சகல ஆசீர்வாதங்கள்!

” *நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின், பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபேசி. 1:3).

*இங்கே, “ஆசீர்வதிப்பார்,” என்றல்ல; “ஆசீர்வதிக்கிறார்,” என்றுமல்ல, அவர் “ஆசீர்வதித்திருக்கிறார்,” என்று எழுதப்பட்டிருக்கிறது. கடந்த காலத்திலே கர்த்தர் உங்களுக்கு குறித்துவிட்ட பெரிய ஆசீர்வாதங்களை, அப். பவுல் சுட்டி காண்பிக்கிறார். சில ஆசீர்வாதங்களை, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே, வைத் திருக்கிறார். சில ஆசீர்வாதங்களை சிருஷ்டிப்பின் நேரத்தில் கொடுத்திருக்கிறார்.*

*ஆனால் மிக மகிமையான ஆசீர்வாதங்களை, அவருடைய கல்வாரி சிலுவையின் தியாகத்தின் மூலமாக நாம் பெற்றுக்கொள்ளுகிறோம். கர்த்தர், நான்குவிதமான ஆசீர்வாதங்களை தந்தருளுகிறார். 1) செல்வமும், செல்வாக்குமான உலக ஆசீர்வாதங்கள். 2) ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள். 3) உன்னதத்துக்குரிய ஆசீர்வாதங்கள். 4) நித்தியத்துக்குரிய ஆசீர்வாதங்கள்.*

*ஆம், தேவனுடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களை, உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும், ஆசீர்வதித்திருக்கிறார். இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் ஆபிரகாமின் சந்ததியை ஆசீர்வதிக்கும்போது, உலகப்பிரகாரமாக பூமியின் தூளைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகப்பண்ணு வேன் என்றார்.*

*அதே நேரம், உன்னதத்துக்குரிய ஆசீர்வாதமாக உன் சந்ததி வானத்தின் நட்சத்திரங்களைப்போல இருக்கும் என்று சொன்னார். அதுதான் மண்ணுக் குரியவனை விண்ணுக்குரியவனாய் மாற்றும், ஆசீர்வாதம். நட்சத்திரங்களைப் போல என்றைக்கும் பிரகாசிக்கச் செய்யும் ஆசீர்வாதம். “ஆபிரகாமின் குமாரனாகிய,” இயேசுகிறிஸ்துவின் மூலமாக (மத். 1:1) இந்த வாக்குத்தத்தம் நிறைவேறினது. அவர் ஒருவர்தான் உன்னதத்துக்கு ஏறிச் செல்லும் ஏணியாக விளங்குகிறார்.*

*பரலோக ராஜ்யத்திற்கு வாசலாயிருக்கிறார். அவரையல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வர முடியாது. “ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவினால், புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை, நாம் விசுவாசத் தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று” (கலா. 3:14).*

“ஆபிரகாமுக்கும், அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். அந்தச் சந்ததி கிறிஸ்துவே” (கலா. 3:16). கர்த்தராகிய இயேசுவோ, நட்சத்திரங்களோடு நட்சத்திரமாக பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறார் (வெளி. 22:16).

*ஆம், தேவனுடைய பிள்ளைகளே, அவர்தான் உங்களை விண்ணகமாகிய பரலோக ராஜ்யத்துக்குள் கொண்டு செல்லுகிறவர். ஆதாம் முதல், ஆபிரகாம் வரையிலும், “மண்ணானவன் மண்ணுக்குத் திரும்புவான்” என்றிருந்தது. ஆபிரகாமிலே அந்த நிலைமை மாறி, மண்ணுக்குரியவன், விண்ணுக்குரிய நட்சத்திரமாக பிரகாசிக்கும், பாக்கியத்தைக் கர்த்தர் வாக்குப்பண்ணினார். அந்த வாக்கு கிறிஸ்துவிலே நிறைவேறினது. அவர் உன்னதங்களுக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் உங்களை ஆசீர்வதிப்பாராக!*

நினைவிற்கு:- ” ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்” (தானி. 12:3).