பொல்லாத ஆவி!

” *கர்த்தருடைய ஆவி, சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது” (1 சாமு. 16:14).*

*கர்த்தருடைய ஆவியானவர், இனிமையானவர். சமாதானத்தையும், சந்தோஷத் தையும் கொண்டு வருகிறவர். கர்த்தர் மனுக்குலத்திற்குக் கொடுத்த எல்லா பாக்கியங்களிலும் பெரிய பாக்கியம், பரிசுத்த ஆவியானவர். ஆனால், அவருக்குக் கீழ்ப்படியாமல், அவர் சொன்னதை நிறைவேற்றாமல், ராஜாவாகிய சவுல் முரட்டாட்டம் பண்ணினபோது, முடிவில் கர்த்தர் தாமே தமது ஆவியை, சவுலை விட்டு நீங்கச் செய்தார்.*

*மட்டுமல்ல, கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி, அவனைக் கலங்கப் பண்ணிக் கொண்டிருந்தது. அந்த ஆவி சவுலைப் பிடிக்க, கர்த்தர் அனுமதி யளித்து விட்டார். அது முதலில் சவுலைக் கலங்கப்பண்ணிற்று. இனம் புரியாத ஒரு கலக்கம். என்ன நடக்குமோ? என்கிற கலக்கம். எதிர்காலத்தைக்குறித்த ஒரு கலக்கம்.*

*பழைய ஏற்பாட்டில், அசுத்த ஆவிகளையோ, பொல்லாத ஆவிகளையோ, துரத்தினதாக, வாசிக்கவே முடியாது. பலத்த அற்புதங்களை செய்த மோசே, ஒரு அசுத்த ஆவியைக்கூடத் துரத்தினதில்லை. வல்லமையாய் எழுந்து பிரகாசித்த எலியாவாகட்டும், எலிசாவாகட்டும், ஒரு பிசாசையும் துரத்தினதில்லை. மாபெரும் தீர்க்கதரிசிகளாய் விளங்கின ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் ஆகிய தீர்க்கதரிசிகள்கூட, ஒரு பிசாசையும் துரத்தினதில்லை.*

*முதன் முதல், பொல்லாத ஆவிகளைத் துரத்தினவர், இயேசு கிறிஸ்து. அவர் நோய்களையும் கொடிய வியாதிகளையும், பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகம் குருடருக்குப் பார்வையளித்தார் (லூக். 7:21). மட்டுமல்ல, அசுத்த ஆவிகளைத் துரத்துகிற வல்லமையையும், அதிகாரத்தையும் தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்தார் (லூக். 10:19;மத். 10:1).*

*சவுலுக்குப் பொல்லாத ஆவி பிடித்தபோது, அவருடைய ஆலோசகர்கள் என்ன சொன்னார்கள்? “சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர், உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்கு கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி, உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால், உமக்குச் சவுக்கிய முண்டாகும் என்றார்கள்” (1 சாமு. 16:16).*

*பழைய ஏற்பாட்டில், அசுத்த ஆவிகளைத் துரத்த வேண்டுமென்றால், தேவ பிரசன்னம் அங்கே இறங்க வேண்டும். தேவ பிரசன்னம் இறங்க வேண்டுமென்றால், சுரமண்டலம் வாசிக்கிற ஒருவன் கர்த்தரைப் பாடித்துதித்து, மகிமைப்படுத்தி ஆராதனை செய்ய வேண்டும். அப்பொழுது சவுக்கியம் உண்டாகும்.*

*தேவபிள்ளைகளே, பொல்லாத ஆவிகளைத் துரத்துகிற அதிகாரத்தைக் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். இதன்மூலம் நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் விசுவாசிகளையும் பாதுகாக்க முடியும். அப். பவுலைக்குறித்து, நாம் என்ன வாசிக்கிறோம். “அவனுடைய சரீரத்திலிருந்த உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல், போட வியாதிகள் அவர்களை விட்டு நீங்கி, பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன” (அப். 19:12). நீங்களும் இயேசுவின் நாமத்தில், பிசாசுகளைத் துரத்துங்கள் (மாற்கு 16:17).*

நினைவிற்கு:- ” *இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங் களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” (எபேசி. 6:12).*