தேவ சித்த த்தினால் ஆசீர்வாதம்!

“தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்” (மாற்கு 3:35).

கிறிஸ்துவின் குடும்பம், உலகப்பிரகாரமானது அல்ல. அவருடைய குடும்பம், ஆவிக்குரிய நித்தியமான குடும்பம். ஆகவே, சபையைக் குறித்து, “நாமே அவருடைய வீடாயிருப்போம்” என்று அப்.பவுல் எழுதுகிறார் (எபி.3:6). உலக மெங்கும் இருக்கிற, தேவ சித்தம் செய்யும் பரிசுத்தவான்களெல்லாம், அவரோடுகூட ஒரே வீட்டாராய் இருக்கிறார்கள். அந்த தேவாதி தேவன், தம்மைத் தாழ்த்தி, நம்மை சகோதர சகோதரிகளாய் ஏற்றுக்கொண்டது எவ்வளவு பெரிய சிலாக்கியம்! இதினிமித்தம், அவர்களை சகோதரர் என்று சொல்ல அவர் வெட்கப்படவில்லை (எபி. 2:11).
“ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை” (எபி.11:16). பரலோகத்திலிருக்கிற தேவனுடைய சித்தம் செய்யும், பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழு குடும்பத்துக்கும் நாமகாரணரானவர் (எபே.3:14,15). நம்முடைய சொந்த சகோதரனைப்போல வந்து விடுகிறார். சகோதரன் இரத்த பாசமுடையவன். இயேசு, மூத்த சகோதரனாய் இரத்த பாசத்தோடு தன்னுடைய விலையேறப் பெற்ற இரத்தத்தை நமக்காக சிந்தக் கொடுத்தார். “ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது என்றார்” (மாற்கு 14:36). இயேசுகிறிஸ்துவுடைய கெத்சேமனே ஜெபம் இது. தன்னுடைய சித்தத்தை அவர் வெறுமையாக்கினார். பிதாவின் சித்தத்தை தன் மேல் ஏற்றுக்கொண்டார். கெத்சேமனே தோட்டத்திலே இரத்த வேர்வை சிந்தி, “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபித்தார்.

உங்களுடைய விருப்பத்தை, தேவனிடத்திலே சொல்லுவது தவறல்ல. ஆனால் உங்கள் விருப்பம்தான் நிறைவேற வேண்டுமென்று, அடம் பிடிப்பது தவறாகும். “ஆண்டவரே, என்னுடைய விருப்பம் இவை. இது உமக்குச் சித்தமானால் என் விருப்பங்களை நிறைவேற்றும். ஆகிலும் உம்முடைய பூரணமான சித்தத்துக்கு என்னை ஒப்புவிக்கிறேன்” என்று ஜெபிக்கவேண்டும். “பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந் திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும், என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது” (ஏசா.55:9).

இயேசு பிதாவுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தபடியினால், பல பாடுகள் உபத்திரவங்கள் வழியாக கடந்து செல்ல வேண்டியிருந்து, உண்மைதான். ஆனால் முடிவு, “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின்நாமத்தில், வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக, இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி.2:9,10,11). தேவ சித்தத்தின்படி செய்யும் போதும், உங்களுக்கு பாடுகளும், உபத்திரவங்களும் வரக்கூடும்.

தேவபிள்ளைகளே, அன்புள்ள பரம பிதா, உங்களுடைய வாழ்க்கையைக் குறித்து ஒரு திட்டமும் நோக்கமும் வைத்திருக்கிறார். நீங்கள் தேவ சித்தம் செய்யத் தவறும் போதெல்லாம் அவருடைய உள்ளம் உடைகிறது. கிறிஸ்துவை பிரியப் படுத்துகிற ஒரே வழி, அவரை மகிழ்ச்சியாக்குகிற ஒரே வழி, அவருடைய இருதயத்துக்கு ஏற்றவர்களாய் விளங்குகிறதற்கு ஒரே வழி, தேவனுடைய சித்தம் செய்வதுதான்.

நினைவிற்கு:- “இக்காலத்துப் பாடுகள் இனி வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல” (ரோமர் 8:18)