பாவ அறிக்கை!

“நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம் பண்ணி, உம்முடைய கற்பனைகளையும், உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்” (தானி. 9:5).

கர்த்தரைத் துதித்து, ஆராதித்த பின்பு, அடுத்ததாக, புதுநாளிலே எந்த பாவமும், அக்கிரமமும், உங்களை அணுகாதபடி கர்த்தர் பாதுகாக்க, அவரிடத்தில் ஒப்புவித்து ஜெபியுங்கள். “தேவனே, இந்த நாள் முழுவதும், எந்தப் பாவமும் நெருங்காதபடி, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். பரிசுத்தமாய் ஜீவிக்கிறதற்கு, என்னை உமது கரத்திலே ஒப்புவிக்கிறேன். என்னை சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று என்னை இரட்சித்துக்கொள்ளும்” என்று ஜெபியுங்கள்.

கர்த்தரிடத்தில் பரிசுத்தத்தையும், தூய்மையான வாழ்க்கையையும் கேட்கும் முன்பாக, பாவ அறிக்கை செய்வது மிகவும் நல்லது. என்னென்ன பாவங்கள், உங்களை தேவனை விட்டு விலக்கிவிட்டதோ, என்னென்ன அக்கிரமங்கள் கர்த்தரு டைய முகத்தை மறைக்கும்படி செய்ததோ, என்னென்ன பாவங்கள் உங்களுடைய மனச்சாட்சியை வாதித்து, ஊக்கமாய் ஜெபிக்க முடியாதபடி செய்ததோ, அதையெல்லாம் கர்த்தரிடத்திலே அறிக்கை செய்து, வெற்றியுள்ள பரிசுத்த வாழ்க்கை வாழ, கர்த்தருடைய இரக்கத்துக்காக கெஞ்சுங்கள்.

“உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும், உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாத படிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசா. 59:2). “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13).

தானியேல் ஜெபிக்க ஆரம்பிக்கும் முன்னால், தனக்காகவும், தன் தேசத்தின் மக்கள் அனைவரும் செய்த பாவங்களுக்காகவும், தன் முன்னோர்கள் செய்த பாவங்கள் ஒவ்வொன்றுக்காகவும் அறிக்கை செய்தார் (தானி. 9:1-5).

அதுபோல பக்தனாகிய நெகேமியாவும்கூட, பாவ அறிக்கை செய்ததைக் காணலாம். “உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக, இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள், உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக. நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம்” (நெகேமி. 1:6,7).

பாவ அறிக்கை செய்தபின்பு, பாவம் அணுகாத, பரிசுத்த வாழ்க்கையை கர்த்தரிடத்தில் கேளுங்கள். என்னவென்றால், நாம் ஆராதிக்கிற தேவன், பரிசுத்த முள்ள தேவன். கர்த்தருடைய பிள்ளைகளாகிய உங்களை அவர் நேசிக்கிறார். அதே நேரத்தில், பாவங்களையோ வெறுக்கிறார். பாவம் செய்யத் தூண்டுகிற பிசாசையும் வெறுக்கிறார்.

பாவத்தோடு நீங்கள் செய்கிற விண்ணப்பங்களையும், ஜெபத்தையும், தேவன் அங்கீகரிப்பதில்லை. தாவீது சொல்லுகிறார், “என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்” (சங். 66:18).

நினைவிற்கு:- “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவா. 1:9).