பலமுள்ள ஆவி!

“தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோத். 1:7).

கர்த்தர் உங்களுக்கு எவைகளை கொடுத்திருக்கிறார், எவைகளைக் கொடுக்க வில்லை என்பதை திட்டமாய் அறிந்துகொள்ளுங்கள். அவர் ஒருபோதும் உங்களுக்கு பயமுள்ள ஆவியைக் கொடுக்கமாட்டார். அன்புள்ள பரம பிதா, பயத்தை மேற்கொள்ளுகிற ஆவியையே தந்தருளுகிறார். அது பலமுள்ள ஆவி, அன்புள்ள ஆவி, தெளிந்த புத்தியுள்ள ஆவி.

நீங்கள் இரட்சிக்கப்பட்டிருப்பீர்களென்றால், ராஜாதி ராஜாவின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். ஒருபோதும் மனிதனுக்கோ, பிசாசுக்கோ, மந்திரவாதிகளுக்கோ, செய்வினைகளுக்கோ பயப்படவே கூடாது. பயத்தை நீக்குகிற, வல்லமையுள்ள ஆவியானவர், எப்பொழுதும் உங்களோடேகூட இருக்கிறார். மனிதனுடைய சுபாவம் பயப்படுகிறதாயிருந்தாலும், கிறிஸ்துவை அறிந்து, தேவ ஆவியைப் பெற்றிருக்கிற நீங்கள், அந்த பயத்தை மேற்கொள்ளுகிறவர்களாயிருக்கவேண்டும்.

ஒரு முறை நான் ஒரு வீட்டுக்குப் போயிருந்தபோது, அந்த வீட்டிலுள்ளவர்கள். பயந்து போய் இருக்கக் கண்டேன். அந்த வீட்டிலிருந்த வயது முதிர்ந்த தாயார் என்னைப் பார்த்ததும், “ஐயா, சற்று நேரத்திற்கு முன்பு, ஒரு தாடி வளர்த்த ஊழியக்காரர் இங்கு வந்தார். எங்கள் வீட்டின் மதிற்சுவரின்மேல் மூன்று பயங்கரமான அனுமான் ஆவிகள் உட்கார்ந்து, எங்கள் வீட்டையேப் பார்த்துக்கொண்டிருக்கிறதாக சொன்னார். எங்கள் வீட்டுக்கு விரோதமாக யாரோ செய்வினை செய்திருக்கிறார்கள். மந்திரக் கட்டுகள் இருக்கிறதாம். ஆனால், விடுதலையின் வழியை எங்களுக்குச் சொல்லவில்லை” என்றார்கள்.

நான், “உங்கள் வீட்டை சுற்றி எந்த அனுமான் ஆவியும் இல்லை. கரிய உருவங் களுமில்லை. தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களைச் சூழ, தேவ தூதர்கள்தான் நிறைய இருக்கிறார்கள். உங்களை காக்கும்படி, கர்த்தர் தம்முடைய தேவ தூதர் களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். உங்கள் வீட்டிலே எந்த மந்திரவாதமுமில்லை. ஏனென்றால் எண். 23:23-லே “யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதமில்லை. இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலுமில்லை” என்று சொல்லப்பட்டிருக் கிறது. தேவ பிரசன்னம் உங்களுடைய வீட்டை இனிமையாய் சூழந்திருக்கிறது. வாருங்கள், நாம் கொஞ்ச நேரம் கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்” என்று சொன்னேன். அப்படித் துதிக்க ஆரம்பித்த போது, அவர்களுடைய பயம் தெளிந்தது. அவர்களுடைய முகம் மலர்ந்தது.

“இனி யாராவது உங்களுடைய வீட்டுக்கு வந்து, உங்களுடைய வீட்டிலே கட்டுகளிருக்கிறது. மந்திரவாதிகள் மந்திரம் வைத்திருக்கிறார்கள். பொம்மையை எடுத்து ஆல மரத்தின் பொந்தில் வைத்து நீங்கள் சாகும்படி ஆணியடித்திருக்கிறார்கள் என்றெல்லாம் கதைவிட்டால், கலங்காதிருங்கள். உங்களைப் பூச்சாண்டி காட்டி, சாத்தான் செய்கிற தந்திரங்களை உடைத்தெறியுங்கள். கர்த்தர் உங்களுக்கு பயமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை.”

தேவபிள்ளைகளே, நீங்கள் துதித்து கர்த்தரை மகிமைப்படுத்தும்போது, உங்களுடைய வீட்டிலே ஆவியானவர் அசைவாடுவார். கர்த்தருடைய மகிமை தங்கியிருக்கும். மன மகிழ்ச்சியாய் நிரம்பியிருப்பீர்கள். கர்த்தருடைய பிரசன்னம் நிரம்பியிருக்கும்போது அங்கே அன்பு இருக்கும். தெய்வீக மகிழ்ச்சியிருக்கும்.

நினைவிற்கு:- “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள். ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1 யோவா. 4:4).