பாபிலோனி ஆவிகள்!

“ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும் இச்சித்து எடுத்துக்கொண்டேன்” (யோசு. 7:21).

“பாபிலோனிய ஆவிகள்” என்றால், “குழப்பம், தாறுமாறு, இச்சித்து தூண்டி விடுதல்” என்பதெல்லாம் அர்த்தமாகும். “பாபிலோன்” என்ற வார்த்தை, “பாபேல்” என்ற வார்த்தையிலிருந்து, வந்ததாகும். வேதம் சொல்லுகிறது, “பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர், அவ்விடத்தில் தாறுமாறாக்கின படியால், அதின் பேர் “பாபேல்” என்னப்பட்டது. கர்த்தர் அவர்களை, அவ்விடத் திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்” (ஆதி. 11:9).

முதலில், “பாபேல்” என்று வழங்கினது, யோசுவாவின் காலத்தில், பாபிலோன் என்று வழங்கப்பட்டது. நேபுகாத்நேச்சார், பாக்தாத்தைத் தன்னுடைய தலைநகர மாக்கி, பிரசித்திப் பெற்றதாக்கினார். நம்முடைய காலத்தில், சதாம்உசேன், அதே பாபிலோன் தேசத்தை எடுத்து, கட்டுவிப்பேன். நான் “நேபுகாத்நேச்சாரின் சந்ததி” என்று, முழங்கினார். இன்றைக்கும் பாபிலோன் தேசம், “ஈராக்” என்று அழைக்கப்படுகிறது. அதன் தலைநகரம், “பாக்தாத்” பட்டணமாகும்.

வேதம் முழுவதையும், நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், இங்கே இரண்டு பட்டணங்கள் முக்கியமானதாயிருக்கும். ஒன்று, இஸ்ரவேல் தேசத்திலுள்ள “எருசலேம்” நகரம். அதற்கு “சமாதானத்தின் நகரம்” என்று அர்த்தம். அடுத்தது, பாபிலோன் தேசத்திலுள்ள, “பாக்தாத்” என்ற பட்டணம். அதற்கு, “குழப்பம், தாறுமாறு” என்று அர்த்தம்.

இரண்டு பட்டணங்களுக்குமிடையே, உள்ளூர ஒரு போர், அல்லது போராட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கிறதைக் காணலாம். பல முறை, எருசலேம், பாபிலோனை வென்றது. சில முறை, பாபிலோன், எருசலேமை வென்றதினாலே, இஸ்ரவேலரை எழுபது வருடங்கள் அடிமைப்படுத்தி, சிறையிருப்பிலே வைத்திருந்தது, ஒவ்வொரு விசுவாசிகளுக்குள்ளும், எருசலேமுக்கும், பாபிலோனுக்கும் உள்ளூர, ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது.

சாத்தான், பாபிலோன் பக்கம் நின்று, தேவ ஜனங்களுக்குள் குழப்பத்தையும், தாறுமாறுகளின் ஆவியையும் புகுத்துகிறான். ஆனால் கர்த்தரோ, எருசலேம் பட்சமாய் நின்று, அமைதியையும், தேவ சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கொண்டு வருகிறார். நீங்கள், எப்பொழுதும் எருசலேம் பட்சமாக, அதாவது கர்த்தரோடு இருப்பீர்களென்றால், எல்லாப் புத்திக்கும் மேலான, தேவ சமாதானம், உங்களுடைய உள்ளத்திலே நிலவும்.

இன்றைக்கு, அநேக வீடுகளில் குழப்பங்களும், தாறுமாறுகளும் இருக்கின்றன. வீட்டை ஒழுங்காக, சுத்தமாக, அழகாக வைக்கமாட்டார்கள். பிள்ளைகளும், ஒழுங்கை மீறி, காலையிலே எழும்ப மாட்டார்கள். பல் விளக்க மாட்டார்கள். மனம்போன போக்கிலே, தாறுமாறாய் நடப்பார்கள். இன்றைக்கு “ஹிப்பி” என்ற இயக்கம், உலகமெங்கும் மீண்டும் எழும்பி இருக்கிறது. “சட்ட திட்டங்களுக்கு, நாங்கள் கீழ்ப்படியமாட்டோம். மனம்போல வாழுவோம்” என்கிறார்கள். இந்த பாபிலோனிய ஆவிகளுக்கு நீங்கள் விடுபட்டு, கர்த்தரண்டை வாருங்கள். “நானும், என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” என்று பொருத்தனைப் பண்ணுங்கள். “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (அப். 16:31).

நினைவிற்கு:- “இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்” (ஏசா. 8:18).