தாழ்மையின் ஆசீர்வாதம்!

” தம்மைத் தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி 2:8-11).

தாழ்மையுள்ளவர்களுக்கு, கர்த்தர் எவ்வளவு பெரிய உயர்வை அளிக்கிறார் என்பதை, இந்த வசனம் திட்டமும், தெளிவுமாய் சுட்டிக் காண்பிக்கிறது. “தாழ்மை” என்பது, தேவன் அதிகமாக நம்மிடம் எதிர்பார்க்கிற ஒரு மேன்மையான குணாதிசயம். தாழ்மையுள்ளவர்களுக்குதான் “கிருபை” அளிக்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கு “இரக்கம்” பாராட்டுகிறார். “தாழ்மை” என்ற இந்த அனுபவம் அநேகருக்கு இல்லாதபடியால், அவர்கள் தேவனிடம் உயர்வையோ, ஆசீர்வாதத் தையோ பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இரட்சிப்பின் வழி, தாழ்மையாகும். பரிசேயன் தேவ சமுகத்தில் வந்தபோது, தன்னுடைய பெருமையோடும், தான் எவ்விதமாய் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்கிறேன், தசமபாகம் செலுத்துகிறேன் என்று சுயநீதியோடும் வந்தான். அவனுக்கு இரக்கம் கிடைக்கவில்லை. ஆனால் ஆயக்காரனைப் பாருங்கள். அவனுடைய தாழ்மை, நம்முடைய உள்ளத்தைத் தொடுகிறது. “ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக் கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” என்று ஜெபித்தான் (லூக் 18:13). அவனுக்கு பாவமன்னிப்பு மட்டுமல்ல, நீதிமான் என்று அழைக்கப்படுகிற அந்தஸ்தும் கிடைத்தது .

இரண்டாவதாக, நீங்கள் அழைக்கப்படுகிற எந்த இடத்திலும் தாழ்மையுள்ளவர்களாய் நிற்க வேண்டும். இயேசு சொன்னார், “நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனே கூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக, உனக்குக் கனமுண்டாகும். தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும், தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (லூக் 14:10,11).

மூன்றாவதாக, சத்துருக்களுக்கு முன்பாகக் கூட உங்களைத் தாழ்த்தி ஒப்புக் கொடுங்கள். தாவீது ராஜாவுக்கு, சத்துருவாக சவுல் எழுந்தார். பல முறை தாவீதை சுவரோடு ஈட்டியால் குத்தும்படி, சவுல் ஈட்டியை ஓங்கினார். மட்டுமல்ல, தாவீதைத் தேடி வனாந்திரங்களுக்கும், குகைகளுக்கும் சென்று அழிக்க முற்பட்டார். ஒருமுறை கர்த்தர் சவுலை தாவீதின் கைகளில் ஒப்புக்கொடுத்த போது, தாவீது அவரை கொலை செய்யவில்லை. அவருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி, “இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு சேத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின் தொடருகிறீர்?” என்று கேட்டார் (1 சாமு24:14).

அருமையான தேவனுடைய பிள்ளைகளே, ஊழியத்திலும்கூட, உங்களைத் தாழ்த்துங்கள். கர்த்தர் உங்களுக்கு வரங்களையும், வல்லமைகளையும் கொடுக்கும் போது, கனத்திற்குரிய பாத்திரமாய் தன்னுடைய கரத்திலே பயன்படுத்தும்போது, ஒருபோதும் பெருமைக்கு இடம் கொடுத்து விடாதிருங்கள். அப்.பவுல் எவ்வளவோ கிருபைகளைப் பெற்றிருந்தபோதும், தன்னைத் தாழ்த்தி, “நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்” என்றார் (1 கொரி 15:9). “பாவிகளில் பிரதான பாவி நான்” (1 தீமோ 1:15) என்று, அவர் தன்னைத் தாழ்த்தினதுபோல, நாமும் தாழ்மையாய் வாழ்வோமா?

நினைவிற்கு:- ” கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்” (யாக். 4:10).