ஆசீர்வதித்திருக்கிறார்!

“அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே, ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபேசி. 1:3).

கர்த்தருடைய ஆசீர்வாதங்களை நான்கு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது, உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள். இரண்டாவது, ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள். மூன்றாவது, உன்னதத்துக்குரிய ஆசீர்வாதங்கள். நான்காவது, நித்தியத்துக்குரிய ஆசீர்வாதங்கள்.

உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள், பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்றன. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களைக் கர்த்தர் உலகப்பிரகாரமாக எவ்வளவோ ஆசீர்வதித்தார். “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்” (கலா. 3:29). அப்படியானால், உங்களுக்கு உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களுண்டு.

ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள், எப்போது ஆரம்பமாயிற்று? ஆம், பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மேல் வீட்டறையில் காத்திருந்த சீஷர்கள்மேல் ஊற்றப்பட்டதிலிருந்து ஆரம்பமாயிற்று. அந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்திலே வல்லமையுண்டு, அபிஷேகமுண்டு, உன்னத பெலனுண்டு. மட்டுமல்ல, ஒன்பது ஆவியின் வரங்கள், ஒன்பது கனிகளுமுண்டு. ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நீங்கள் பெறும்போது, பரலோக வான்புறாவான ஆவியானவர் உங்களுக்குள் வந்து தங்குகிறார். உங்களுடைய சரீரத்தை, தேவாலயமாய் மாற்றுகிறார். உங்களுக்குள்ளிருந்து, ஜெப ஆவியையும், விண்ணப்பத்தின் ஆவியையும், மன்றாட்டின் ஆவியையும் புறப்படப்பண்ணுகிறார்.

அதுவரை கோழையாயிருந்த சீமோன் பேதுரு, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டபோது, எவ்வளவு வல்லமையாய் நின்று யூதர்களுக்கும், பரிசேயருக்கும், சதுசேயருக்கும், வேதபாரகருக்கும் பயப்படாமல், தைரியமாப் பிரசங்கித்தார்! முதல் பிரசங்கத்திலே, மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்களென்றால், அது எத்தனை வல்லமையுள்ளதா யிருந்திருக்கும்!

உன்னதங்களுக்குரிய ஆசீர்வாதங்கள், எப்பொழுது ஆரம்பமானது? ஆம், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, நாற்பது நாட்கள் தம்மை சீஷர்களுக்கு வெளிப்படுத்தி, எப்பொழுது பரமேறி உன்னதங்களிலுள்ள பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்தாரோ, அப்பொழுது நம்மை உன்னதத்துக்குரிய ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிக்கச் சித்தமானார். பிதாவினுடைய வலதுபாரிசத்தில் அமர்ந்து, இயேசு செய்த முதல் காரியம், “கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களில் அவரோடேகூட, உட்காரவும் செய்தார்” (எபேசி. 2:7).

தேவபிள்ளைகளே, எந்த சிங்காசனத்திலே பிதா வீற்றிருக்கிறாரோ, அதே சிங்காசனத்தில் கிறிஸ்துவும் வீற்றிருக்கிறார். நம்மையும் அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட, உட்காரவும் செய்தார். இன்றைக்கு நீங்கள் சிங்காசனத்திலே பிதாவோடும், குமாரனாகிய கிறிஸ்துவோடும் உட்கார்ந்திருக்கிறீர்கள். அங்கிருந்து கிடைக்கிற உன்னத ஆசீர்வாதம்தான், கிறிஸ்துவோடுகூட அரசாளுவதாகும். எப்போதும் ஜெயங்கொள்ளு கிறவர்களாய் விளங்கச் செய்யும் இந்த ஆசீர்வாதம், இது எத்தனை மேன்மையானது!

நினைவிற்கு:- “அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்” (எபேசி. 1:21,22,23).