கொடுத்தலின் ஆசீர்வாதங்கள்!

” உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக் கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்” (பிலி.4:18).

பிலிப்பிய சபை மக்களின் கொடுக்கிற உற்சாகமான இருதயமும், அவர்கள் அப்.பவுலுக்கு என்று அனுப்பிய காணிக்கையும், கர்த்தருடைய பார்வையிலே சுகந்த வாசனையாகவும், தேவனுக்குப் பிரியமான உகந்த பலியாகவும் இருந்தது. அந்த சபை மக்கள், தங்களுக்கு இயன்றதை அனுப்பி, அப்.பவுலின் சுவிசேஷ ஊழியத்தைத் தாங்கினார்கள்.

கர்த்தருடைய மனதை மகிழ்விக்க, நாம் செய்யவேண்டியதெல்லாம் உத்தம இருதயத்தோடு உதாரத்துவமாய் கொடுப்பதுதான்.

” உற்சாகமாய் கொடுக்கிற வனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7). இது கர்த்தருடைய இருதயத்தைப் பூரிக்கச் செய்கிறது.

ஒரு நாள் நான் சென்னையிலுள்ள எழும்பூர் இரயில்வே ஸ்டேஷனிலே நின்று, ஆண்டவரைப் பற்றிய துண்டுப் பிரதிகளை விநியோகித்துக் கொண்டிருந்தேன். பத்து வயதுடைய ஒரு சிறுவன் என்னிடமிருந்து, சில துண்டுப் பிரதிகளை வாங்கி ஆவலோடுப் படித்தான். திரும்பத் திரும்ப, பல துண்டுப் பிரதிகளைக் கேட்டு வாங்கினான்.

அவனுடைய தோற்றமானது, அவன் வறுமையின் அடித்தளத்திலே வாடுகிறவன் என்பதை, தெரியப்படுத்தினது. ஆனாலும், அவன் எழுதப் படிக்க கற்றிருந்தான்.

கொஞ்ச நேரம் கழித்து திரும்ப என்னிடத்தில் வந்தான். தன்னுடைய பாக்கெட்டிலிருந்து, கந்தை துணிக்குள் பொதிந்து வைத்திருந்த, ஒரு ரூபா நோட்டை என்னிடம் நீட்டி ஐயா, ” இயேசுநாதருக்கு காணிக்கையாக இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னான். அவனிடம் இருந்ததே, அந்த ஒரு ரூபா நோட்டுதான்.

அவனிடம் வாங்குவதா? வேண்டாமா? என்று எனக்குத் தெரியவில்லை.

அவனுடைய ஏழ்மை நிலைமையைக் கண்டு தயங்கினேன். திடீரென்று ஆண்டவர் என்னிடம் பேசினதை உணர்ந்தேன்.

ஆண்டவர் என்னிடம் கேட்டார்: “அவன் அந்தப் பணத்தை உனக்குத் தருகிறானா? அல்லது எனக்குத் தருகிறானா?” நான் அந்தக் கேள்வியை, கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

நான் சொன்னேன்: ” ஆண்டவரே, எனக்கு அல்ல, உமக்குத்தான் காணிக்கையாகத் தருகிறான் .” ஆண்டவர் சொன்னார்: “அவன் எனக்குத் தருகிறதை வேண்டாம் என்று மறுப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்னுடைய நாமத்தினாலே நீ அதை வாங்கி அவனை மனப்பூர்வமாக ஆசீர்வதி. இந்தப் பணம் நான் அவனை ஆசீர்வதித்து, மேன்மைப்படுத்துவதற்கு, ஒரு முகாந்தரமாய் இருக்கும்” என்றார்.

அவன் நீட்டின காணிக்கையை, நடுங்குகிற கையோடு வாங்கினேன்.

நீண்ட நேரம் அவனை ஆசீர்வதித்து ஜெபித்தேன். அவன் பிற்காலத்திலே தேவனுடைய மகிமையான ஊழியக்காரனாக உயர வேண்டுமென்று மனப் பூர்வமாக ஆசீர்வதித்தேன். அவனைக் கட்டித் தழுவிக்கொள்ள வேண்டுமென்று ஒரு தெய்வீக அன்பு எனக்குள் உண்டானது. ஒரு தேவதூதனைப் பார்ப்பதுபோல அவன் போகும்போது, அவனையேப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

நினைவிற்கு:- ” கொஞ்சத்திலே உண்மையாயிருந்தால், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத். 25:23).