ஜெப வாஞ்சை!

“ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும், எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ?” (2 சாமு. 23:5).

ஜெபத்தின்மேல், எப்போதுமே வாஞ்சையாயிருங்கள். அப்படிப்பட்ட வாஞ்சை உங்களுக்கு ஏற்பட வேண்டுமென்றால், கர்த்தர்பேரில் உங்களுக்கு ஒரு தாகம் வேண்டும். தேவ பிரசன்னத்தில், தேவ சமுகத்தில், ஒரு ஏக்கம் வேண்டும்.

“மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” (சங். 42:1,2). நீங்கள் எதை வாஞ்சிக்கிறீர்களோ, அதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஆவல், உங்களுக்கு ஏற்பட்டுவிடும்.

ஒரு சிறு பெண்ணிடம், நீ என்ன படிக்கப்போகிறாய்? டாக்டராக வேண்டுமா? இன்ஜினியராக வேண்டுமா? வக்கீலாக வேண்டுமா? என்று கேட்டேன். அவள் கணீரென்ற குரலில், சொன்னாள்: “நான் ஒரு பெண் மருத்துவராக வேண்டும். ஏன் தெரியுமா? அப்பொழுதுதான், ஏழை மக்களுக்கு உதவி செய்ய முடியும். நான் மிஷனெரி டாக்டராகி, ஜனங்களை கர்த்தரண்டை வழி நடத்த வேண்டும்” என்றாள்.

அவள் விருப்பத்தை, கர்த்தர் வாய்க்கச் செய்தார். அவள் இன்றைக்கு டாக்டராக பணியாற்றுகிறாள். கர்த்தருடைய சமுகத்தையும், பிரசன்னத்தையும் ருசிக்க வேண்டுமென்றால், உங்களுக்குள்ளிருக்கிற வாஞ்சையைத் தட்டியெழுப் புங்கள். அந்த வாஞ்சையை அனல்மூட்டுங்கள். “நான் ஜெபிக்கப்போகிறேன். ஜெபிக்கப்போகிறேன்” என்று, திரும்பத் திரும்ப சொல்லுகிறது மட்டுமல்ல, ஜெபிக்க முடியாத எல்லா தடைகளையும் தகர்த்துப்போடுங்கள். ஊக்கமாய் ஜெபிக்கும் சூழ்நிலையை உருவாக்குங்கள். நல்ல ஆவிக்குரிய புத்தகங்களை வாசியுங்கள்.

தாவீது, பரிசுத்த ஸ்தலத்துக்குச் சென்று ஜெபிப்பது வழக்கம். “என் தேவனுடைய ஆலயத்தின்மேல், நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும், வெள்ளியையும், என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்” என்றார் (1 நாளா. 29:3).

ஜெபிக்க வேண்டுமென்ற வாஞ்சையுள்ளவர்கள், தேவனுடைய சமுகத்தை சந்தோஷமாக அனுபவிக்க, எந்த தியாகமும் செய்வார்கள். நண்பர்களுடைய அன்பு பெரிதாயிருக்கலாம். ஆனால் கர்த்தருடைய சமுகத்தில், காத்திருந்து ஜெபிக்க விரும்புகிறவர்கள், நண்பர்களிடம், “நான் ஜெபிக்கிற நேரம் இது. தனிமையாய் அவரோடு உறவாட விரும்புகிறேன்” என்று சொல்லி விடுவார்கள்.

அதிகாலை வேளையிலே, கர்த்தருடைய சமுகத்திலே சென்று, ஜெபிக்க வேண்டும் என்பதற்காக, சொகுசையும், இனிமையான தூக்கத்தையும் தியாகம் செய்வார்கள். “காட்டு மரங்களுக்குள்ளே, கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது” (உன். 2:3).

தேவபிள்ளைகளே, உங்களுக்கு கர்த்தர்மேலும், அவருடைய பாதப்படி மேலும் வாஞ்சையிருக்கிறதா? கர்த்தர் சொல்லுகிறார், “அவன் என்னிடத்தில் வாஞ்சையா யிருக்கிறபடியால், அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிற படியால், அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்” (சங். 91:14).

நினைவிற்கு:- “நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர், நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று, வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக் கிறீர்களா?” (யாக். 4:5).