கிருபையின் ஆசீர்வாதங்கள்!

“என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்” (2 கொரி. 12:9).

கர்த்தருடைய ஆசீர்வாதங்களிலே, மிகச் செழிப்பான ஒரு ஆசீர்வாதம் அவருடைய கிருபையாகும். கர்த்தருடைய கண்களிலே கிருபை கிடைக்கும் என்றால், அதைப் பார்க்கிலும் மேன்மையானது ஒன்றுமேயில்லை. அவர் இன்றைக்கு உங்களை அன்போடு நோக்கிப் பார்த்து, “என் மகனே, என் மகளே, என் கிருபை உனக்குப்போதும்” என்று சொல்லுகிறார்.

நான் சில மாதங்களுக்கு முன்பு, ஒரு ஆலயத்தில் பிரசங்கித்துவிட்டு வெளியே வந்ததும், ஒரு சகோதரி ஜெபிப்பதற்காக முழங்கால்படியிட்டார்கள். அவர்கள் மேல் என் கைகளை வைத்தபோது கர்த்தர், “கிருபை பெற்றவளே வாழ்க” என்ற வார்த்தையைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து கர்த்தருடைய கிருபையின் ஆசீர்வாதங்கள் அவர்கள் மேல் வருகிறதை உணர்த்தியபோது, அவர்கள் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்கள்.

“ஐயா, ஆண்டவருடைய கிருபை எனக்கு இருந்தால் போதும். ஏனென்றால், எனக்குப் பிள்ளைகள் இல்லாமல், பல வருடங்களை நான் கடத்திவிட்டேன். இப்பொழுதோ, எனக்கு வயதாகிவிட்டது. இப்பொழுது நான் அவருடைய கிருபையையே சார்ந்து கொள்ளுவேன். நீங்கள் ஜெபிக்க ஆரம்பித்ததும், “கிருபை பெற்றவளே” என்று ஆண்டவர் பேசியது, என் உள்ளத்தை ஆழமாய் தொட்டது” என்றார்கள்.

“கிருபை” என்ற வார்த்தை, ஒரு இனிமையான வார்த்தை. தகுதியில்லாதவர்களுக்கு தேவன் பாராட்டுகிற தயவுதான் கிருபை என்று அழைக்கப்படுகிறது. கர்த்தர் தினந்தோறும் அந்த கிருபையை தருகிறார். காலைதோறும் அவருடைய கிருபைகள் புதிதாய் இருக்கின்றன. எரேமியா சொல்லுகிறார், “நாம் நிர்மூலமாகாதிருக்கிறதும் கர்த்தருடைய கிருபையே” (புலம்.3:22).

தாவீது ராஜா சொல்லுகிறார், “ஜீவனைப் பார்க்கிலும், உமது கிருபை நல்லது.” (சங். 63:3). பொதுவாக மனுஷன் ஜீவனையே மேன்மையாக மதிக்கிறான். ஜீவனுக்கு ஈடாக எதை வேண்டுமென்றாலும் கொடுத்துவிடுவான். எந்த பெரிய செல்வந்தனையும் கத்தியைக் காட்டி, ஒரு திருடன் மிரட்டி உனக்கு உயிர் வேண்டுமா? அல்லது பணத்தை தந்துவிடுகிறாயா? என்று கேட்டால், அவ்வளவு பணத்தையும் கொடுத்துவிட்டு, உயிரைக் காத்துக்கொள்ளவே பிரியப்படுவான். உயிர் மீது ஒவ்வொரு மனுஷனுக்கும், அவ்வளவு ஆசை.

ஆனால் தாவீது ராஜா சொல்லுகிறார், “என் ஜீவனைப் பார்க்கிலும் அவருடைய கிருபை நல்லது.” அப்படியென்றால் என்ன அர்த்தம்? கிருபையானது, இம்மைக்கும் மறுமைக்கும், ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறது என்று அர்த்தம். ஜீவன் போனாலும், அந்த கிருபை நித்திய தேசத்தில் கரை சேர்க்கும், என்பது அர்த்தம். ஆகவேதான் தாவீது ராஜா அநேக சங்கீதங்களிலே திரும்பத் திரும்ப கர்த்தரைத் துதியுங்கள். அவர் நல்லவர். அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.117:1; 106:1; 136:1) என்று எழுதுகிறார்.

தேவபிள்ளைகளே, இந்த நாளிலே கர்த்தருடைய கிருபை உங்களைச் சூழ்ந்து கொள்ளட்டும். “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள் மேல், அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது” (சங். 103:11).

நினைவிற்கு:- “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்” (சங்.32:10).