முறிந்த ஆவி!

“மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம். முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” (நீதி. 17:22).

இந்த மாதம் முழுவதும், பல வகையான ஆவிகளைக் குறித்தும், ஆவிகளின் செயல்பாடுகளைக் குறித்தும், அவைகளை எப்படி ஜெயங்கொள்வது என்பதைக் குறித்தும், தியானித்து வருகிறோம். இங்கே சாலொமோன், “முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்” என்று குறிப்பிடுகிறார். இதன் மாற்று மருந்து, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிற, மன மகிழ்ச்சியின் ஆவியாகும். தேவபிள்ளைகளே, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமா யிருங்கள் சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (பிலி. 4:4). “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (நெகேமி. 8:10).

மனம் முறிவடைந்த ஒரு செல்வந்தரை, கனடா தேசத்திலே, நான் சந்தித்தேன். அவர், “ஜெபம் பண்ணி என்ன பிரயோஜனம்?” என்று சொல்லி, பெருமூச்சு விட்டார். பிறகு அவர், “ஐயா, சமீபத்தில் என் குடும்பத்தில், ஒரு பெரிய கார் விபத்து நேர்ந்தது. என் மனைவி அதில் மரித்தாள். என்னுடைய ஒரே மகன், இருபது வயது பையன். யூனிவர்சிட்டியில் படித்துக்கொண்டிருந்தவன். அவனும் அந்த விபத்திலே, முகம் சிதைந்து மரித்தான். இந்த பெரிய உலகத்தில், வேறு எனக்கு ஒருவருமில்லை. முறிந்த ஆவியோடுகூட, நடைப்பிணமாய் உலாவிக்கொண்டிருக்கிறேன். நான் மரிப்பதுதான் எனக்கு நல்லது” என்று சொன்னார்.

அவருடைய வார்த்தையை நான் சிந்தித்தேன். அவருடைய இழப்புகளினால், மனமும், உள்ளமும் முறிந்துபோயிருக்கிறது. அவருடைய பார்வையிலே, எல்லாவற்றையும் இழந்துபோனதாக இருந்தாலும், கிறிஸ்துவையும், அவருடைய அன்பையும், ஐக்கியத்தையும் இழந்து போகவில்லை. “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை” என்ற, கர்த்தருடைய பிரசன்னத்தையும் இழந்துபோகவில்லை. நிச்சயமாகவே அவர், தன்னுடைய நித்தியத்தையும், பரலோக ராஜ்யத்தையும் இழந்துபோகவில்லை. கர்த்தருக்காக, ஏதாகிலும் ஒரு ஊழியத்தில் ஈடுபட்டு, உற்சாகத்தோடு செய்யும்போது, கவலைகளை மறந்து, புதுவாழ்வு வாழலாம்.

மரம் முறிந்ததென்றால் பரவாயில்லை. வேலை முறிந்ததென்றால் பரவாயில்லை. புதிய வேலை தேடலாம். அன்பின் ஐக்கியம் முறிந்ததென்றால், உள்ளம் தடுமாறும். எல்லாவற்றுக்கும் மேலாக, கர்த்தரோடுள்ள உறவு முறியாமல், பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அன்னாளுக்குப் பிள்ளையில்லாததினால், மனம் மடிந்தவளாக, ஆவி முறிந்த வளாகக் காணப்பட்டாள். அவளுடைய சக்களத்தி, நாள்தோறும் புண்படப் பேசினாலும், அதைப் பொறுத்துக்கொண்டு, தேவாலயத்திற்கு வந்தாள். தன் உள்ளத்தின் மன முறிவை நீக்குகிற கர்த்தரிடம், அழுது விண்ணப்பித்தாள். கர்த்தர் ஆசீர்வாதமான சாமுவேலைக் கட்டளையிட்டார். அதை எண்ணி, கர்த்தரைத் துதிக்கும்போது, அன்னாள் சொன்னாள், “பலவான்களின் வில் முறிந்தது. தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள்” (1 சாமு. 2:4).

தேவபிள்ளைகளே, என்ன மனமடிவிருந்தாலும், இயேசுவை நோக்கிப்பாருங்கள். ஏதாவது ஒரு வழியில் உங்களுடைய துக்கத்தை மாற்றுவார். உங்களுடைய கண்ணீரை ஆனந்தக் களிப்பாக்குவார். இன்றைக்கு மலைபோலுள்ள பிரச்சனைகள், முள் போல உங்களுடைய உள்ளத்தை பிளந்துகொண்டிருக்கிற போராட்டங்கள், யாவற்றையும் மாற்றியருளுவார்.

நினைவிற்கு:- “மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும். முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?” (நீதி. 18:14).