ஜெபத்தின் தீர்மானம்!

“தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும், தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (தானி. 6:10).

ஜெப வாழ்க்கையிலே, அநேகர் தோல்வியை சந்திக்க காரணம், மனதிலே உறுதியான தீர்மானமின்மையேயாகும். ஜெபத்தை ஆரம்பிக்கும்போதே, முப்பது நிமிடங்கள், அல்லது ஒரு மணி நேரம், நான் ஜெபிக்கப்போகிறேன் என, நேரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். தானியேல், “மூன்று வேளை ஜெபிப்பேன்,” என்று தீர்மானம் பண்ணினார். அதிலே, “முழங்கால்படியிட்டு ஜெபம் மட்டுமல்ல, ஸ்தோத்திரமும் செலுத்துவேன்” என்று உறுதி பூண்டார்.

பாருங்கள்! இந்த தீர்மானத்தின்படியே, அவர் நீண்ட காலம் செய்திருக்க வேண்டுமென்று நான் நம்புகிறேன். காரணம், “தான் முன் செய்து வந்தபடியே” என்று, எழுதியிருக்கிறதைப் பாருங்கள் (தானி. 6:10). அதன்படியே, ஜெபிக்கும்படி தன் மாடிக்கு ஏறினார். முன் செய்து வந்தபடியே, தன் வீட்டு பலகணியை, எருசலேமுக்கு நேராய் திறந்து வைத்து ஜெபித்தார்.

ஏறக்குறைய நானூறு மைலுக்கு அப்பாலிருக்கிற, எருசலேமிலுள்ள தேவால யத்துக்கு நேராக திறந்து வைத்து, ஜெபிக்கக் காரணம் என்ன? அந்த ஆலயத்தை, ஒருநாள் சாலொமோன் பிரதிஷ்டை செய்தபோது, கர்த்தர், “சிறையிருப்பிலே யாராகிலும், வேறு தேசங்களுக்கு, வெகு தூரத்திற்கு கொண்டு போகப்பட்டாலும், இந்த ஆலயத்திற்கு நேராய், தங்கள் முகத்தைத் திருப்பி ஜெபம்பண்ணும்போது, அந்த ஜெபத்துக்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவை களுமாயிருக்கும்” என்று வாக்குக்கொடுத்தார் (2 நாளா. 7:15).

அநேகருடைய ஜெப வாழ்க்கையிலே, தோல்வி ஏற்பட காரணம் என்ன? அவர் களுக்கு திட்டமான தீர்மானமில்லை. எல்லாவற்றையும் ஏனோ, தானோவென்று எடுத்துக்கொள்வதால், பிரச்சனைகள் வரும்போது, ஜெப நேரத்தை அசட்டை செய்து விடுகிறார்கள். பள்ளியில் படிக்கிற மாணவனுக்கு, “சிறந்த மார்க்கு வாங்குவேன், உயர்ந்து செல்லுவேன்” என்று அவன் உள்ளத்தில் சரியான தீர்மான மில்லாவிட்டால், அவன் கடமைக்காக படிப்பான். குறைந்த மார்க்குகளையே வாங்குவான். சில வேளைகளில் தேர்வில் தோல்வியடைந்துவிடவும் நேரிடும்.

எருசலேம் தேசத்திலிருந்து, பாபிலோனுக்கு சிறையாகக் கொண்டு போகப்பட்ட தானியேல், “ஜெப வீரன்” என்று அழைக்கப்பட்டார். “ராஜாவின் போஜனத்தினாலும், அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டார்”(தானி. 1:8).

“போஜனத்தால் தீட்டுப்படலாகாது” என்று மாத்திரமல்ல, மூன்று வேளையும் ஜெபிக்கவும் தீர்மானம்பண்ணியிருந்தார். ஜெபம் என்பது, ஒரு ஆவிக்குரிய பாடம். அதிலே, தோல்வி ஏற்பட இடங்கொடுக்காதிருங்கள். தீர்மானமாய் ஜெபம்பண்ணு வேன் என்று, உறுதி செய்துகொள்ளுங்கள்.

எப்படி தேவ ஊழியக்காரர்களும், பரிசுத்தவான்களும் கர்த்தருக்காக பெரிய காரியங்களைச் செய்தார்கள்? அவர்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தால், அங்கே திட்டமான, தீர்மானமான, தெளிவான ஜெபம் இருந்ததைக் காண முடியும். வாழ்க்கையிலுள்ள எல்லாப் பழக்கவழக்கங்களைப் பார்க்கிலும், ஜெபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிலே பழகினதினால், ஒவ்வொருநாளும் தேவ சத்தத்தைக் கேட்டார்கள். விசுவாசத்தில் வல்லவர்களானார்கள்.

நினைவிற்கு:- “தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்” (லூக். 4:16).