ஆசீர்வாதத்தின் வழி!

“தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி.4:19).

நாம் எல்லோரும், நிறைவை விரும்புகிறோம். ஆசீர்வாதத்தை விரும்புகிறோம். நம்முடைய குறைவெல்லாம் நிறைவாகி, ஐசுவரியம் வர வேண்டுமென்று விரும்புகிறோம். வேதம் தெளிவாய்ச் சொல்லுகிறது, “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதி.10:22).

இன்றைக்கு அநேக குடும்பங்களிலே பற்றாக்குறை, கடன் பிரச்சனை, வருமானம் போதவில்லை, பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியவில்லை, திருமணக் காரியங்களை முன்னின்று நடத்த முடியவில்லை, வேலையில்லாத் திண்டாட்டம். வாழ்க்கைப் படகு கொந்தளிக்கும் கடலிலே, பயங்கரமாய் வீசுகிற புயல்காற்றில் சிக்குண்டதைப்போல, ஜனங்கள் தடுமாறுகிறார்கள்.

அநேகருடைய கடன் பிரச்சனைக்கு முக்கியக் காரணம், வரவுக்கு மிஞ்சிய செலவு செய்வதாகும். எளிதாய்க் கடன் வாங்குவதற்கு அவர்களுடைய உள்ளம் சென்று விடுகிறது. கர்த்தரிடத்தில் உபவாசித்து ஜெபிப்பதற்கோ, கேட்பதற்கோ, அவர்களுடைய மனம் செல்லுவதில்லை. இங்கே கடன் வாங்கி, அங்கே அடைத்துவிடலாம், இங்கே வட்டிக்கு வாங்கி, இதைச் செய்துவிடலாம் என்று குறுக்கு வழிகளை நாடி, முடிவில் பெரிய கடனாளிகளாகி விடுகிறார்கள். வேறு சிலர் எங்களுடைய அந்தஸ்து என்ன? எங்கள் குடும்பம் என்ன? என்று போலி கௌரவத்தினால் ஆடம்பரச் செலவு செய்து, சமுதாயத்தில் மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக, பணத்தை விரயம் செய்கிறார்கள். இதனால் இன்னும் அதிகக் கடன் சுமை ஏறிவிடுகிறது.

வறுமையையும், பற்றாக்குறையையும் நீக்க வழி என்ன? முக்கியமான வழி கர்த்தரிடத்தில் கேட்பதுதான். மனிதனிடம் கையேந்தி தலைகுனிந்து நிற்பதை விட, மனதுருக்கம் உள்ள பரம பிதாவண்டை உங்களைத் தாழ்த்தி பாவ அறிக்கை செய்து கேளுங்கள். “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்” என்று வேதம் தெளிவாய்ச் சொல்லுகிறதே (மத்.7:7). தேவனிடத்தில், விசுவாசத்தோடு கேளுங்கள். குடும்பமாக, உபவாசமிருந்து கேளுங்கள். உங்களுடைய சகல தேவைகளையும் கர்த்தருக்குத் தெரியப்படுத்தி, அற்புதத்தை எதிர்பாருங்கள். “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” (யோவான் 14:14) என்று வாக்கருளியிருக்கிறாரே!

தேவபிள்ளைகளே, “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று சொன்ன கர்த்தர் இன்னொரு காரியத்தையும் சொல்லியிருக்கிறார் “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்” (லூக்.6:38). அநேகர் கர்த்தருக்கும் கர்த்தருடைய ஊழியங்களுக்கும் கொடுக்காததினால், அவர்களுடைய ஆசீர்வாதம் தடைப்பட்டுப் போயிருக்கிறது. கர்த்தருக்குக் கொடுப்பது ஒரு விதையை விதைப்பது போலாகும். அது நிச்சயமாகவே முப்பது, அறுபது, நூறாகப் பலன் தரும். நீங்கள் கர்த்தருக்குக் கொடுப்பதை, அவர் காண்கிறார். ஒரு ஏழை விதவை, இரண்டு காசுகளை கர்த்தருக்கென்று கொடுத்தபோது, ஆண்டவர் அதைக் காணத் தவறவில்லை. உங்களுடைய வறுமையின் நிலைமையிலே, கர்த்தருக்கென்று கொடுங்கள். நிச்சயமாகவே, ஆயிரம் மடங்காக கர்த்தர் உங்களுக்குத் திரும்பத் தருவார்.

நினைவிற்கு :- “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” (2 கொரி. 9:6).