ஆசீர்வதிப்பார்!

“கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்” (சங்.115:12).

கர்த்தர் யார் யாரை ஆசீர்வதிப்பார்? இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார் என்று 115-ம் சங்கீதம் 12,13-ம் வசனங்களிலே வாசிக்கிறோம்.

தேவனோடு ஜெபத்திலே போராடி, வெற்றி பெறுகிறவன்தான் இஸ்ரவேல். ஊக்கமாய் ஜெபிக்கிறவர்களை, கர்த்தர் நிச்சயமாய் ஆசீர்வதிப்பார். இரண்டாவதாக ஆரோன் குடும்பத்தார் என்றால், குடும்பமாக கர்த்தருக்கு ஊழியம் செய்கிறவர்கள், அவர்களை கர்த்தர் நிச்சயமாகவே ஆசீர்வதிப்பார். மூன்றாவதாக, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தால், தீமையை விட்டு விலகி நன்மை செய்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார்.

ஒருமுறை ஒரு சகோதரி சொன்னார்கள், “ஐயா, முன்பெல்லாம் குடிசை வீட்டில் இருந்தோம். இப்பொழுது இரண்டு மாடி வீட்டை தந்திருக்கிறார். முன்பு எங்களுக்கு பழைய சைக்கிள்தான் இருந்தது. இப்பொழுது புதிய கார் வாங்கியிருக்கிறோம். முன்பு சொறி பிடித்த வங்கு நாய் தான் இருந்தது. இப்பொழுது, இரண்டு அல்சேஷன் நாய் வளர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டே போனார்கள். அவர்களிடம் பேசிப் பார்த்தபோது, அவர்கள் உலகப் பிரகாரமான ஆசீர்வாதத்தை ருசித்திருக்கிறார்களே தவிர இரட்சிக்கப்படவில்லை.

புதிய ஏற்பாட்டிலே மிகச் சிறந்த ஆசீர்வாதம் பாவ மன்னிப்பு, இரட்சிப்பின் சந்தோஷம், நித்திய ஜீவன், தெய்வீக சந்தோஷம், சமாதானம், மனநிறைவு ஆகும். ஆசீர்வாதங்களிலே நான்கு வகை உண்டு. 1) உலகப்பிரகாரமான ஆசீர்வாதம். 2) ஆவிக்குரிய ஆசீர்வாதம். 3) உன்னதத்திற்குரிய ஆசீர்வாதம். 4) நித்தியத்திற்குரிய ஆசீர்வாதம். “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே, ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்” (எபே.1:3).

உலகப்பிரகாரமாக நம்முடைய தகப்பன்மார், முற்பிதாக்கள் நமக்குக் கொடுக்கும் ஆசீர்வாதங்களும் உண்டு. சாத்தான் காண்பிக்கிற போலியான ஆசீர்வாதங்களும் உண்டு. ஆனால் அதே நேரம், கர்த்தர் கொடுக்கிற ஆசீர்வாதங்களும் உண்டு. அதை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். சில சொத்துக்களை முற்பிதாக்கள் தவறான வழியில் சம்பாதித்திருப்பார்களானால், சொத்துக்களோடு சாபங்களும் வந்துவிடும். நிலபுலன்கள் இருக்குமே தவிர, அதை அனுபவிக்கிற சக்தி இருக்காது.

அதுபோல சாத்தான் சில ஆசீர்வாதங்களைக் காட்டக்கூடும். குதிரை ரேசில் ஜெயித்து பணத்தைக் கொண்டு வரக்கூடும். லாட்டரி டிக்கெட் மூலமாக செல்வங்களைக் கொண்டு வரக்கூடும். லஞ்சம் வாங்குதல், குறுக்கு வழிக்குச் செல்லுதல், முதலிலே பணம் ஈட்டினாலும், முடிவிலே நிம்மதி இருப்பதில்லை. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என்று அலைந்து சமாதானத்தைக் கெடுத்துவிடக்கூடும். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய ஆசீர்வாதத்தின் மேன்மை என்ன? வேதம் சொல்லுகிறது, “கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதி. 10:22).

நினைவிற்கு:- “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன்” (ஆதி.12:2,3).