ஆசீர்வாதமான அற்புதங்கள்!

“அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை எதினாலே செய்கிறார்?” (கலா. 3:5).

அற்புதங்கள் ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறது. “இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம்” (எண். 24:1). ஆகவே இப்பொழுதே ஆசீர்வாதமான அற்புதங்களைச் செய்ய வல்லமையுள்ள, தேவாதி தேவனை நோக்கிப் பாருங்கள். “நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?” என்று அவர் கேட்கிறார் (எரே. 32:27).

அவர் அன்பும், மனதுருக்கமும் உள்ள தேவன். கர்த்தரைப் போல இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் வேறு யாருண்டு? அவரைப் போல தயவும், காருண்யமும் மிக்கவர் வேறு யாருண்டு? “அவர் ஆராந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 5:9).

இயேசுகிறிஸ்து ஒரு திருமண வீட்டிற்குச் சென்றபோது, அங்கு திராட்சரசம் குறைவுபட்டதைக் கண்டார். அவருடைய உள்ளம் உருகினது. தண்ணீரை திராட்சரசமாக்கி அற்புதமாய் அவர்களுடைய தேவைகளையெல்லாம் சந்தித்தார். சீஷர்களோடு பயணம் செய்தபோது, கடலையும், காற்றையும் அதட்டி அமைதலுண்டாக்கி அற்புதத்தைச் செய்தார். சீஷர்கள் தனியாச் சென்றபோது நடு ஜாமத்தில் கடலின் மேல் நடந்து அவர்களைத் தேடி வந்தார். யாரால் இந்த அற்புதங்களைச் செய்ய முடியும்? இந்த அற்புதங்களெல்லாம், சீஷர்களுடைய விசுவாசத்தை உறுதிப்படுத்தியது.

நாயீனூர் விதவையின் மகனை, உயிரோடு எழுப்பினார். மரித்துப்போன, யவீருவின் மகளை, கையைப் பிடித்து தூக்கி விட்டு “தலீத்தாகூமி” என்றார். அவள் உயிரோடு எழுந்தாள். மரித்து நான்கு நாட்களாகிப் போன லாசருவை எழுப்பினார். அவருடைய அற்புதங்களெல்லாம், மெயாகவே அவர் ஜனங்களை சிநேகிக்கிறார். அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கைகளிலே இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திற்று (உபா. 33:3).

ஒரு பக்கம் அவர் அற்புதங்களைச் செய்தார். மறுபக்கம், அவர் அற்புதங்களைச் செய்ய சீஷர்களைப் பழக்குவித்தார், அதிகமான விசுவாசத்தை ஊட்டினார். சீஷர்கள் சுவிசேஷத்தை அறிவிக்கப் புறப்பட்டபோது, இயேசுகிறிஸ்துதாமே அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே, வசனத்தை உறுதிப்படுத்தினார் (மாற்கு 16:20).

தேவபிள்ளைகளே, இந்த தலைமுறையினரை அற்புதங்களோடும், அடையாளங்களோடும், சந்திக்க வேண்டிய பொறுப்பு, உங்களுடையதாகும். இதற்காகத்தான் கர்த்தர் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார்.

இன்றைக்கு உங்களுடைய கைகளோடு, அவர் தம்முடைய கைகளை இணைத்துக் கொண்டு, உங்கள் கைகளிலே சுகமளிக்கிற வரங்களையும், அற்புதங்களைச் செய்கிற வல்லமையையும், தரப் பிரியப்படுகிறார். உங்கள் கைகள் மூலமாக தேவனுடைய மனதுருக்கமும், அன்பும், வல்லமையும் தேவையுள்ள மக்களை நோக்கிப் பாய்ந்து செல்லும்படி, உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா?

நினைவிற்கு:- “பவுலின் கைகளினாலே தேவன், விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட, வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின” (அப். 19:11,12).