வஞ்சிக்கிற ஆவி!

“சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும், பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்” (1 தீமோத். 4:1).

கடைசி நாட்களில், தேவனுடைய பிள்ளைகளை ஏமாற்றி வஞ்சிக்க, சாத்தான் வஞ்சக ஆவிகளை அதிகமாய் அனுப்புவான் என்று அப். பவுல் சபைகளை எச்சரிக்கிறார். “உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப் பட்டுப்போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும், நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்” (எபி. 3:13). “அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாத படிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர் களாயும் இருங்கள்” (யாக். 1:22).

சமீபத்தில் பெங்களூர் பட்டணத்திலே, ஒரு போதகரின் மனைவி, கண்ணீரோடு என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். “ஐயா, என் கணவர் நன்றாக ஊழியம் செய்து கொண்டிருந்தார். திடீரென்று, சாத்தான் எப்படி வஞ்சித்தானோ தெரியவில்லை.

எப்படியும் வாழலாம். கர்த்தருடைய கிருபையை சார்ந்து கொண்டால் போதும். அந்த கிருபை, கடந்த காலத்து பாவத்தையும் மன்னிக்கும். இனி செய்யப்போகிற பாவங்களையும் மன்னிக்கும். மதுபானம் குடிப்பது தவறல்ல. மற்ற பெண்களோடு ஐக்கியமாயிருப்பதும் தவறல்ல,” என்றெல்லாம் பேசி, சூப்பர் கிரேஸ், ஹைபர் கிரேஸ் என்று, நவீன உபதேசங்களைக் கொண்டு வந்துவிட்டார். சபை விசுவாசிகளுக்குள்ளே, ஒரே குழப்பம். அதிகமானபேர், சபையை விட்டு போய்விட்டார்கள்” என்று சொன்னார்கள்.

“வஞ்சித்தல்” என்றால் என்ன? உண்மை போல வெளியே காட்டி, ஏமாற்றுவதாகும். உங்களுக்கு நல்லது செய்வதுபோல, வெளித்தோற்றத்திலே காண்பித்து, உள்ளத்திலே தீமைசெய்வதாகும். முதன்முதல் ஏவாள் சொன்னாள், “சர்ப்பம் என்னை வஞ்சித்தது. நான் புசித்தேன்” என்றாள் (ஆதி. 3:13). கர்த்தர், “புசியாதே புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று, நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தைக் குறித்து எச்சரித்திருந்தார்.

ஆனால் சாத்தானோ, “இல்லை, நீங்கள் சாவதில்லை. இந்தப் பழத்தை புசித்தால், உங்களுடைய கண்கள் திறப்பட்டு விடும். நீங்கள் தேவர்களைப்போல் மாறிவிடுவீர்கள்” என்று, ஆசைக்காட்டினான். அந்த வஞ்சக ஆவியை நம்பின படியினால், ஆதாமும், ஏவாளும் தேவனை விட்டுப் பிரிந்தார்கள். ஏதேன் தோட்டத்தை விட்டு, வெளியேத் துரத்தப்பட்டார்கள்.

வஞ்சக ஆவி எப்படியிருக்கும்? “ஆடு நனைகிறதே என்று, ஓநாய் கவலைப் பட்டதாம். முதலை கண்ணீர் வடித்ததாம்.” அவைகளின் உள்நோக்கம் ஆடுகளுக்காய் பரிதபிப்பது அல்ல, ஆட்டை உணவாகக்கொள்வதேயாகும். சிலருக்குள், இந்த வஞ்சக ஆவி இருக்கிறபடியால், அளவுக்கு மீறி உங்களைப் புகழ்வார்கள். முக ஸ்துதி செய்வார்கள். உங்களுக்காகப் பாடுபடுகிறதுபோலவும், உங்களுக்காகவே உயிர் வாழுகிறது போலவும் நடிப்பார்கள். அதுவே வஞ்சகம்.

யாக்கோபு, முதல்முறை தன் வீட்டுக்கு வந்தபோது, லாபான், எவ்வளவாய் யாக்கோபைப் புகழ்ந்தான் என்று பாருங்கள். ராகேலை கட்டித் தருகிறேன் என்று, லேயாளைக் கட்டிக்கொடுத்தான். தன் ஆடுகளை மேய்க்கும்படி சொல்லி, யாக்கோபை அடிமையாக்கி விட்டான். தேவபிள்ளைகளே, வஞ்சக கண்ணிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

நினைவிற்கு:- “மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கை பண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமா யிருக்கிறான்” (2 யோவா. 1:7).