மனச்சோர்பின் ஆவி!

“ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” (நீதி. 24:10).

“சோர்பு,” வல்லமையான எலியாவையும்கூட பிடித்தது. ஆகவே, அவர் சமாரியாவை விட்டு ஓடி, ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாக வேண்டுமென்று கூறி, “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும். நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவனல்ல” என்று சொன்னார்.

இந்த எலியா சாதாரணமானவரல்ல. மரித்தோரை உயிரோடு எழுப்பினவர். வானத்திலிருந்து அக்கினியை இறங்கப்பண்ணி, “கர்த்தரே தெய்வம்” என்று நிரூபித்தவர். பாகாலின், எண்ணூற்று ஐம்பது தீர்க்கதரிசிகளையும் ஒருவனாக வெட்டிச் சாய்த்தவர். “எலியா” என்றால், “கர்த்தர் என் பெலனானவர்” என்று அர்த்தம். அவர், எப்பொழுதும் பக்தி வைராக்கியத்திலே நிறைந்திருந்தார். அவரையும்கூட, இந்த சோர்பின் ஆவி பற்றிப் பிடித்தது.

சிலருக்கு, ஊழியத்தைக் குறித்த சோர்பு உண்டு. “பரிசுத்தமாய் வாழ்ந்து, நான் என்னத்தைக் கண்டேன்?” என்ற, சோர்பு. “எவ்வளவுதான் மனைவி, பிள்ளைகளுக் காக, இரவு பகலாக சம்பாத்தித்துக் கொட்டினாலும், என்னப் பிரயோஜனம்?” என்ற, சோர்பு வருகிறது. இதனால், உற்சாகத்தை இழந்து, நடைப்பிணம் போல வாழுகிறார்கள்.

தாவீது, பத்சேபாளிடத்தில் பிரவேசித்ததினிமித்தம், பாவம் வந்தது. சாபம் வந்தது. நாத்தான் தீர்க்கதரிசி, “நீ மரணத்துக்கு பாத்திரன்” என்று உணர்த்தினார். “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தைவிட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்” (சங். 51:10-12) என்று ஜெபித்தார்.

நீங்கள் சோர்பின் ஆவிக்கு இடங்கொடுத்தால், சுய பரிதாபம் வரும். கொஞ்சம் கொஞ்சமாக கர்த்தரைவிட்டு பின்வாங்கிப் போய்விடுவீர்கள். சோர்பின் ஆவியை கடிந்துகொள்ளுங்கள். ஞானி சொல்லுகிறார், “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே. அவர் கடிந்துகொள்ளும்போது, சோர்ந்து போகாதே” (நீதி. 3:11).

இன்றைக்கும் கர்த்தர் உங்கள்மேல் இரக்கம் பாராட்டுகிறார். உங்களுடைய சோர்பிலிருந்து தூக்கியெடுக்க விரும்புகிறார். “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர், இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள். வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ, புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும், இளைப்படையார்கள். நடந்தாலும், சோர்ந்துபோகார்கள்” (ஏசா. 40:29-31).

எலியாவின் சோர்பை மாற்றும்படி, கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினார். பரலோக உணவைக் கொடுத்தார். “நீ போகவேண்டிய தூரம், வெகுதூரம்” என்று, உற்சாகப்படுத்தினார். கர்த்தர் எப்பொழுதும், உங்களுடைய பட்சத்தில் நிற்கிறபடியினால், நீங்கள் சோர்ந்துபோக வேண்டியதில்லை. கர்த்தருக்காகப் பெரிய காரியங்களைச் செய்யும்படி, எழுந்திருங்கள்.

நினைவிற்கு:- “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரி. 4:16).