தோல்வி ஜெயமாகும்!

“கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு, அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 2:14).

நம் தேவன், வனாந்தரத்தை வயல்வெளியாக மாற்றுகிறவர். துக்கத்தை சந்தோஷமாய் மாற்றுகிறவர். கண்ணீரை ஆனந்தக்களிப்பாய் மாற்றுகிறவர். அதுபோலவே தோல்வியை எல்லாம் ஜெயமாய் மாற்றுகிறவர். அப். பவுல், “தேவன் எங்களை எப்பொழுதும் வெற்றி சிறக்கப்பண்ணுவார்” என்கிறார்.

நம் வாழ்க்கையிலே, பல வேளைகளிலே சில தோல்விகளை நாம் சந்திக்கிறோம். தோல்விகளைக் கண்டு நாம் துவண்டு போனால், வெற்றியை சுதந்தரித்துக்கொள்ள முடியாது. ஆபத்துக் காலத்தில் சோர்ந்து போவோம் என்றால், நம்முடைய பெலன் குறுகினதாகவே இருக்கும். உங்களை முன்னேற முடியாதபடி தடுக்கும் தடை காரியங்களை, முன்னேறுவதற்கு உபயோகமாய் இருக்கும் படிக்கற்களாய் மாற்ற, நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுது உங்களுடைய தோல்விகள் ஜெயமாய் மாறும்.

யோசுவா, இஸ்ரவேல் ஜனங்களை கானானுக்குள் வழி நடத்திச் சென்றபோது, திடீரென்று ஆயி பட்டணத்தில் தோல்வி அடைந்தார். அந்த பட்டணத்தின் மனுஷர் இஸ்ரவேலரிலே முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள். தேவஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராப்போயிற்று (யோசு. 7:5). இந்த தோல்வியை ஜெயமாய் மாறப்பண்ணுவது எப்படி? யோசுவா புலம்பி கர்த்தருடைய சமுகத்திலே முகங்குப்புற விழுந்து கிடந்தார் (யோசு. 7:10).

அப்பொழுது, கர்த்தர் தோல்விக்கான காரணத்தை வெளிப்படுத்தினார். இஸ்ரவேலர் பாவம் செய்தார்கள். நான் அவர்களுக்கு கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள். எப்படி ஆகான் என்று சொல்லப்படுகிற ஒரு மனுஷனால் பாவம் இஸ்ரவேலரின் பாளத்திற்குள் பிரவேசித்தது என்பதை கர்த்தர் சுட்டிக் காண்பித்தார்.

ஆகானை அகற்றுகிற வரையிலும், அவர்களுக்கு ஜெயமில்லை. தேவ பிள்ளைகளே, உங்களுக்குள்ளும் சில ஆகான்கள் மறைந்திருக்கக்கூடும். சிலருடைய ஆகான்கள் பொருளாசையாய் இருக்கலாம். சிலருடைய ஆகான்கள் வீண் வார்த்தைகளாய் இருக்கலாம். இன்னும் சில இச்சைகள், தவறான உறவுகள், தவறான எண்ணங்களினாலே, பாவம் உட்பிரவேசித்து இருக்கக்கூடும். இவைகள் தோல்வியைக் கொண்டு வரலாம். பாவ சுமையை வைத்துக்கொண்டு வெற்றியோடு ஓட முடியாது. ஆனால் பாவம் நீக்கப்படுமானால், தெய்வீக பிரசன்னமும் வல்லமையும் உங்களில் வெளிப்படும்.

தேவபிள்ளைகளே, எப்போதும் ஜெயக்கிறிஸ்துவோடுகூட நில்லுங்கள். அவர் இஸ்ரவேலரின் ஜெய கெம்பீரமானவர். அவரைத் துதியுங்கள். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” (1 கொரி. 15:57). உங்களுக்கு விரோதமாக அநியாயமாய் சத்துருக்கள் வருகிறார்களா? வீணாய் உங்களை பகைக்கிறார்களா? கலங்காதிருங்கள். “உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்” (உபா. 28:7).

நினைவிற்கு:- “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்” (வெளி.3:21).