உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்கள்!

“அவர் கிறிஸ்துவுக்குள், உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும், நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3).

பழைய ஏற்பாட்டில், ஆபிரகாமுக்குள் இஸ்ரவேலர் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். புதிய ஏற்பாட்டில், கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாகிய நாம், ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறோம். ஆபிரகாமுக்குள் இஸ்ரவேலருக்குக் கிடைத்த ஆசீர்வாதங்கள், வாக்குத்தத்தங்கள் எல்லாம் பெரும்பாலும் இம்மைக்குரியதாகவும், பூமிக்குரியதுமாக இருந்தது. ஆனால் கிறிஸ்துவுக்குள் உள்ள ஆசீர்வாதங்கள், இம்மைக்கும், மறுமைக்கும், உன்னதத்திற்கும், நித்தியத்திற்குமுரிய ஆசீர்வாதங்களாய் இருக்கின்றன, அல்லேலூயா!

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, நோவா போன்றவர்கள் எல்லாம், மிகப்பெரிய செல்வச் சீமான்களாய் வாழ்ந்தார்கள். அவர்களுக்குத் திரளான ஐசுவரியமும், உலகத்தின் மேன்மைகளும் இருந்தன (ஆதி. 30:27, 39:5, நீதி. 10:22). ஆனால் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கும் அப்போஸ்தலர்களுக்கும், ஆவியின் வரங்களும், ஆவியின் வல்லமையும், ஆவியின் பெலனுமே, பெரிய ஆசீர்வாதங்களாய் இருந்தன.

இயேசு, தன்னுடைய சீஷர்களை பெத்தானியா வரைக்கும் அழைத்துக் கொண்டுபோ, தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். ஆசீர்வதித்த நிலைமையிலே, அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். பத்து நாட்களுக்குப் பிறகு, அங்கேயிருந்து ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதத்தை அனுப்பினார். அதுவே பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம்.

வேதம் சொல்லுகிறது: “அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே, வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்” (அப். 2:4). “அவர் (இயேசு) தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி, பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும், கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்” (அப். 2:33).

பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாக, நீங்கள் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதங்கள் ஏராளம், ஏராளம்! பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலே, தேவனுடைய அன்பு, நம் இருதயத்திலே ஊற்றப்படுகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினாலே பெரிய சமாதானம், பெரிய சந்தோஷம் நமக்குள்ளே வருகிறது (ரோமர் 14:17). பரிசுத்த ஆவியிலே, உன்னத பெலன் இருக்கிறது. பரலோகத்தின் வல்லமை இருக்கிறது. திரித்துவத்தின் தேவன் இணைந்திருக்கிறார்.

தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளும்போது, ஆவிக்குரிய வரங்களையும் நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள். வேதம் சொல்லுகிறது: “ஆவியினுடைய அநுக்கிரகம், அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதலும், ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்” (1 கொரி. 12:7-11). ஆவியின் வரங்கள் மாத்திரமல்ல. ஆவியின் கனிகளும், பரிசுத்த ஆவியின் வல்லமையும், உங்களுக்குக் கிடைக்கிறது.

நினைவிற்கு:- “அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும், கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும், உன்னை ஆசீர்வதிப்பார்” (ஆதி. 49:25).