இயேசுவின் நாமத்தில்!

“இதுவரைக்கும், நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” (யோவா. 16:24).

நீங்கள் ஜெபிக்க ஆரம்பிக்கும்போது, உங்களுடைய ஜெபத்தைக் கேட்க ஆவலுள்ளவராய், இயேசு நிற்பதை உணருவீர்கள். அதே நேரத்தில், உங்களை ஜெபிக்க விடாதபடி, என்னென்ன தடைகளைக் கொண்டு வர முடியுமோ, என்னென்ன எதிர்மறையான சூழ்நிலைகளை உருவாக்க முடியுமோ, அவ்வளவற்றையும் சாத்தான் செய்வான். நீங்கள் ஜெபிப்பதை, அவன் விரும்பமாட்டான். நீங்கள் ஜெபிக்கும்போது, சாத்தானுடைய சிங்காசனம் அசைக்கப்படுகிறது. அவனுடைய ராஜ்யம், பூமியிலே கட்டப்பட்டு, எழுப்ப முடியாதபடி தடுக்கப்படுகிறது.

ஆகவே, சாத்தானை எதிர்த்து நிற்க, நான்கு முக்கியமான போராயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். முதலாவது, இயேசுவின் நாமம். இரண்டாவது, இயேசுவின் இரத்தம். மூன்றாவது, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் (ஜீவ வசனங்கள், வாக்குத்தத்தங்கள்) நான்காவது, கிறிஸ்துவின் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர். இவைகளைக் கொண்டு, சாத்தானுடைய தடைகளை நீக்கிப்போடுங்கள். நீங்கள் துதிக்க ஆரம்பிக்கும்போது, இருள் விலகிப்போகும். அந்தகார சக்திகள் உங்களுடைய ஜெப இடத்தைவிட்டு ஓடிப்போகும். தேவனுடைய வெளிச்சம் வரும், பிரகாசம் வரும். ஜோதிமயமான மகிமை இறங்கிவரும்.

முதலாவது, இயேசுவின் நாமம் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பெரிய பாக்கிய மாகும். “கர்த்தருடைய நாமம், உனக்குத் தரிப்பிக்கப்பட்டது என்று, பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்” (உபா. 28:10). “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது” (மத். 28:18) என்று, கர்த்தர் சொல்லுகிறார். “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்” (மாற். 16:17). “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவா. 14:14) என்று அவர் வாக்களிக்கிறார்.

இரண்டாவது, இயேசுவின் இரத்தம் மகா வல்லமையுள்ளது. அவருடைய இரத் தத்திலே ஜீவனிருக்கிறது. அவருடைய இரத்தத்தை, கையிலே ஏந்திக்கொள்ளுங்கள். “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்தார்கள்” (வெளி. 12:11).

மூன்றாவது, இயேசுவின் வார்த்தை. “எழுதியிருக்கிறதே, எழுதியிருக்கிறதே” என்று சொல்லி சொல்லி, இயேசு சோதனைக்காரனாகிய பிசாசை ஜெயித்தார். அப்படியானால், கிறிஸ்து எவ்வளவு வேத வசனங்களை, மனப்பாடம் செய்து வைத்திருந்தார் என்பதை, அறிந்து கொள்ளலாம்.

நான்காவது, கிறிஸ்துவின் ஆவியாகிய பரிசுத்த ஆவியானவர், ஒரே சீராக, ஒழுங்காக, ஜெபிக்கும்படி உங்களுக்கு உதவி செய்வார். ஒரு சத்தியத்தை மறந்து போகாதிருங்கள். “பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னு டைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (சகரி. 4:6). உங்களுடைய பெலவீனத்தை மாற்றி, பெலனுள்ளவர்களாய் செய்கிற ஆவியானவரில் சார்ந்துகொள்ளுங்கள். பரிசுத்த ஆவிக்குள் ஜெபியுங்கள் (யூதா 1:20). அதே நேரத்தில், ஆவியினாலே ஜெபியுங்கள் (எபேசி. 6:18).

நினைவிற்கு:- “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக் கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26).