எரிச்சலின் ஆவி!

“அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?” (ஆதி. 4:6).

குடும்பத்தை பாழாக்கும் ஆவிகளிலே ஒரு ஆவி, எரிச்சலின் ஆவியாகும். சிலர் எதற்கெடுத்தாலும், எரிச்சல்படுவார்கள். முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்கும். பிறகு அந்த எரிச்சல், கோபமாய் மாறும். ஒருவர்மேலே காரணமில்லாமல் கோபப்படுவார்கள். சிலருக்கு, மற்றவர்களுடைய மேன்மையைக் கண்டு, பொறாமை வந்து, பின்பு எரிச்சல் ஏற்படும்.

ஒருமுறை, போதகர் பால்யாங்கி சோவின் சபை மூப்பர்கள், அவர் சொன்னபடி கீழ்ப்படியவில்லை. அவர்கள் வேறு ஒரு காரியத்தைச் செய்ததால், போதகருக்கு தாங்கொண்ணாத எரிச்சல் வந்தது. போகப் போக அந்த எரிச்சல் பெரியதாகி, சபை மேலும், விசுவாசிகள்மேலும், முடிவிலே கர்த்தர் பேரிலேயும் எரிச்சலுள்ளவரானார். “ஏன் எனக்கு இந்தப் பொல்லாத, முரட்டாட்டமுள்ள மூப்பர்களைத் தந்தீர்? ஒன்பது இலட்சம் விசுவாசிகளைக் கட்டி அழுவது, சாதாரணமான காரியமா?”

அந்த எரிச்சலோடு, அவர் தன் வீட்டுக்கு வந்தார். வீட்டிலே ஒன்றும் ஒழுங்காய் இல்லாமல், குப்பைக் கூளமாயிருக்கிறதைக் கண்டு, இன்னும் எரிச்சல்பட்டார். கணவன் வருவதற்குக் கூட எதிர்பார்த்துக்கொண்டிராமல், தூங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்ததும், இன்னும் எரிச்சல் வந்தது. “பெண்ணா இவள்? பேயாகத் தான் இருக்க வேண்டும். உலகத்திலேயே, அருவருப்பான பெண் இவள்தான்.” தூங்கிக்கொண்டிருந்த அவருடைய பிள்ளைகளைப் பார்த்தார். எரிச்சல் உண்டானது. “இவைகளெல்லாம் விரியன் பாம்புக் குட்டிகள். எனக்கு இப்படியுமா பிள்ளைகள் பிறக்க வேண்டும்?”

எரிச்சல் அதிகமாகிவிட, ஒரு ஜன்னல் ஓரம் நாற்காலியைப் போட்டு உட்கார்ந் தார். அப்பொழுது திடீரென்று அவருக்குள்ளிருந்து மென்மையாக, அமைதியாக, சாந்தமாக, அந்நிய பாஷை வர ஆரம்பித்தது. அந்த பாஷைகளை பேச, பேச எரிச்சல் அவரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் நீங்கினது. ஆண்டவர்மேல், தெய்வீக அன்பு வந்தது. சிரித்த முகத்தோடு, கர்த்தரைத் துதிக்க ஆரம்பித்தார். ஒருமணி நேரம் ஜெபித்தபின்பு, தேவ மகிமை அவரில் வந்தது.

இப்பொழுது மனைவியைப் பார்த்தவுடனே, சந்தோஷத்தோடு என் மனைவி தேவதூதனைப்போல இருக்கிறாள். கொள்ளை அழகு. பிள்ளைகளைப் பார்த்து சொன்னார்: ‘உலகத்திலே சிறந்த பிள்ளைகளைக் கர்த்தர் எனக்குத் தந்திருக்கிறார். ஞானத்திலும், அறிவிலும் என் பிள்ளைகளுக்கு ஒப்பானவர் ஒருவருமில்லை.’ அப்படி சொல்லும்போது, அவருக்குள் கிரியைச் செய்த, பொல்லாத எரிச்சலின் ஆவி, கறுத்த உருவமாய் ஜன்னலை அடித்துக்கொண்டு வெளியே ஓடி விட்டது.

இது, ஒரு பொல்லாத ஆவியின் கிரியை என்று அறியாமல், அநேகர் வீட்டுக்கு வரும்போதே எள்ளும், கொள்ளும் வெடிக்க வருவார்கள். சின்ன காரியத்துக்கும், அவர்களுக்கு கோபம் வந்துவிடும். வீட்டைவிட்டு, வெளியே போய்விடுவார்கள். சவுலின்மேலே ஒரு எரிச்சலின் ஆவி வந்தவுடனே, தாவீதை காய்மகாரமாய்ப் பார்த்து, கொலை செய்ய முயற்சித்தான்.

தேவபிள்ளைகளே, எரிச்சலின் ஆவியை எதிர்த்து நில்லுங்கள். உங்கள் குடும்பங்களில் அனுமதியாதேயுங்கள். தேவ அன்பினால் நிரப்பப்படுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்தட்டும்.

நினைவிற்கு:- “அவர்களை (இஸ்ரவேலரை) எவ்வளவு ஒடுக்கினார்களோ, அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்” (யாத். 1:12).