ஜெபத்தின் ஆயத்தம்!

“விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்” (யாத். 34:2).

ஜெபிப்பதற்கு, ஒரு ஆயத்தம் தேவை. தேவ சமுகத்தில் நிற்பதற்கு, ஒரு ஆயத்தம் வேண்டும். ஆயத்தமிருந்தால்தான், எதிர்பார்ப்பு இருக்கும். “கர்த்தர், எனக்காக யாவையும் செய்து முடிப்பார்,” என்கிற நம்பிக்கையிருக்கும்.

மோசேயோடு பேச, ஆண்டவர் விரும்பினபோது, ஆயத்தமாக வேண்டிய ஒரு நேரத்தைக் குறித்தார். அது, “விடியற்கால நேரம்.” அவர் எத்தனை மணிக்கு தூக்கத்தை விட்டு எழுந்திருந்தாரென்றால், எப்பொழுது பல் விளக்கி, காலைக் கடன்களை முடித்து, துணி மாற்றிக்கொண்டு, பிறகு கஷ்டப்பட்டு, சீனாய் மலையில் ஏறியிருந் திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள்.

மலையின் அடிவாரத்தில் அல்ல, “மலையின் உச்சியில், காலமே என் சமுகத்தில் வந்து நில்” என்று கர்த்தர் சொன்னார். நாம், எத்தனையோ காரியங்களுக்காக ஆயத்தம்பண்ணுகிறோம். ஆனால், கர்த்தருடைய சமுகத்திலே வந்து நிற்பதற்கு, ஆயத்தம் செய்கிறோமா?

“எலிசபெத் மகாராணி இந்தியாவுக்கு வருகிறார். சிறு பிள்ளைகளை சந்திக்க விரும்புகிறார்” என்று, சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய அரசாங்கம் அறிவித்த போது, சில பள்ளி மாணவிகளைத் தெரிந்தெடுத்தார்கள். அந்த மாணவிகள் எவ்வளவோ சுத்தமாய், என்ன நிறத்திலே உடுத்துவிக்க வேண்டும், மகாராணியை சந்திக்கப் போகும்போது, எப்படி சிரித்த முகத்தோடு செல்ல வேண்டும், என்பதை யெல்லாம் சொல்லிக் கொடுத்து, மாதக்கணக்கிலே ஆயத்தம் செய்தார்கள். அதன் படி, மாணவிகளை பயிற்றுவித்தார்கள். ஒப்பனை செய்து பார்த்தார்கள். ஒரு ஐந்து நிமிடம் கூட அவர்கள், மகாராணியைப் பார்க்கவில்லை என்றாலும், அவர்களுடைய உள்ளத்தில் ஏற்பட்ட சந்தோஷம், மகா அதிகமானது.

சிவகாசியிலுள்ள ஒரு தொழிலதிபர் சொன்னார், “அதிகாலை ஐந்து மணிக்கு தேவ சமுகத்திலே நிற்க வேண்டும் என்பதற்காக, இரவிலே நான் ஆயத்தம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். மிகக் குறைவான அளவு, சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, படுக்கச் செல்வேன். அதிகமாய் சாப்பிட்டுவிட்டால், மந்தமாயிருக்கும். காலையிலே எழும்புவது கடினமாயிருக்கும்.

மறுநாளிலே அதிகாலை எழுந்து, கர்த்தரைத் துதிப்பதற்கு, என்ன பாடல்களைப் பாட வேண்டும், என்ன வேதப்பகுதிகளை வாசிக்க வேண்டும், என்றெல்லாம் முன்குறிப்பேன். அலாரம் வைத்து எழுந்திருப்பேன். முகம் கழுவிவிட்டு, தேவ சமுகத்திலே அமர்ந்திருப்பேன். அப்பொழுது, அந்த வினாடியிலிருந்தே, தேவ மகிமையின் பிரசன்னம் என்னை மூடும். ஜெபத்திலே, கர்த்தரோடு இணைந்து கொள்வேன்” என்றார்.

சமீபத்தில், எங்கள் ஆலயத்தில் பிரசங்கித்த ஒரு தேவ மனிதன், “நூற்றுக்கணக் கானப் பாடல்களை Pen Drive-ல் பதிவு செய்து, நான் படுக்கப்போகும்போது, அந்த டேப் ரிக்கார்டரை, மென்மையான சத்தத்தில் இயக்குவேன். இரவெல்லாம் மெல்லிய சத்தத்தோடு, பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறபடியால், தேவ பிரசன்னத்திலே படுத்திருப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு ஏற்படும். டி.ஜி.எஸ் தினகரன் அவர்களுடைய பாடல்களெல்லாம், தேவ பிரசன்னத்தை எனக்குள் கொண்டு வந்துவிடும். அதிகாலை எழும்பி, கர்த்தரைத் துதிப்பதற்கு அது என்னை ஆயத்தப்படுத்தும்” என்றார்.

நினைவிற்கு:- “கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக் குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்” (1 இராஜா. 6:19).