத்திகரிக்கும்படி, கட்டளையை மீறின ஆகானையும், அவனது குடும்பத்தாரையும் கல்லெறிந்து கொன்றார்கள்.

உங்களுடைய குடும்பத்திலே தோல்வியா? பிரச்சனையா? கணவனுக்கும், மனைவிக்குமிடையே சமாதானமில்லையா? குடும்பமாய் கூடி, உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் கர்த்தரைத் துக்கப்படுத்தினதுண்டா, அவருடைய வார்த்தைக்கு மீறி நடந்ததுண்டா, என்பதை ஆராய்ந்து பார்த்து, சீர்ப்படுத்த வேண்டியவைகளை சீர்ப்படுத்தி விடுங்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை சுத்திகரித்த பிறகு, ஆயி பட்டணத்தை அழிப்பது அவர்களுக்கு எளிதாயிருந்தது. சுத்திகரிக்கப்பட்ட இருதயத்தோடு போனதினால், கர்த்தர், வெற்றியின் மேல் வெற்றியைக் கொடுத்தார். எவ்வளவு பெரிய பரிசுத்த வானானாலும், சிறிய விசுவாசியானாலும், பாவ அறிக்கை செய்து, ஜெபிக்க வேண்டியது மிக அவசியம். அது அவர்கள் மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. பரிசுத்தமுள்ள தேவனை பரிசுத்தத்தோடும், சுத்திகரிக்கப்பட்ட இருதயத்தோடும் நெருங்கி கிட்டிச் சேர வேண்டும்.

நினைவிற்கு:- “தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண் களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்” (சங். 51:4).