வான மண்டலங்களிலுள்ள ஆவிகள்!

“வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசி. 6:12).

ஆகாயம் வேறு. வானமண்டலம் வேறு. பரலோகம் வேறு. சாத்தான் வான மண்டலங்களிலிருக்கிறான். இன்னொரு விதத்தில் பார்த்தால், ஆகாயத்திலும் அவன் இருக்கிறான். “வானமண்டலத்திலேயுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகள்” என்று வேதம் குறிப்பிடுகிறது (எபேசி. 6:12). அதே நேரத்தில், “இப்பொழுது கிரியை செய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்” என்று எபேசி 2:2-ல் வாசிக்கிறோம்.

அங்கேயிருந்துகொண்டு, பலவிதமான பொல்லாத ஆவியின் சேனைகளை பூமிக்கு அனுப்பி, ஜனங்களை அடிமையாக்குகிறான். அவர்களுக்குள் மனச் சோர்பை ஊட்டுகிறான். வெளியிலிருந்து தாக்கிக்கொண்டிருக்கிற அவன், சந்தர்ப்பம் கிடைக்கும்போது, உள்ளேயும் நுழைந்துவிடுகிறான்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையை அடுத்த முகப்பேறு என்ற இடத்தில், வைலட் ஆரோன் என்ற அம்மையார் ஊழியம் செய்துகொண்டு வந்தார்கள். அசுத்த ஆவிகளைத் துரத்தவும், கட்டுண்டவர்களை விடுதலையாக்கவும், ஜனங்களை தேவனுடைய மகிமைக்கு நேராக வழி நடத்தவும், தீர்மானித்து உபவாசமிருந்தார்கள். அப்பொழுது, கர்த்தர் பேசினார்: “சரி, நீ ஆறு மணி நேரம் தொடர்ந்து கைகளை வானத்திற்கு நேராய் உயர்த்தி, ஸ்தோத்திரம்பண்ணுவாயானால், உனக்கு வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனையின்மேல் அதிகாரமும், வல்லமையும் கொடுப்பேன்” என்றார்.

“ஏன் ஆண்டவரே, ஏன் ஆறுமணி நேரங்கள்?” என்று கேட்டபோது, கர்த்தர்: “ஆறாம் நாளில் உருவாக்கப்பட்ட மனுஷனுக்காக, நான் சிலுவையிலே ஆறுமணி நேரம் கைகளை விரித்தவராய், ஆணிகள் கடாவப்பட்டவராய் தொங்கினேன். இதன்மூலம் சத்துருவுடைய தலையை நசுக்கி, நான் ஜெயமெடுத்தேன். அந்த ஜெயத்தை, நான் உனக்குத் தரும்படியாக விரும்புகிறேன்” என்று சொன்னார்.

ஆகவே, சகோதரி வைலட் ஆரோன் அவர்கள், தன்னுடைய ஜெப அறைக்குள்ளே நுழைந்து, இரண்டு கரங்களையும் உயர்த்தி, வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளை விரட்டும்படி துதிக்க ஆரம்பித்தார்கள். அரை மணி நேரம்கூட கைகளை உயர்த்திக்கொண்டு நிற்க, அவர்களுக்கு முடியவில்லை. கைகள் தளர்ந்து கீழே விழுந்தது.

அப்பொழுது கர்த்தர், அமலேக்கியரோடு நடந்த யுத்தத்தை ஞாபகப்படுத்தினார். “மோசே மலை உச்சியின்மேல் ஏறி, தேவனுடைய கோலை கையில் பிடித்துக் கொண்டு வானத்துக்கு நேராய் நீட்டி நின்றார். ஊரும் ஆரோனும் மோசேயின் கைகளைத் தாங்கிப் பிடித்ததுபோல, ஊழியக்காரர்களை வரவழைத்து, அவர்கள் உன் கையை தாங்கிப் பிடிக்கட்டும்” என்று கர்த்தர் பேசினார்.

அப்படியே அவர்களுடைய கணவனும், பிள்ளைகளும் அவர்களுடைய கையைப் பிடித்துக் கொண்டு ஸ்தோத்தரித்தார்கள். அநேக ஊழியக்காரர்களும் சூழ இருந்து அவர்களை ஜெபத்தில் தாங்கினார்கள். அன்றுமுதல் அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சூனிய கட்டுகளை முறிக்கவும், கர்த்தர் அவர்களைப் பயன்படுத்தினார்.

நினைவிற்கு:- “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதாரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும். அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற, உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்” (தானி. 12:1).