சோம்பலின் ஆவி!

“சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்” (நீதி. 19:15).

ஆவிக்குரிய ஜீவியத்தில், சோம்பல் மிகவும் ஆபத்தானது. வேதனையானதும்கூட! அது சத்துரு பயன்படுத்துகிற கொடிய ஆயுதங்களில் ஒன்று. இந்த சோம்பலின் ஆவி தாக்கும்போது, எந்த ஒரு காரியத்தையும் செய்ய உற்சாகமிருப்பதில்லை. சுறுசுறுப்பாய் தூங்கி எழுந்து, வேலைகளை கவனிக்க, இந்த ஆவி விடுவதேயில்லை.

அநேகர் இந்த ஆவியினால் தாக்கப்பட்டு, வாழ்க்கையில் ஒரு பற்றும், பிடிப்பும் இல்லாமல் நடைப்பிணம் போல வாழுகிறார்கள். சோம்பேறித்தனத்தால், கர்த்தர் கொடுத்த தாலந்துகளையும், ஆவியின் வரங்களையும்கூட இழந்துபோகிறார்கள். வேதம் கேட்கிறது, “சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?” (நீதி. 6:9).

“சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்” (நீதி. 6:6). “சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது” (நீதி. 13:4;12:27). தேவபிள்ளைகளே, எப்பொழுதும் சுறுசுறுப் பாயிருங்கள். உற்சாக ஆவியினால் நிரம்பியிருங்கள்.

மார்ட்டின் லூத்தர், சோம்பலைப் பற்றி சொன்ன, ஒரு கதை உண்டு. ஒரு முறை சாத்தான், ஒரு பெரிய மகா நாட்டை ஏற்படுத்தி, குட்டிச் சைத்தான்களையெல்லாம் ஒன்று கூட்டினான். கிறிஸ்தவர்களை அழிப்பதற்கு, அவர்கள் ஒவ்வொருவரும் பல வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் சொன்னார்கள். ஒரு பிசாசு சொன்னது, “கிறிஸ்தவர்களை அழிக்க, காட்டு மிருகங்களையும், துன்மார்க்க கொலையாளிகளை அனுப்பவேண்டும். நமது மார்க்க தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்” என்றான்.

அடுத்த குட்டிச் சைத்தான் எழும்பி, “இதுவரை இல்லாத அளவு இச்சைகளையும், விபச்சார வேசித்தன எண்ணங்களையும், ஊட்ட வேண்டும்.” இன்னொருவன் எழுந்து, “கன நித்திரையின் ஆவிகளினால், அவர்களைப் பீடிக்க வைத்து, தூங்க செய்ய வேண்டும்.” இப்படி இன்னும் எத்தனையோ ஆலோசனைகள் சொல்லியும், சாத்தான் அவைகளில் திருப்திபடவில்லை.

கடைசியில் ஒரு குட்டிப் பிசாசு எழுந்து, “நான் சோம்பலும், நிர்விசாரமுமுள்ள ஆவி. பிறகு, இரட்சிக்கப்பட்டுக்கொள்ளலாம். பிறகு, பக்தி மார்க்கத்திற்கு வரலாம். காலம் இருக்கிறது. இப்பொழுது வேண்டாம் என்று, கிறிஸ்தவர்களுடைய கட்சி சொன்னால், அவர்கள் கர்த்தரை விட்டு விட்டு, உலக உல்லாசத்தில் மூழ்கி விடுவார்கள்” என்றான். இந்த ஆலோசனையை எல்லோரும் கைதட்டி வர வேற்றார்கள்.

தேவபிள்ளைகளே, ஒருபோதும் சோம்பலாயிராதேயுங்கள். வேதம் வாசிக்க, ஜெபிக்க, ஊழியம் செய்ய துரிதப்படுங்கள். “அசதியாயிராமல், ஜாக்கிரதையாயிருங்கள். ஆவியிலே அனலாயிருங்கள்” (ரோம. 12:11).

அப். பவுல், தம்முடைய ஆவிக்குரிய குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு, ஒரு கூட்டம் விசுவாசிகளைக் குறித்து, எச்சரிக்கை செய்து எழுதுகிறார், “அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப் பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும், வீணலுவற்காரிகளாயும், தகாத காரியங் களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்” (1 தீமோத். 5:13).

நினைவிற்கு:- “ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு. அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்” (எபேசி. 5:14).