பெலவீனப்படுத்துகிற ஆவி!

“தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்” (2 தீமோத். 1:7).

தேவபிள்ளைகளுக்கு சரீரத்திலே மட்டுமல்ல, ஆவியிலும், ஆத்துமாவிலும்கூட பெலன் தேவை. பிரச்சனை வரும்போது, உங்கள் உள்ளான மனுஷனிலே பெலனிருந்தால் தான், அதை எதிர்த்து நிற்க முடியும். சாத்தான் பல சோதனைகளைக் கொண்டு வந்து, “பட்ட காலே படும். கெட்ட குடியே கெடும்” என்று கவிழ்க்க வரும்போது, ஆன்மீக பெலனிருந்தால்தான், அவனை எதிர்க்க முடியும்.

ஆகவே, கர்த்தர் என்ன செய்கிறார்? உன்னத பெலனாகிய அபிஷேகத்தை, உங்களுக்குள் கொண்டு வருகிறார் (லூக். 24:49). அவர் சொன்னார், “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது, நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்” (அப். 1:8).

ஒருமுறை, இயேசு கிறிஸ்து ஒரு ஆலயத்திற்குப் போயிருந்தார். அங்கே, எவ்வளவும் நிமிரக்கூடாத, ஒரு ஸ்திரீயைக் கண்டார். காரணம், பதினெட்டு வருஷமாய்ப் பெலவீனப்படுத்தும் ஒரு ஆவி அவள்மேல் இருந்தது. மனதுருக்கமுள்ள இயேசு, அவள்மேல் தமது கைகளை வைத்தவுடனே, அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள் (லூக். 13:11,13).

அவளுக்கிருந்த அந்தப் பிசாசின் ஆவியைக் குறித்து, அந்த சபையின் போதகரோ, பிரதான ஆசாரியனோ, பரிசேயரோ, சதுசேயரோ அறியவில்லை. ஏதோ, முதுகுத்தண்டில் ஒரு பிரச்சனை. எலும்பு டாக்டரிடம் கொண்டுபோனால், சரியாகிவிடும் என்று ஆறுதல்படுத்தியிருந்திருப்பார்கள். இந்த பெலவீனப்படுத்துகிற ஆவி, என்ன செய்தது? பூமியையேப் பார்த்துக்கொண்டு, உலக எண்ணங்களை சிந்தித்துக் கொண்டிருக்கும்படிச் செய்தது. நிமிர்ந்து சூரியனையோ, சந்திரனையோ, நட்சத்திரங்களையோ பார்க்க முடியவில்லை. பரலோகத்தை நோக்கிப் பார்க்க முடியவில்லை. இயேசுவின் கிருபை பொருந்தின முகத்தைப் பார்க்க முடியவில்லை.

இன்றைக்கு உங்களுக்கு விரோதமாய் நிற்கிற, பெலவீனப்படுத்தும் ஆவி என்ன? இயேசு கிறிஸ்துவினால், நிச்சயமாகவே உங்களுக்கு விடுதலையுண்டு. வேதம் சொல்லுகிறது, “குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36). “கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலையுமுண்டு” (2 கொரி. 3:17).

மட்டுமல்ல, உங்களுடைய பெலவீனத்தை நீக்கி, தெய்வீக பெலனை உங்களுக்குத் தரும்படி, இயேசு கிறிஸ்து எவ்வளவாய் சிலுவையிலே பாடுபட்டார்! கல்வாரிச் சிலுவையை இப்பொழுதே நோக்கிப் பாருங்கள். “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத். 8:17).

பெலவீனம் வரும்போதெல்லாம், கர்த்தர் தம்முடைய கிருபையை அதிகப்படுத்துகிறார். பெலவீனத்திலே தத்தளித்த அப்.பவுலைப் பார்த்து, ஆண்டவர் சொன்னார்: “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து, நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” (2 கொரி. 12:9). தேவபிள்ளைகளே, பெலவீனரை பெலவான்களாய் மாற்றும்படி, கர்த்தருடைய அபிஷேகம், இன்றைக்கு உங்கள்மேல் இறங்கி வருவதாக.

நினைவிற்கு:- “அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே, பலமுள்ளவனாயிருக்கிறேன்” (2 கொரி. 12:10).