அசுத்த ஆவி!

“அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்” (மத். 10:1).

பரிசுத்த ஆவியானவர், நமக்கு கிருபையாய் கொடுக்கப்படுகிறார். “பரிசுத்த ஆவி” என்றால், “பரலோகத்திலுள்ள பரிசுத்தத்தை நமக்குள்ளே கொண்டு வருகிறவர்” என்று அர்த்தம். பரிசுத்த ஆவிக்கு விரோதமானது, அசுத்த ஆவி. அது சாத்தானிடமிருந்து, சகல அசுத்தத்தையும், மனிதருக்குள் கொண்டு வருகிறது. சாத்தான் மனித சிந்தையிலே அசுத்தத்தை விதைக்கிறான்.

நான், பாளையங்கோட்டையிலுள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு வல்லமையான பிரசங்கியார், ஆயிரமாயிரமாய்ப் பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டேன். அவைகள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு, அலறியடித்து ஓடின. “இயேசு கிறிஸ்து மாறாதவரே, மாறாதவரே, மாறாதவரே” என்று பாடும்போது, தேவ வல்லமை அவர் மேலே இறங்கி, பிசாசுகளைத் துரத்தினதைக் கண்டேன். நானும் அப்படிப்பட்ட ஆவிகளைத் துரத்த வேண்டுமென்ற ஆவல், எனக்குள் வந்தது.

நான் வருமான வரி இலாகாவிலே பணியாற்றிய போது, அங்கே ஒரு வாலிபன் அசுத்த ஆவியினால் பீடிக்கப்பட்டிருக்கிறதைக் கண்டேன். பற்களை நரநரவென்று கடிப்பான். கண்கள் பயங்கரமாய் பிதுங்கும். நாவு வெளியே வந்துவிடும். அப்போதுதான், நான் இரட்சிக்கப்பட்டிருந்தேன். கர்த்தருடைய வைராக்கியத்தினாலும், தேவ அன்பினாலும் நிரம்பி, “அசுத்த ஆவியே, வெளியே வா” என்று சொன்னேன். அந்த ஆவிகள் மிகுந்த கோபம் கொண்டு, என்னை கராத்தே அடி அடிக்க, முன் வந்துவிட்டன. நான் பயந்துவிட்டேன்.

ஆகவே, அன்று மாலை ஒரு தேவனுடைய ஊழியக்காரரிடம் சென்று, அசுத்த ஆவிகளைத் துரத்துவது எப்படி? என்று கேட்டேன். அவர் வேதத்திலுள்ள அநேக வாக்குத்தத்தங்களை எனக்கு எடுத்து சொன்னார். “என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்” (மாற். 16:17). “சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும், வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய்” (சங். 91:13). “சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமைகளையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது” (லூக். 10:19). இரவெல்லாம் அதன் மேல் கைகளை வைத்து அந்த வசனத்திலுள்ள வல்லமையும், அதிகாரமும் என்மேல் இறங்கிவரும்படி ஜெபித்தேன். மறுநாள் அந்த அசுத்த ஆவியைத் துரத்துவது, எனக்கு மிகவும் எளிதாயிருந்தது.

நீங்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிக்கப்பட்டவர்களானால், உங்களாலும் அசுத்த ஆவிகளைத் துரத்த முடியும். கர்த்தர் உங்களை அக்கினி அபிஷேகத்தால் நிரம்பும்போது, மந்திரவாதிகளையும் சவால் விட முடியும். இயேசு துரத்தின ஒரு பயங்கரமான அசுத்த ஆவி, “லேகியோனின் ஆவியாகும்.” ஆறாயிரம் பிசாசுகள் ஒரு மனிதனுக்குள் குடியிருந்தது என்றால், அவன் நிலைமை எவ்வளவு பரிதாபமாயிருந்திருக்கும். தேவபிள்ளைகளே, அசுத்த ஆவி பிடித்தவர்களை இயேசுவின் நாமத்திலே உறுதியாய்க் கட்டளையிட்டு துரத்துங்கள். அப்படிப்பட்டவர்களை விடுதலையாக்குங்கள். விடுதலையாக்கின பின்பு, கர்த்தரண்டை வழிநடத்திவிடுங்கள்.

நினைவிற்கு:- “சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும், அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும், எருசலேமுக்குக் கொண்டு வந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்” (அப். 5:16).