ஆசீர்வதியுங்கள்!

“நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்” (1 பேது.3:9).

முதலாவது, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டவர்கள், என்பதை திட்டமும் தெளிவுமாய் அறிந்துகொள்ளுங்கள். இரண்டாவதாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி, மற்றவர்களை மனப்பூர்வமாய் ஆசீர்வதியுங்கள். கர்த்தர் ஆபிரகாமை அழைத்தபோது, “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன் என்றார்” (ஆதி.12:2,3).

ஒருவர், கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் வந்து, “ஐயா, என்னுடைய தொழிலில் பயங்கரமான நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைத்துப் பார்த்தும், பலன் கிடைக்கவில்லை. ஏன் எனக்கு ஒரு ஆசீர்வாதம் இல்லை?” என்று கேட்டார். “அதற்கு அந்த தேவனுடைய ஊழியக்காரர், சகோதரனே, இன்றிலிருந்து நீங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க ஆரம்பியுங்கள். தேவனுடைய ஊழியக்காரர்களைப் பார்க்கும்போதெல்லாம், உள்ளத்தின் ஆழத்திலிருந்து, “ஆண்டவரே, அவர்களை ஆசீர்வதியும். நானும் ஆசீர்வதிக்கிறேன்” என்று சொல்லுங்கள். இஸ்ரவேல் ஜனத்தை நினைவு கூர்ந்து, ஆசீர்வதியுங்கள் என்றார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவர் திரும்பி வந்து, “போதகரே! நீங்கள் சொன்னபடியே செய்தேன். கர்த்தர் இன்றைக்கு என்னை திரளாய் ஆசீர்வதித்திருக்கிறார்” என்றார் மகிழ்ச்சியோடு.

மற்றவர்களை ஆசீர்வதிக்கும்போது, வெறும் வார்த்தைகளோடு நின்று விடாதிருங்கள். செயலிலும், பொருள் உதவியிலும், அவர்களைக் கனப்படுத்துங்கள். ஏழைகளுக்கு மனந்திறந்து கைகளை விரியுங்கள். உங்களுடைய உள்ளத்திலிருந்து அன்பின் நீரூற்றுகள் பாய்ந்துகொண்டே இருக்கட்டும். “இந்தச் சிறியரில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள். என் நாமத்தினாலே வருகிறவர்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் கொடுத்தாலும்கூட, அதனுடைய பலனை அடையாமற்போவதில்லை” என்று அருமை ஆண்டவர் சொல்லியிருக்கிறாரே! (மத். 25:40;10:42)

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்” (லூக்.6:38). மட்டுமல்ல, நீங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி, கர்த்தரை அளவில்லாமல் நேசித்து எல்லாவற்றிலும் அவருக்கு முதலிடம் கொடுங்கள். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” (மத்.6:33).

எதைச் செய்தாலும், கர்த்தரை முன்நிறுத்தி, அவரையே முக்கியப்படுத்தி, அவருக்கு மகிமையையும், கனத்தையும் செலுத்துங்கள். அப்பொழுது பொங்கி வரும் நிறைவான ஆசீர்வாதத்தை நீங்கள் நிச்சயமாகவே காண்பீர்கள். தேவபிள்ளைகளே, நீங்கள் நிச்சயமாகவே ஆசீர்வதிக்கப்படுவீர்கள். கர்த்தர், வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற்போகுமட்டும், உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப் பண்ணுவார்.

நினைவிற்கு:- “பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று” (ஏசா.58:14).