தாழ்மையோடு ஜெபியுங்கள்!

“கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்” (சங். 138:6).

ஜெப நேரத்திலே உங்களைத் தாழ்த்தி, கர்த்தருடைய பாதங்களைப் பற்றிக் கொண்டு ஜெபியுங்கள். கர்த்தர், உங்களிடத்திலே மனத்தாழ்மையை விரும்புகிறார். தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார். தாழ்மையுள்ளவர்களை மீட்டெடுக் கிறார். “தாழ்மை,” கிறிஸ்துவின் சுபாவங்களில் ஒன்று.

அதே நேரம், பிசாசானவன், முன்பு பரலோகத்திலே லூசிபராய் இருந்தவன், பிரதான கேருபாயிருந்தவன். அவனுக்குள்ளே வந்த பெருமையினாலே, கர்த்தர் அவனை பரலோகத்திலிராதபடி, கீழே தள்ளினார். காப்பாற்றுவதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட அந்த கேருப், தன்னுடைய பெருமையினாலே பிசாசாக கீழே விழுந் தான். அவன்தான் ஜனங்களின் மத்தியிலே, பெருமையை கொண்டு வந்தவன்.

ஆதாமுக்கும், ஏவாளுக்கும்கூட, முதன்முதலில் பெருமைதான் ஊட்டினான். “விலக்கப்பட்ட இந்த பழத்தை சாப்பிட்டு விட்டால், உங்கள் கண்கள் திறக்கப்படும். தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றான். அவர்கள் அதை எண்ணி, சிந்தித்துப் பார்த்தார்கள். தேவர்களைப்போலாகிவிட்டால், எல்லா வல்லமையும், அதிகாரமும் வந்துவிடும் என்று கற்பனை செய்து பார்க்கும்போதே, அவர்களுக்குள் பெருமை வந்தது. பெருமையினால் உயர்வு ஏற்படவில்லை. ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார்கள்.

தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும் ஜெபிக்கும்போது, “ஆண்டவரே, உம்முடைய தாழ்மையை எனக்குத் தாரும். நான் உமக்கு முன்பாகவும், உம்முடைய ஊழியர்களுக்கு முன்பாகவும், விசுவாசிகளுக்கு முன்பாகவும், மிகுந்த மனத் தாழ்மையோடு நடந்துகொள்ள கிருபை தாரும்” என்று கேளுங்கள். எப்படி பரிசுத்தத்துக்காக கேட்கிறீர்களோ, எப்படி ஜெப ஆவிக்காக கேட்கிறீர்களோ, அதுபோல, தாழ்மையுள்ள இருதயத்திற்காகவும் கேளுங்கள்.

வல்லமையாய் ஊழியம் செய்ய விரும்புகிறீர்களா? கர்த்தருக்காக உயிரைக் கொடுத்து பிரசங்கிக்கிறீர்களா? முடிவில் கர்த்தரைப் பார்த்து, “நாங்கள் அப்பிரயோ ஜனமான ஊழியக்காரர். செய்ய வேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்” (லூக். 17:10).

ஆண்டவரே, நீர் எங்களை எவ்வளவு உயர்த்தினாலும், எவ்வளவு பேர் புகழையும், செல்வத்தையும் தந்தாலும், எங்களுடைய உள்ளத்தில் அதன்மேல் சிந்தனை போகாமல், உமக்கு முன்பாக மிகுந்த மனத்தாழ்மையோடே நடந்துகொள் வோம் என்று, பிரதிஷ்டை செய்யுங்கள். கர்த்தருக்கே மகிமையை செலுத்துங்கள். அப்பொழுது, கர்த்தர் மனதுருகி உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பார்.

லூக். 18:10-14 வரையுள்ள வேத பகுதியை கவனித்துப் பாருங்கள். அங்கே இரண்டு பேர் ஜெபம்பண்ணினார்கள். பரிசேயன் ஜெபிக்கும்போது, தன்னைக் குறித்து, தம்பட்டமடித்து, பெருமையோடு ஜெபித்தான். மட்டுமல்ல, ஆயக்காரனை மட்டம் தட்டியும் ஜெபித்தான். ஆனால் ஆயக்காரன், தேவாலயத்திற்குத் தூரத்திலே நின்றுவிட்டான். தன் கண்களைக்கூட வானத்துக்கு ஏறெடுக்கத் துணியவில்லை. தன் மார்பிலே அடித்துக்கொண்டு, “பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று ஜெபித்தான். கர்த்தர் அவனை நீதிமானாக உயர்த்தினார். அவனுடைய ஜெபம் கேட்கப்பட்டது.

நினைவிற்கு:- “பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ள வர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” (1 பேதுரு 5:5). “கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப் படுங்கள். அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (யாக். 4:10).