விசுவாசத்தோடு ஜெபியுங்கள்!

“தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்ப தெப்படி?” (ரோம. 8:32).

கர்த்தர் நம்மேல் வைத்த, அன்பைப் பாருங்கள்! இந்த உலகத்திலே, நாம் வாழ எத்தனையோ நன்மைகளைக் கொடுத்திருக்கிறார். எத்தனையோ ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறார். வேத புத்தகத்தை அருளிச் செய்திருக்கிறார். சபைக் கூடுதலை ஏற்படுத்தியிருக்கிறார். தேவபிள்ளைகளின் ஐக்கியத்தைத் தந்திருக்கிறார்.

ஆனால் இவை எல்லாவற்றைப் பார்க்கிலும், அவருடைய சொந்தக்குமாரனாகிய கிறிஸ்துவையே, நமக்காக அவர் கொடுத்திருக்கிறார். ஒருவரும் தன்னுடைய பிள்ளையை, கொடுக்க முன் வரமாட்டார்கள். ஒருவருக்கு பத்து பிள்ளைகளிருந்தாலும், “ஒரு பிள்ளையை எனக்குக் கொடுங்கள். நான் பிள்ளையில்லாமலிருக்கிறேன்” என்றால் கொடுக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக, எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும், என்ன பொருள் வேண்டுமென்றாலும், கொடுத்து விடுவார்கள்.

ஒரு முறை, என் மகன், எங்கள் காரை ஓட்டிக்கொண்டு வந்தான். வழியிலே, பலத்த விபத்து நேரிட்டது. கார் நொறுங்கினது. என் மகனுடைய தொடை எலும்பு வெளியே வந்தது. அவன் அலறினான், துடித்தான். எனக்கு தெரிந்ததெல்லாம் ஜெபிப்பதுதான். “ஆண்டவரே, என்னை வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளும். என் பிள்ளை வாழட்டும். எழுந்து மறுபடியும் நடக்க உதவிச் செய்யும்” என்று வேண்டிக்கொண்டேன். ஒவ்வொரு தகப்பனுடைய உள்ளத்திலும், அப்படிப்பட்ட எண்ணம்தான் இருக்கும்.

பிதாவாகிய தேவனுடைய அன்பைப் பாருங்கள்! தன்னுடைய ஒரேபேறான குமாரன், அவருடைய மடியிலே செல்லப்பிள்ளையாயிருந்தவர். மனுக்குலத்திற்கு பாவ மன்னிப்பையும், இரட்சிப்பையும் கொடுக்கும்படி, கொடூரமான சிலுவை மரத்திலே, மரிப்பதற்கு அவரை ஒப்புக்கொடுத்தார். தியாகத்தோடு இவ்வளவு பெரிய ஈவைக் கொடுத்தவர், உலகப்பிரகாரமான நன்மைகளை உங்களுக்குக் கொடுக்காமலிருப்பாரா? கோடான கோடி ரூபாய்களைக் கொடுக்கிறவர், பத்து ரூபாயைக் கொடுக்கமாட்டாரா? உங்களுக்குத் தேவையான, உலக நன்மைகளைக் கொடுக்க மாட்டாரா?

ஒன்றே ஒன்றை மட்டுமே, கர்த்தர் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறார். விசுவாசத் தோடு நீங்கள் கேட்க வேண்டும் என்பதே, அது. இயேசு கிறிஸ்து சொன்னார், “தான் சொன்னபடியே நடக்கும் என்று, தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும், என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது, எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்” (மாற். 11:23,24).

இயேசு கிறிஸ்து, இந்த பூமியிலே மனுஷகுமாரனாயிருந்தபோது, அவரிடத்தில் வந்தவர்களுக்கு மனதுருகி, அற்புதங்களைச் செய்தார். தாமே சுகமாக்கினதைவிட, விசுவாசத்தோடு இயேசுவைத் தொட்டு சுகமானவர்கள், அதிகமானபேர். ஆகவே நீங்கள் ஜெபிக்கும்போது, என்ன தேவைகளாயிருந்தாலும், நிச்சயமாய் சந்திக்கப் படும், நிச்சயமாய் பெற்றுக்கொள்வேன் என்கிற நம்பிக்கையோடு, ஜெபியுங்கள். கர்த்தர் உங்களுடைய விசுவாசத்தைக் கனப்படுத்துவார்.

நினைவிற்கு:- “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்கு கீழ்ப்படியும்” (லூக். 17:6).