உன்னத ஆசீர்வாதங்கள்!

“அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே. 1:3).

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களுக்கெல்லாம், உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களே மேன்மையாய் இருந்தன. அவர்களுடைய ஆசீர்வாதம், ஆடுகள் மாடுகளின் பெருக்கத்திலும், திராட்சரசப் பெருக்கத்திலும், வயல்வெளியின் பெருக்கத்திலுமே இருந்தது. ஆனால், புதிய ஏற்பாட்டு தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கோ, ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் மிகமிக மேன்மையானவைகள்.

இயேசு இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்லும்போது, தம் கைகளை உயர்த்தி சீஷர்களை ஆசீர்வதித்தார். அவர் ஆசீர்வதித்துக்கொண்டே, நீண்ட நேரம் நின்றிருப்பார் என்று நான் நம்புகிறேன். மேகம் சூழ்ந்து அவரை எடுத்துக்கொண்டபோதிலும், ஆசீர்வதிக்கிற வண்ணமாகவே, அவர் உயர சென்றார்.

ஆசீர்வதிக்கிற நிலைமையில் பரலோகத்திற்கு ஏறிச் சென்ற அவர், அங்கே இருந்து, ஆசீர்வாதமான ஆவியானவரின் அருள்மாரியை, தம் பிள்ளைகள்மேல் அளவில்லாமல் ஊற்றினார். பிதாவினால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, உன்னத பெலனாகிய அந்த ஆசீர்வாதத்திற்காக காத்துக்கொண்டிருந்த, ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார்கள். கர்த்தர் தங்களுக்கு கொடுத்திருந்த கிருபையின்படியே, அவர்கள் அந்நிய பாஷையில் பேசி மகிழ்ந்தார்கள்.

அதோடு அந்த உன்னத ஆசீர்வாதம் நின்றுவிட்டதா? இல்லை. அந்த அபிஷேகத்தைத் தொடர்ந்து, ஆவியின் வரங்களெல்லாம் அவர்களுக்குள் கிரியைச் செய்ய ஆரம்பித்தது. அந்நியபாஷை வரங்கள், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுகிற வரங்கள், தீர்க்கதரிசன வரங்கள், ஆவிகளை பகுத்துணருகிற வரங்கள், ஞானத்தை உணர்த்தும் வரங்கள், அறிவைத் தெரிவிக்கும் வரங்கள், சுகமளிக்கிற வரங்கள், அற்புதங்களைச் செய்கிற வரங்கள், விசுவாச வரங்கள் எல்லாம் அவர்களுக்குள் கிரியைச் செய்தன. வரங்கள் மட்டுமா, அவர்களுக்குள் காணப்பட்டது? பரிசுத்த ஆவியின் கனிகளும் அவர்களுக்குள் உருவானது. ஆவியின் கனியான அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் எல்லாம் அவர்களுக்குள் வந்தது. ஆ! அந்த உன்னத ஆசீர்வாதங்கள் எத்தனை மேன்மையானவை!

பரிசுத்த ஆவியானவரின் மூலமாக, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் ஸ்தாபிக்கப்படுவது இன்னும் ஒரு மேன்மையானதாகும். “தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது” (ரோமர் 14:17).

இந்த ஆசீர்வாதங்களையெல்லாம் பெறும்படி தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களை அன்போடு கூட அழைக்கிறார். அவை யாவும் இலவசமே. இந்த ஆசீர்வாதங்களை கர்த்தர் உங்கள்மேல் ஊற்றவேண்டுமென்றால், உங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட இருதயம் தேவை. மாத்திரமல்ல, உங்கள் உள்ளத்தின் ஆழத்தில் தாகமும் இருக்க வேண்டும். கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற இன்னொரு மேன்மையான ஆசீர்வாதம் நித்திய ஜீவன். அந்த நித்திய ஜீவனால் நீங்கள் என்றென்றைக்கும் அழியாத தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பீர்கள். தேவன் உங்களுக்கு அந்த நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறபடியால், எக்காள சத்தம் தொனிக்கும்போது நீங்கள் அவருக்கு எதிர்கொண்டு போவீர்கள். அல்லேலூயா!

நினைவிற்கு:- “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” (வெளி. 3:21).