இச்சையின் ஆவி!

“ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள். அப்பொழுது மாம்ச இச்சையை நிறை வேற்றாதிருப்பீர்கள்” (கலா. 5:16).

சத்துருவாகிய சாத்தான் அனுப்புகிற எல்லா பயங்கரமான ஆவிகளிலே, மகா மோசமான ஆவி ஒன்று உண்டென்றால், அது இச்சையின் ஆவியாகும். அது சுயபுணர்ச்சிக்குள்ளும், விபச்சாரத்துக்குள்ளும், வேசித்தனத்துக்குள்ளும், ஒருவனை வழி நடத்துகிறது. மனுஷனுடைய சிந்தைக்குள்ளே இந்த இச்சைகள் புகுந்து, அவனை ஏவத் துவக்குகின்றன. இச்சைகளை நிறைவேற்ற, தெரு நாய்களைப்போல மனுஷன் செயல்படுகிறான். அது அவனை அடிமைப்படுத்தி, கர்த்தரை விட்டு தூரப்படுத்துகிறது.

இந்த இச்சைகளின் ஆவிகளினால், அநேக பெரிய மனிதர்கள், பலசாலிகள் விழுந்தார்கள். பரிசுத்த ஆவியின் பெலனால் நிரப்பப்பட்ட சிம்சோனை, அது விழப்பண்ணினது. ஞானத்தினால் நிறைந்திருந்த சாலொமோனை, அது அடிமைப் படுத்தினது. சிலரை யேசபேலின் ஆவிகள், விபச்சாரம் செய்யத் தூண்டுகின்றன.

ஆண்டவர் தியத்தீரா சபைக்கு, “தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள், என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும், அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்” (வெளி. 2:20) எச்சரித்து சொன்னார்.

இந்த ஆவிகளுக்கு நாம் தப்ப வேண்டுமென்றால், உங்களை கல்வாரிச் சிலுவையோடு இணைத்துக் கொள்ள வேண்டும். “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும், அதின் ஆசை இச்சைகளையும், சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலா. 5:24). இயேசு சிலுவையிலே அறையப்பட்ட இடம், “கபாலஸ்தலம்,” “கல்வாரி” என்றும், “மண்டையோட்டு மலை” என்றும் அழைக்கப்படுகிறது. இச்சையின் ஆவிகள் புகுந்து, கிரியை செய்கிற ஒரு இடம், தலையாகும். அங்கே யிருந்து, அவன் எண்ணங்களுக்குள் புகுந்து விடுகிறான்.

இன்றைக்கு கம்ப்யூட்டரின் மூலமாக, அநேக அசுத்தங்கள், இச்சைகள், நிர்வாணப்படங்கள் வாலிபரை மட்டுமல்ல, வயோதிபரையும் மயக்கி விடுகின்றன. தாக்கி விடுகின்றன. கம்ப்யூட்டரில் என்ற எழுத்துங்கள், பாம்பின் வடிவில் இருக்கின்றன. அதற்கு ”www” ”world wide web” என்று அர்த்தம்.

சாத்தானாகிய சிலந்தி, ஏமாளிகளைப் பிடிக்க வேண்டுமென்று, உலகளாவ விரித்திருக்கிற வலைதான் இது. கணவன், மனைவி, பிள்ளைகள் தூங்கின பிறகு, அநேகர் நிர்வாணப்படங்களைப் பார்க்க ஆவல் கொள்கிறார்கள். அதற்குள் இருக்கிற இச்சையின் ஆவிகள், இவர்கள் தலைக்குள் புகுந்துவிடுகின்றன. பிறகு, அதில் பழக்கப்பட்டு, அப்படிப்பட்ட அருவருப்பான படங்களைப் பார்க்காமல் இருக்கவே முடியாது, என்ற நிலைக்குள் தள்ளுகின்றன.

கடைசி நாட்கள், நெருங்க நெருங்க சாத்தான், “தனக்கு கொஞ்சகாலம் மாத்திரமே உண்டென்று அறிந்து,” இந்த இச்சையின் ஆவி, விபச்சாரத்தின் ஆவி, வேசித்தனத்தின் ஆவிகளைக் கட்டவிழத்துவிட்டிருக்கிறான். அப். பவுல், ஆலோசனையாக, “பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து, அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்க வேண்டும்” என்று எழுதுகிறார் (2 தீமோத். 2:26).

நினைவிற்கு:- “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும், விசுவாசத்தையும், அன்பையும், சமாதானத்தையும் அடையும்படி நாடு” (2 தீமோத். 2:22).