பலனளிக்கிறார்!

“விசுவாசமில்லாமல், தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன், அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” (எபி. 11:6).

நான் மிகவும் எளிய நிலைமையிலே, வேலை தேடி சென்னைக்கு வந்தேன். ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் பணி எனக்குக் கிடைத்தது. அதில் கிடைத்த வருமானத்தை வைத்து, ஒரு சைக்கிள் கூட என்னால் வாங்க முடியவில்லை. ஆனாலும் பத்து மாத தவணையில், சைக்கிள் வாங்கும்படி கர்த்தர் கிருபைச் செய்தார். தியாகமா ஊழியம் செய்த, ஒரு ஊழியருக்கு அந்த சைக்கிளை கொடுத்து விட்டேன். சில நாட்களுக்குள், இந்திய அரசாங்கத்தில் வருமான வரி இலாகாவில் நல்ல வேலை கிடைக்கும்படி ஆண்டவர் கிருபைச் செய்தார். அப்பொழுது ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கினேன். ஒரு கிராம ஊழியர், தனக்கு ஒரு மோட்டார் சைக்கிள் தேவை. ஜெபித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னபோது, அந்த மோட்டார் சைக்கிளை இலவசமாய் அவருக்குக் கொடுத்து விட்டேன். பிறகு, கர்த்தர் எனக்கு ஒரு காரை கொடுத்தார். கிறிஸ்துவே, “நீர் என்னை எவ்வளவு ஆசீர்வதித்தாலும், உமக்கு முன்பாகவும், உம்முடைய ஊழியக்காரர்களுக்கு முன்பாகவும், தாழ்மையோடு நடந்து கொள்வேன்” என்று பொருத்தனை செய்தேன்.

அப்பொழுது, எந்த வசதியுமில்லாமல் என்னைவிட அதிக தியாகமாய் ஊழியம் செய்த ஊழியக்காரரைக் கண்டபோது, என்னுடைய டிரைவரை அழைத்து, “தம்பி நீ போ, இந்த காரை அவருக்குக் கொடுத்துவிட்டு வந்துவிடு” என்று சொல்லி அனுப்பினேன். அந்த ஊழியர், என்னுடைய டிரைவரையும் சேர்த்து பிடித்துக் கொண்டார். அவரை நல்ல ஒரு ஊழியக்காரராய் உருவாக்கினார். அவர் இன்று சென்னையில், நல்ல ஒரு பெரிய வல்லமையான ஊழியக்காரராய், விளங்கி வருகிறதைப் பார்த்து, ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறேன்.

கர்த்தருக்குக் கொடுக்க, கொடுக்க அவர் அதை பெருக்கி, ஆசீர்வாதமாக்கி நமக்குத் தந்தருளுகிறார். இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குச் சித்தமும், பிரியமுமாயிருக்கிறது (எண். 24:1). நீங்கள் கர்த்தருக்காக கொடுக்கிற பணத்தை ஒரு விதையாக எண்ணி முப்பதும், அறுபதும், நூறுமாக உங்களுக்குத் திரும்பத் தந்தருளுவார். இயேசு நின்று பிரசங்கிப்பதற்கு பேதுரு தன்னுடைய படகைக் கொடுத்தார். இதனால் திரளான ஆத்துமாக்களுக்கு கிறிஸ்து சுவிசேஷத்தை அறிவிக்க முடிந்தது. இதனால் அந்தப் படகு அபிஷேகம் நிறைந்த படகாய் மாறிற்று. பிறகு பேதுரு போய் வலை போட்டபோது, வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள் (லூக். 5:1-11).

ஆம், தேவனுடைய பிள்ளைகளே, கர்த்தர் பலனளிக்கிறவர். வீட்டுக்கூட்டம் நடத்த, உங்களுடைய வீட்டை திறந்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாய் உங்களுடைய வீடு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உங்களுடைய நேரத்தையும், மற்றவர்களுக்காக ஜெபிப்பதிலும், ஆத்தும ஆதாயம் செய்வதிலும் செலவழித்துப் பாருங்கள். கர்த்தர் உங்கள் ஆயுசு நாளை கூட்டித் தந்தருளுவார். உங்களுடைய தாலந்துகளை அவருக்குக் கொடுங்கள். திறமைகளை அவருக்குக் கொடுங்கள். உங்களுடைய பிரயாசம் நித்தியம் வரைக்கும் ஓடுகிறதாயிருக்கட்டும். உங்களுடைய உள்ளத்தில் சந்தோஷம் நிரம்பி வழியும். குடும்பத்தில் சமாதானத்தைக் காண்பீர்கள்.

நினைவிற்கு:- “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவா 1:2).