ஒடுங்கின ஆவி!

“ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்” (ஏசா. 61:3).

சிலரை, சத்துருக்கள் ஒடுக்குகிறார்கள். விரோதிகள் ஒடுக்குகிறார்கள். அடிமைத் தனம் ஒடுக்குகிறது. ஆனால், வேறு சிலர் ஒடுங்கின ஆவியையுடையவர்களாயிருந்து, தங்களைத் தாங்களே, ஒடுக்கிக்கொள்ளுகிறார்கள். “நான் ஒன்றுமில்லை. நான் இருந்து யாருக்கு என்ன பிரயோஜனம்?” என்று, ஒடுங்கி தனித்துப் போய் விடுகிறார்கள். கர்த்தரோ, “எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்” (ஏசாயா 52:1) என்று எழுப்புகிறார்.

இஸ்ரவேல் ஜனங்களை, முதலில் ஒடுக்கினவர்கள் எகிப்தியர். அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ, அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள் (யாத். 1:12). ஒடுக்குகிறவர்களின் பட்சமாய் கர்த்தர் நிற்கவில்லை. ஒடுக்கப்பட்ட இஸ்ரவேலரின் பட்சமாய்க் கர்த்தர் நின்றார். அதுபோல, உங்களுடைய வேலை ஸ்தலத்திலும், வியாபாரத்துறையிலும், மேலதிகாரிகள் உங்களை ஒடுக்கக்கூடும். வீண் பழியை சுமத்தக்கூடும். ஆனால் கர்த்தரோ, உங்கள் பட்சமாய் நிற்கிறார்.

ஒருவர் சொன்னார், “என் மேலதிகாரி, என்னைக் கொடுமைப்படுத்த என்னென்ன வழிகள் உண்டோ, அவ்வளவற்றையும் செய்வார். ஒரு மூட்டை மணலைக் கொடுத்து, இதை சுமந்து கொண்டு வா என்று சொன்னால், நான் சுமந்துவிடுவேன். ஆனால், ஒரு லாரி மணலை தூக்கிக்கொண்டு வா என்று சொன்னால், நான் என்ன செய்வது? என் மனைவி, பிள்ளைகளுக்கு என் சம்பாத்தியம் தேவை என்பதை உணர்ந்து, என்னால் முடியாதவைகளையும் செய்கிறேன். ஆனாலும் என் மேலதிகாரி திருப்தி கொள்ளவில்லை” என்றார்.

கர்த்தருடைய வாக்கு என்ன? “எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியருடைய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்” என்றார் (நியாயா. 6:9,10).

இஸ்ரவேல் ஜனங்களை, எகிப்தியர் மட்டுமல்ல, அசீரியர்களும் சிறைப் பிடித்துக்கொண்டு போய், அங்கே அவர்களை ஒடுக்கினார்கள். இஸ்ரவேல் புத்திரர் சிதறடிக்கப்பட்டார்கள். அதற்குப் பின்பு பாபிலோனியர் இஸ்ரவேலரை சிறைப்பிடித்து, எழுபது வருடங்கள் அடிமைகளாய் வைத்திருந்தார்கள். கர்த்தர் குறுக்கிட்டிராவிட்டால், அந்த ஒடுக்கத்திலிருந்து, அவர்கள் வெளியே வந்திருக்க முடியாது.

“நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே” (ஏசா. 14:4). தேவ பிள்ளைகளே, இதுவரை நீங்கள் ஒடுங்கிப்போயிருந்திருக்கலாம். கர்த்தர் உங்களை விசாலத்தில் கொண்டுவருவார். தண்ணீரையும், தீயையும் கடந்து வந்திருக்கலாம். கர்த்தர் உங்களை செழிப்பான மேட்டிலே நடத்துவார். நீங்கள் ஒடுங்கிப்போய் நின்ற வருஷங்களுக்குத்தக்கதாக, இனி மன மகிழ்ச்சியின் நாட்களைத் தந்தருளுவார்.

நினைவிற்கு:- “உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்லுவார்கள்” (ஏசா. 60:14).