ஆசீர்வாதத்துக்கு அழைப்பு!

“நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி, அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்” (1 பேது. 3:9).

உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுண்டு. ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுண்டு. உன்னதத்துக்குரிய ஆசீர்வாதங்களுண்டு. நித்தியத்துக்குரிய ஆசீர்வாதங்களுண்டு. இவைகள் எல்லாவற்றையும் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். அனைத்து ஆசீர்வாதங்களையும், உங்களுக்குக் கொடுத்து, நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறார்.

நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க அசதியாயிராமல், சோம்பேறித்தனமாயிராமல், அதற்காக முயற்சிக்க வேண்டும். போராட வேண்டும். யாக்கோபைப் பாருங்கள்! கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு, முழு இரவும் போராடி மன்றாடினார். என்னை ஆசீர்வதித்தாலொழிய, உம்மைப் போக விடவேமாட்டேன் என்று சொன்னார். முழு இரவும் அப்படி போராடினதினால், அவருக்கு ஆசீர்வாதம் கிடைத்தது. புதிய பெயர் கிடைத்தது. யாக்கோபு இஸ்ரவேலராய் மாறினார்.

“மயிலே, மயிலே இறகு போடு” என்றால், அது இறகு போடாது. நான் சும்மா படுத்திருப்பேன். கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கட்டும் என்றால், கொடுக்காது. நீங்கள் ஆசீர்வாதத்துக்காக முயற்சிக்க வேண்டும். உங்களுக்கு ஐசுவரியம் வேண்டுமா? உங்கள் தசமபாகங்களை கர்த்தருடைய சமுகத்திலே கொண்டுவந்து வைத்து, “என்னை ஆசீர்வதியும் வானத்தின் பலகணிகளைத் திறந்தருளும். என் பாத்திரம் நிரம்பி வழியட்டும்,” என்று கேளுங்கள். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான். மட்டுமல்ல, நீங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்கும் படியாக அழைக்கப்பட்டவர்கள். அநேக ஜாதிகளுக்கு கடன் கொடுக்கக்கூடிய மேன்மையான நிலையிலே இருக்கும்படி அழைக்கப்பட்டவர்கள்.

கர்த்தர் மனுஷனை சிருஷ்டித்தபோது, முதல் செய்த காரியம், அவர்களை ஆசீர்வதித் ததுதான். ஆண்டவருடைய இருதயத் துடிப்பெல்லாம் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதிலே இருக்கிறது. “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதை கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற, சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்” (ஆதி. 1:28). இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி, சகலவற்றையும் கீழ்ப்படுத்துங்கள், ஆண்டு கொள்ளுங்கள். பாவத்தையும், சாபத்தையும், சாத்தானையும் கீழ்ப்படுத்துங்கள். நோய்களையும், வியாதிகளையும், கடிந்துகொண்டு அப்புறப்படுத்துங்கள்.

ஆசீர்வாதங்களிலெல்லாம், மேன்மையான ஆசீர்வாதம் என்ன? ஆம், ஆசீர்வாதத்தின் ஊற்றுக்காரணராகிய, கர்த்தரை சுதந்தரித்துக்கொள்வதே ஆகும். அப்பொழுது இரட்சிப்பின் சந்தோஷம், தெய்வீக சமாதானம், நித்திய ஜீவன், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் எல்லாம், உங்களுக்குக் கிடைக்கும். “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதி. 10:22).

தேவபிள்ளைகளே, கர்த்தரிடத்தில் ஆசீர்வாதத்தைக் கேளுங்கள். “கேளுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்” (மத். 7:7). கர்த்தரிடத்தில் ஆசீர்வாதத்தைக் கேட்கும்போது, விசுவாசத்தோடு, நம்பிக்கையோடு, எதிர்பார்ப்போடு கேளுங்கள். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்!

நினைவிற்கு:- “இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள்” (யோவா. 16:24).