வேசித்தன ஆவி!

“வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று. அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல், சோரமார்க்கம் போனார்கள்” (ஓசி. 4:12).

மூன்று ஆவிகள், ஒன்றோடொன்று இணைந்தவை. அவை மனுஷனுடைய ஆத்துமாவை தாக்கி, கெடுத்துப்போடக்கூடியவை. முதலாவது, இச்சையின் ஆவி. இரண்டாவது, விபச்சார ஆவி. மூன்றாவது, வேசித்தன ஆவி. கர்த்தர் நாயகனாய், ஆத்தும மணவாளனாய், தேவனுடைய பிள்ளைகளை நேசிக்கும் போது, அவர்கள் விக்கிரகங்களை தொழுதுகொண்டதினால், கர்த்தர், “எனது ஜனங்கள் எனக்கு துரோகம் செய்து வேசித்தனம் பண்ணினார்கள்” என்று அங்கலாய்த்தார்.

வேசித்தனம் ஒரு மனுஷனுடைய சரீரத்தையும், ஆத்துமாவையும், கெடுத்துப் போடக்கூடிய பொல்லாத கொடிய பாவமாகும். ஆண்டவரோ, வேசித்தனத்தை மிகவும் வெறுக்கிறார். அப். பவுல் எழுதினார், “வேசியோடு இசைந்திருக்கிறவன், அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறான் என்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (1 கொரி. 6:16) என்று சொல்லியிருக்கிறதே.

சாதாரணமாக ஒரு வேசி, பல ஆண்களிடம் சென்று வருகிறபடியினால், அந்த ஆண்களுக்கு என்னென்ன வியாதிகள் இருக்கிறதோ, அவ்வளவும் அந்த வேசிக்குள் வந்துவிடும். ஒரு வேளை, அந்த ஆணுக்கு எயிட்ஸ் நோய் இருந்தால், வேசிக் குள்ளும் அது வருகிறதினாலே, அவள் அந்த எயிட்ஸ் நோயை, அவளிடம் வருகிற மற்ற அத்தனைபேருக்கும் கொடுத்துவிடுகிறாள். ஒரு வேசிக்குள், என்னென்ன ஆவிகள் குடியிருந்துகொண்டிருக்கிறதோ, அவ்வளவு ஆவிகளும், அவளிடம் பிரவேசிக்கிற மனிதனையும் பிடித்துக்கொள்ளும். அவளுக்குள்ளிருக்கிற சாபங்கள், அந்த மனிதனுக்குள்ளும் வந்துவிடும். அப்பொழுது அவன், பரிதபிக்கக்கூடிய ஒருவனாய் மாறிவிடுவான்.

தேவபிள்ளைகளாகிய உங்களுக்குள்ளே, பரிசுத்த ஆவியானவர் வாசம்பண்ணு கிறார். உங்களுடைய சரீரம், ஆவியானவருடைய ஆலயமாயிருக்கிறது. வாசஸ்தலமாயிருக்கிறது. ஆவியானவர் தங்குகிற பரிசுத்த ஸ்தலமாயிருக்கிறது. ஆகவே, உங்களுடைய ஆத்துமாவைப் பாதுகாத்துக் கொண்டு, பரிசுத்த ஆவியானவரோடு நிலைத்திருக்க வேண்டியது உங்களுடைய கடமை.

“உங்கள் சரீரங்கள், கிறிஸ்துவின் அவயவங்கள் என்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை, வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படி செய்யலாகாதே. சரீரமோ வேசித்தனத்துக்கல்ல, கர்த்தருக்கே உரியது. கர்த்தரும் சரீரத்துக்குரியவர்” (1 கொரி. 6:15,13). “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும். வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுய சரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்” (1 கொரி. 6:18).

சிம்சோன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டிருந்தும், பெரிய நோக்கத்தோடு, பெலிஸ்தியரின் கைகளிலிருந்து இஸ்ரவேலை விடுவிக்கும்படி, உன்னத பெலனைப் பெற்றிருந்தும், அவரது சிந்தனையிலே வேசித்தன ஆவி புகுந்தது. ஒரு பக்கம், கர்த்தருக்காக அவன் செயல்பட்டாலும், மறுபக்கமோ வேசித்தன ஆவியினால் நடத்தப்பட்டு, ஒவ்வொரு வேசியின் பின்பாகவும் சென்றார். அந்தோ, வேசித்தன ஆவியினால், அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும், நஷ்டப்படுத்திக் கொண்டதால், தேவனுடைய மகிமை அவரை விட்டு எடுபட்டது. கண்கள் பிடுங்கப்பட்டு, பரிதாபமான நிலைமைக்கு வந்தார்.

நினைவிற்கு:- “ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” (வெளி. 2:5).