அடிமைத்தனத்தின் ஆவி!

“அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்” (ரோம. 8:15).

சில ஆவிகள், தேவபிள்ளைகளை தலையெடுக்கவிடாமல், கழுத்திலே, ஒரு நுகத்தடி போல அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. வானில் கெம்பீரமாய் பறக்கக் கூடிய ஒரு கழுகை, பெரிய கூண்டிலே அடைத்து வைத்திருந்தால், நாம் அந்த கழுகுக்காக எவ்வளவோ பரிதாபப்படுவோம்! ஏதோ ஒன்றை விரும்பி வந்த கழுகு, கண்ணியிலே சிக்கி, பிறகு, இந்த கம்பிகளுக்குள் இப்படி சிறையாக வைக்கப்பட்டிருக்கிறதே என்று வருந்துகிறோம்.

இதுபோலத்தான், சாத்தான் அநேகரை அடிமையாக்கி வைத்திருக்கிறான். முற் பிதாவாகிய யாக்கோபு, ராகேலின் அழகைப் பார்த்த மாத்திரத்தில், அந்த அழகை அனுபவிப்பதற்காக, எந்த அடிமை வேலையையும் செய்ய ஆயத்தமாகிவிட்டார். தானாக, தன்னுடைய கழுத்தை அடிமைத்தன நுகத்துக்குள் உட்படுத்தி, “ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன்” என்றான். லாபான் அதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி, ராகேலை கொடுத்தான். லேயாளையும் கொடுத் தான். தன் மந்தைகளை மேய்க்கும்படி கொடுத்தான். மொத்தத்தில் 20 வருடங்கள், யாக்கோபு, லாபானின் அமைத்தனத்திலே சிக்கிக்கொண்டார்.

சிலர், இப்படி கொஞ்சம் குடித்தால் என்ன, நண்பர்களோடு மகிழ்ந்திருந்தால் என்ன என்று, மற்றவர்களைப் பிரியப்படுத்தும்படி, அவர்களோடு சேர்ந்து மதுபானம் அருந்துகிறார்கள். ஆனால், அந்த மதுபானத்திற்குப் பின்னால், ஒரு ஆவி நின்று, அவர்களைப் பிடித்து அடிமையாக்குகிறது என்பதை, அறிவதில்லை. புகைப் பிடிப்பதானாலும்சரி, மதுபானம் அருந்துவதானாலும்சரி, வேசிகளிடம் செல்வதானாலும்சரி, அல்லது வேறு எந்த தீய பழக்க வழக்கமானாலும்சரி, ஒரு அடிமைத்தனஆவி அங்கே அடிமைப்படுத்தக் காத்துக்கொண்டேயிருக்கிறது. வேதம் சொல்லுகிறது, “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக் கிறான். அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்” (யோவா. 8:34,35).

சின்ன பாவம் தானே; கொஞ்சம் சிற்றின்பத்தை அனுபவிக்கலாம் என்று எண்ணும்போது, தொடர்ந்து அதை செய்யும்படி, உள்ளம் தூண்டுகிறது. பாவம், பின்பு பழக்கமாகிறது. ஒவ்வொரு பாவ பழக்கத்துக்குப் பின்னாலும், சாத்தான் நின்று, அவனை அந்தப் பாவ பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறான். இப்படி அநேகர் கஞ்சாவுக்கும், போதை பொருட்களுக்கும், அடிமையாகிவிடுகிறார்கள்.

எங்கள் வீட்டினருகே ஒருவர், குதிரை ரேசிலே பைத்தியமாய் இருப்பார். அவ்வப்போது, சில குதிரைகள் ஜெயிக்கும். கொஞ்சம் பணம் கிடைக்கும். அப்படியே, சாத்தான் அவரை ஆசைகாட்டி, மோசம் போக்கினான். இதனால், அவர் தன் வேலையை இழந்தார். சம்பாத்தியத்தை இழந்தார். வீட்டையும் இழந்து, பிள்ளைகளோடு நடுத்தெருவிலே நின்றார். அடிமைத்தனம், வேதனையானது!

எகிப்திலே தானியம் கிடைக்கிறது என்று ஆசைப்பட்ட யாக்கோபின் குடும்பத் தினர், எகிப்துக்கு வந்தார்கள். யோசேப்பு, பிரதம மந்திரியாயிருக்கிறவரையிலும், மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு, கானானுக்குத் திரும்பிச் செல்ல அவர்கள் பிரியப்பட்டதினால், நானூறு வருடங்கள் எகிப்தின் அடிமைத் தனத்திலே தவிக்க வேண்டியதாயிற்று

நினைவிற்கு:- “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே” (யாத். 20:2).