கனநித்திரையின் ஆவி!

“கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார்” (ஏசா. 29:10).

“நித்திரை” கர்த்தர் ஏற்படுத்தியது. நாள் முழுவதும் கடின உழைப்புக்குப் பின்பாக, இரவிலே நித்திரை செய்து இளைப்பாறி, மறுநாளிலே புத்துணர்ச்சியோடு எழுந்திருக்க வேண்டும் என்று அவர் பிரியப்பட்டார். ஆகவே, இரவிலே சூரியனை அஸ்தமிக்கச் செய்து, இரவை குளிர்ந்த நிலைமைக்குக் கொண்டு வந்தார். சிறிய சுடர்களான சந்திரனையும், நட்சத்திரங்களையும், வானில் பரப்பி வைத்தார்.

தாவீது சொல்லுகிறார், “நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக் கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்” (சங். 3:5). “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு, நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்” (சங். 4:8).

மட்டுமல்ல, தேவ தாசர்களுக்கு அந்த ஓய்வு நேரத்திலே சொப்பனங்களையும், தரிசனங்களையும் கொடுத்து, அவர்களோடே பேசுகிறார். “தமக்குப் பிரியமான வனுக்கு நித்திரை அளிக்கிறார்” (சங். 127:2).

ஆனால் சாத்தான், கன நித்திரையைக் கொண்டு வருகிறான். சுகபோகமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறான். இன்னும் கொஞ்சம் கை முடக்கிக்கொண்டு படுக்கட்டும். இன்னும் கொஞ்சம் நித்திரை செய்யட்டும் என்று தாலாட்டுகிறான். இதன் மூலமாய் தேவ ஜனங்களை சோம்பேறிகளாக்குகிறான். இயற்கையாய் ஓய்வு எடுப்பது நல்லது. ஆனால் கன நித்திரையின் ஆவிக்கு இடங்கொடுப்பது, பல பிரச்சனைக்குள் வழி நடத்திவிடும்.

நான் கர்நாடகா மாநிலத்திலுள்ள, ஒரு குறிப்பிட்ட பட்டணத்தில், பிரசங்கம் பண்ணப்போனேன். எவ்வளவோ ஆவியிலே நிரம்பி, வல்லமையாய் பிரசங்கித் தாலும்கூட, அங்குள்ள ஜனங்கள் தூங்கி விழுந்தார்கள். அவர்கள் ஏதோ, ஒரு மயக்கத்தினால் பீடிக்கப்பட்டதுபோல இருந்தது. பாடுகிற குழுவினர் “உறக்கம் தெளிவோம், உற்சாகம் கொள்வோம், உலகத்தின் இறுதிவரை” என்ற பாடலைத் திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த விசுவாசிகள் ஆலயத்திலிருந்தாலும், அவர்கள் உணர்வுள்ளவர்களாயிருக்க வில்லை. சாத்தான் அவர்களுடைய கண்களையும், காதுகளையும் மூடி, கவனிக்க விடாமல் செய்கிறான் என்பதை நான் உணர்ந்தேன். அந்த ஆலயம் மட்டுமல்ல, அந்த பட்டணமும்கூட, கன நித்திரையின் ஆவியினால் பீடிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆலய கூட்டம் முடிந்து, ஒரு வீட்டுக்கு சாப்பிட வந்தேன். அந்த வீட்டிலுள்ள வர்கள், ஒரு சிறுவனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டு வந்து, “இவனுக்காக ஜெபியுங்கள். எப்பொழுதும் தூங்கி வழிந்துகொண்டேயிருக்கிறான். சுறுசுறுப்பாய் இல்லை” என்று சொன்னார்கள். அவனை பார்க்கப் பரிதாபமாயிருந்தது.

தேவபிள்ளைகளே, இப்படிப்பட்ட ஆவிகளுக்கு எதிர்த்து நில்லுங்கள். நீங்கள் பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது, அவன் நிச்சயமாய் உங்களை விட்டு ஓடிப்போவான். இந்த கன நித்திரையின் ஆவியினால் குடும்பத்தில் தரித்திரமும், பற்றாக்குறையும் ஏற்படும். அதிகாலையில் எழும்பி, கர்த்தரைத் தேடும்போதுதான் வீடு முழுவதும் தேவ பிரசன்னத்தாலும், தேவ மகிமையாலும் நிரம்பியிருக்கும். விழிப்புள்ள ஜீவியத்தைக் கர்த்தரிடத்தில் கேளுங்கள்.

நினைவிற்கு:- “நான் நித்திரை பண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்” (உன். 5:2).