முகத்திலிருந்து ஆசீர்வாதம்!

“தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்” (சங். 67:2).

ஆசீர்வாதத்துக்காக ஏங்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? வறண்ட நிலம், மழைக்காக ஏங்குகிறது. பிள்ளைகள், பெற்றோரின் அன்புக்காக ஏங்குகிறார்கள். வேலையாட்கள், தங்கள் எஜமானின் பாராட்டுக்காக ஏங்குகிறார்கள். மனுக்குலம், கர்த்தருடைய ஆசீர்வாதத்துக்காக ஏங்குகிறது. கர்த்தரோ, நீங்கள் அவருடைய முகத்தைத் தேட மாட்டீர்களா? என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்.

கர்த்தருடைய முகத்தைத் தேடினவர், முற்பிதாவாகிய யாக்கோபு ஆவார். “நான் தேவனை முகமுகமாய் கண்டேன். உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி அந்த ஸ்தலத்துக்கு, “பெனியேல்” என்று பேரிட்டார்” (ஆதி. 32:30,31). யாக்கோபு, தேவனுடைய முகத்தைக் கண்டு, புதிய பெயரை பெற்றுக்கொண்டார். புதிய தைரியத்தையும், தன் சகோதரனாகிய ஏசாவை சந்திக்க புதிய பெலனையும், பெற்றுக்கொண்டார். யாக்கோபாயிருந்தவர், இஸ்ரவேலராய் மாறினார்.

அவருடைய வாழ்க்கையில் புதிய விதத்திலே, “சூரியன் உதயமாயிற்று”. உலக ஆசீர்வாதங்களான ஐசுவரியமும், பேரும், புகழும் மரணத்தோடு ஒழிந்துபோகும். ஆனால், கர்த்தருடைய ஆசீர்வாதங்களோ, நித்திய நித்தியமாக உங்களை தொடர்ந்து வரும். கர்த்தருடைய முகத்தை தரிசித்த யாக்கோபு, “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய, உம்மைப் போக விடேன் என்றார்” (ஆதி. 32:26, 29).

ஆபிரகாம் லிங்கன் சிறுவனாயிருந்தபோது, அவருடைய தாயார் சொன்னார்கள், “மகனே, நீ அதிகாலையில் தேவனுடைய முகத்தைப் பார்த்தப் பிறகு தான், மனுஷருடைய முகத்தைப் பார்க்க வேண்டும். கர்த்தரோடு ஜெபத்தில் பேசின பிறகுதான், மனுஷரோடுப் பேச வேண்டும்” என்றார்களாம். அந்தப் பழக்கத்தை அவர் கடைசி வரை வைத்திருந்தார்.

இன்றைக்கு பலவிதங்களிலே, நீங்கள் ஆசீர்வாதங்களைத் தேடலாம். யாக்கோபுக்கு சேஷ்ட புத்திர பாகம் கிடைத்தது. அது ஒரு ஆசீர்வாதம். தகப்பனாகிய ஈசாக்கினிடத்திலிருந்து மேன்மையான ஆசீர்வாதங்கள் கிடைத்தன. ஒரு இரவு, கர்த்தருடைய ஆசீர்வாதத்தைப் பெறும்படி, மனைவி, பிள்ளைகளையெல்லாம் தனியே வைத்துவிட்டு, கர்த்தருடைய முகத்தை நாடி, ஆற்றின் மறு கரையிலே தனிமையாய் காத்திருந்தார். அந்த இரவு கர்த்தரைத் தேடினபடியால், நித்தியமான ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

ஆசீர்வதிக்கப்பட்ட யாக்கோபு, லாபான் வீட்டுக்குப் போனபோது, அவருக்கு மனைவிகள், பிள்ளைகள் கிடைத்தார்கள். ஏராளமான ஆடு, மாடுகள், சொத்துக்கள் கிடைத்தன. கர்த்தருடைய முகத்தை அவர் தேடினபோது, தன்னுடைய மூத்த சகோதரனாகிய ஏசாவின் பகைமை நீங்கி, அன்பு சுரந்து வந்தது. கசப்புகள் மாறி, இனிமை சுரந்தது. மரண பயம் ஓடிப்போய் விட்டது.

தேவபிள்ளைகளே, இது கர்த்தருடைய முகத்தைத் தேட வேண்டிய நேரம். தனிமையாக ஜெபிக்க, கர்த்தருடைய முகத்தைத் தேட, அமைதியான இடத்திற்கு போய் விடுங்கள். ஒரு நாளோ, சில நாட்களோ, உபவாசத்தோடு கர்த்தருடைய முகத்தைத் தேடுங்கள். தாயின் வயிற்றிலே உங்களை உருவாக்கினவரும், உலகத் தோற்றத்துக்கு முன்பாக, உங்களைத் தெரிந்துகொண்டவருமாகிய கர்த்தர், நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பார்.

நினைவிற்கு:- “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” (சங். 34:10).