குற்றஞ்சுமத்தும்ஆவி!

“நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு, அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்” (வெளி. 12:10).

சாத்தான் கொண்டு வருகிற ஒரு பொல்லாத ஆவி, குற்றஞ்சுமத்துகிற ஆவியாகும். முதல் குறை, அது விழுந்துபோன மனிதனாகிய ஆதாமிலே ஆரம்பித்தது. அவன் பாவம் செய்தபோது, அவனுக்குள் சாத்தான் இந்த ஆவியை வைத்துவிட்டான். ஆகவே, முதலாவது தன்னுடைய மனைவியைக் குறித்து, கர்த்தரிடம் குறை கூறினான். “என்னுடனே இருக்கும்படி, தேவரீர் எனக்குத் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன்” என்றான். அவனுடைய மனைவியாகிய ஏவாளும், கொஞ்சமும் சளைக்காமல், தன் பாவத்தை மறைத்துக்கொண்டு, சர்ப்பத்தைக் குறை கூறினாள். “சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன்,” என்றாள்.

பாவம் செய்வதற்கு முன்பாக, சாத்தானுக்கு இடங்கொடுப்பதற்கு முன்பாக, ஆதி பெற்றோர் சந்தோஷமாய்க் கர்த்தரைத் துதித்து, ஆராதித்து, அவரோடு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். கர்த்தரை மகிமைப்படுத்துகிற, அந்த உன்னத நிலையிலிருந்து அவர்கள் விழுந்தபோது, அவர்களுடைய ஆவிக்குரிய ஜீவியம் வேகமாய் சரிந்தது. ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகிற, இழிவான நிலைமைக்குள், இறங்கி வந்தார்கள்.

இன்றைக்கும் அந்த ஆவி, அநேக குடும்பங்களில் கிரியைச் செய்கிறது. மாமியார், மருமகளை குற்றஞ்சாட்டுகிறாள். மருமகள், மாமியாரை குற்றஞ்சாட்டுகிறாள். கணவனை மனைவியும், பிள்ளைகளைப் பெற்றோரும் குற்றஞ்சாட்டுகிறார்கள். காரணம், அந்தக் குடும்பத்தில் தெய்வீக அன்பில்லை. கர்த்தரைத் துதிக்கும் துதியில்லை. இதனால் குற்றஞ்சாட்டுகிற ஆவி, அவர்களைப் பிடித்திருக்கிறது.

இதனால் கசப்புணர்வும், கோபமும், வைராக்கியமும் குடும்பத்தில் வருகிறது. முடிவிலே சமாதானத்தை இழந்துபோகிறார்கள். தேவ பிரசன்னத்தை உணர முடிவதில்லை. குற்றஞ்சுமத்தும் ஆவி, ஒருமனப்பாட்டையும், அன்பின் ஐக்கியத்தையும் தகர்த்து விடுகிறது. முடிவிலே, அவர்கள் தாழ தள்ளப்பட்டுப் போன சாத்தானோடுகூட, பாதாளத்தில் வேதனையோடு இறங்குவார்கள். தேவபிள்ளைகளே, உங்கள் வாயிலே மற்றவர்களைக் குற்றஞ்சாட்டுகிற வார்த்தைகள் வந்துகொண்டிருக்கும்போது, அதை அப்படியே நிறுத்துங்கள். நீங்கள், ஆதி அன்பிலிருந்து விழுந்து விட்டீர்கள் என்று உணருங்கள். கண்ணீரோடு மனந்திரும்புங்கள். முடிந்தவரையிலும் நீங்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால், அல்லது தவறாய்ப் பேசியிருந்தால், அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு, ஒப்புரவாகி விடுங்கள். “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக, உங்கள் எரிச்சல் தணியக்கடவது. பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” (எபேசி. 4:26,27).

இவர்கள் கண்களில், மற்றவர்கள் செய்த நன்மைகள் தெரிவதில்லை. தீமை தான் தெரிகிறது. நல்லதைக் குறித்து பாராட்டாமல், கெட்டதைக் குறித்து குறை கூறி, குற்றஞ்சுமத்துகிறார்கள். முடிவிலே சாத்தான், அவர்களை ஆட்கொண்டு விடுகிறான். பிறகு குறைகூறுவதே, அவர்கள் வேலையாகி விடுகிறது. தேவபிள்ளைகளே, உங்களுடைய குடும்பத்திலே, யாராவது குற்றஞ்சுமத்துகிற ஆவியினால் பீடிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்காக உபவாசமிருந்து, ஜெபம்பண்ணி ஆதி அன்புக்குள் கொண்டு வாருங்கள்.

நினைவிற்கு:- “ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை” (ரோம. 2:1).