மன்னிப்பாகிய ஆசீர்வாதம்!

” *ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (கொலோ. 3:13).*

” *மன்னிப்பு” என்பது, இறைவனுடைய பூங்காவில் மலரும், இனிய பூவாகும். “மன்னிப்பு” என்று ஒன்று இல்லாவிட்டால்…? உங்களுடைய மனச்சாட்சி வாதித்துக் கொண்டேயிருக்கும். சமாதானத்தை இழந்து தவிப்பீர்கள். கொடூரமானவர்களின் சீறல் உங்களை நோக்கி வந்துக்கொண்டேயிருக்கும். பூமியிலே ஒருவருக்கொருவர் மன்னிக்கும்போது, மனச்சுமை இறங்கிவிடும். சிலுவையண்டை வந்து நின்று, பாவங்களை அறிக்கையிடும்போது, கர்த்தர் மிகுந்த இரக்கத்தினால், பாவங்களை மன்னித்து, உள்ளத்தில் சமாதானத்தைத் தருவார்.*

*சிறு வயதில் நான் கேட்ட கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு சிறுவன் தன்னுடைய உண்டிவில்லில் கல்லை ஏற்றி, தன் அப்பா செல்லமாய் வளர்த்து வந்த வாத்தைக் கொன்றுவிட்டான். யாருக்கும் தெரியாமல் அதை புதைத்து விட்டதாக எண்ணினான். ஆனால் அவனுடைய மூத்த சகோதரி, அதனை கண்டுபிடித்து விட்டபடியால், அதை வைத்தே இரகசியமாய் அவனை மிரட்டி, தனக்குரிய வேலைகளையெல்லாம் அவன்மேல் சுமத்தினாள். அவன் தன் சுதந்தரத்தை இழந்தான். ஒருநாள், தன் அக்காவிற்கு அடிமையாக இருக்கிறதைப் பார்க்கிலும், தகப்பனிடத்திலே போய் மன்னிப்புக் கேட்க தீர்மானித்தான். தகப்பன் அவனை அன்போடு அரவணைத்து, “கவலைப்படாதே, நான் மன்னித்துவிட்டேன்” என்று சொன்னபோது, அவனுடைய உள்ளத்திலுள்ள பாரம் இறங்கினது.*

*பாவம் மன்னிக்கப்படாதவர்களை, சாத்தான் அடிமைகளாய் வைத்திருக்கிறான். “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதி. 28:13). பாவம் மன்னிக்கப் படாவிட்டால், மரணத்திற்குப் பின் பாதாளத்திற்குள் அல்லவா, இறங்க வேண்டும்? நித்திய அக்கினிக் கடலில் அல்லவா பங்கடைய வேண்டும்? அங்கு வாதை ஒருநாளும் ஒழியாது.*

*தேவபிள்ளைகளே, பாவ மன்னிப்பு எவ்வளவு பெரிய ஆசீர்வாதம். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து, எல்லா அநியாயத்தையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும், நீதியும், உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:9).*

*கர்த்தர் உங்கள் பாவங்களை மனதுருகி மன்னிக்கிறதுபோல, நீங்களும் மற்றவர் களுடைய பாவங்களை மனப்பூர்வமாய் மன்னியுங்கள். மன்னித்தப் பின்பு, அதை மறந்தும்விடுங்கள். அப். பவுல் ஆலோசனையாக, “ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்கிறார் (எபே. 4:32).*

” *இயேசு சொன்னார், மனுஷருடைய தப்பிதங்களை, நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும், மன்னியாதிருப்பார்” (மத். 6:14,15). இதைத்தானே, நாம் பரமண்டல ஜெபத்திலும் சொல்லுகிறோம். “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” (மத். 6:12).*

” *எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே” (லூக். 11:4).*

நினைவிற்கு:- ” *என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்” (சங். 32:5)