எகிப்தியருடைய ஆவி!

“எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும், அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப் பண்ணுவேன். அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும், சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள்” (ஏசா. 19:3).

முழு வேதாகமத்திலும், இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டுமே “எகிப்தியருடைய ஆவி” என்று எழுதப்பட்டிருக்கிறது. முழு சரித்திரத்தையும் படித்துப் பார்க்கும்போது, முதன்முதலிலே நாகரீகம், எகிப்திலிருந்துதான் தோன்றினது என்பதை அறியலாம். ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்து ஒரு வல்லரசு நாடாக, அன்றைக்கிருந்த பூர்வ உலகத்தை அரசாண்டு வந்தது. தலைமுறை தலைமுறையாக, அங்கே சக்கரவர்த்திகளான பார்வோன்கள் தோன்றினார்கள்.

இன்றைக்கும், எகிப்து தேசத்திற்கு நீங்கள் போவீர்களென்றால், பழங்காலத்திலுள்ள பிரமிடுகளைப் பார்த்து, பிரமிப்படைவீர்கள்! எவ்வளவோ உயரமாக விஞ்ஞான ரீதியின்படி, நான்கு முக்கோண வடிவத்திலே, கட்டப்பட்டவை அவைகள். பூமிக்கு மேலாக, அவைகள் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அதே போல பூமிக்கு கீழே அவ்வளவு ஆழமாயிருக்கிறது. அதிலுள்ள சில கற்கள், பத்து டன்னுக்கும் மேலான எடையுள்ளது. இப்படிப்பட்ட மகா பளுவுள்ள கற்களை, எப்படி அவ்வளவு உயரத்தில், அவ்வளவு பெரிய கற்களை ஏற்றினார்கள்? எப்படி விஞ்ஞான இரகசியங்களை அறிந்திருந்தார்கள் என்பது, மிகவும் ஆச்சரியம்!

ஆனால் அந்த எகிப்தியர், கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்காமல், பலவகை பிசாசுகள் மேல், நம்பிக்கை வைத்தார்கள். எகிப்தியருக்கு பத்துவிதமான தெய்வங் களிருந்தன. பார்வோன் அரண்மனையிலே, ஏகப்பட்ட மந்திரவாதிகள் இருந்தார் கள். அவர்கள், தங்கள் ஆலோசனைக்காக, எப்பொழுதும் விக்கிரகங்களின் ஆவி களையும், குறி சொல்லுகிறவர்களையும் தேடுவார்கள் (ஏசா. 19:3).

எகிப்திலே, நானூற்று முப்பது வருடங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாய் இருந்தபோதிலும், எகிப்தியருடைய மார்க்கத்தையோ, விக்கிரக ஆராதனையையோ, மந்திர, தந்திரங்களையோ, அவர்கள் கற்றுக்கொள்ளவேயில்லை. அவர்கள், கர்த்தருக்காக வேறு பிரிக்கப்பட்ட ஜனங்களாயிருந்தார்கள். ஆகவே கர்த்தர், எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவிக்கும் முன்னால், எகிப்தியருடைய பத்து தெய்வங்களையும், பத்து வகையான வாதைகளினால் வாதித்தார். கர்த்தரே, முன் நின்று யுத்தம் செய்து, இஸ்ரவேலருக்கு வெற்றியைக் கொடுத்தார். அடிமைத்தன ஆவியை முறித்து, விடுதலையைக் கொடுத்தார். சேனைகளின் அதிபதியாய் இஸ்ரவேலரை எகிப்திலிருந்து கானானுக்குள் கொண்டுவந்தார்.

தேவபிள்ளைகளே, உலகத்தாரின் ஆவிகளையோ, எகிப்தின் ஆவிகளையோ, விக்கிரக ஆராதனையின் ஆவிகளையோ, உங்களுடைய வாழ்க்கையில் கொண்டு வராதிருங்கள். அந்த ஆவிகள், உங்களை அடிமைப்படுத்த விடாதிருங்கள். எகிப்தியர் விக்கிரக ஆராதனையைப் பின்பற்றினபடியால், தலைப்பிள்ளைகள் சங்காரமாக்கப்பட்டார்கள். மிருக ஜீவன்கள் மடிந்துபோயின.

எத்தனையோ நூற்றாண்டுகளானாலும் தாவீது அதை நினைத்து, “எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள். அவர் கிருபை என்றுமுள்ளது” (சங். 136:10) என்று பாடினார். எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட அடிமைப் பெண்ணாகிய ஆகாரையும், அவளுடைய குமாரனையும் புறம்பே தள்ளுங்கள். அப்பொழுது சுயாதீன விடுதலை உங்களுக்குக் கிடைக்கும்.

நினைவிற்கு:- “உங்களை எகிப்தியரின் கைக்கும், பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” (யாத். 18:10).