வழிகாட்டும் ஆசீர்வாதம்!

“என் கன்மலையும் என் கோட்டையும் நீரே, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழி காட்டி, என்னை நடத்தியருளும்” (சங். 31:3).

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் தேசத்திலே இலங்கைத் தமிழர்கள் மத்தியிலே ஊழியம் செய்துகொண்டிருந்தேன். அந்த ஊழியம் முடித்தபிறகு, அடுத்தக் கூட்டத்திற்குச் செல்ல வேண்டிய இடம், விலாசமிருந்தும், மொழி தெரியாததால், பலமணி நேரம் சுற்றி அலைய வேண்டியதிருந்தது. இடம் தெரிந்த ஒரு வழிகாட்டி எங்களோடு வருவாரானால், எவ்வளவு ஆசீர்வாதமாய் இருந்திருக்கும், நேரம் வீணாகாது என்று எண்ணினேன்.

இப்பொது எல்லாம் காரிலே வரைபடத்தையும், வீடு இருக்கிற இடத்தையும் சேட்டிலைட் மூலமாக காண்பித்து விடுகிறார்கள். ஜி.பி.எஸ்.சிஸ்டம் ஒன்றை பொருத்திவிட்டால், அதுவே எந்தப் பக்கம் திரும்ப வேண்டும்? இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது? என்கிற விபரங்களையெல்லாம் அது துல்லியமாக சொல்லி, மிகச் சரியான இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்துவிடும். ஆகவே நீங்கள் வழி தேடி திணர வேண்டியதில்லை. வழி தப்பி போகவேண்டியதும் இல்லை.

கர்த்தர் உங்களுக்கு வழிகாட்டியாக மாத்திரமல்ல, வழிக்கு ஆலோசனை கொடுக்கிறவராகவும் இருக்கிறார். என் தகப்பனார், பிரயாணத்தில் பிள்ளைகளாகிய எங்களை அனுப்பும்போதெல்லாம், “உன் வழிகளிலெல்லாம், அவரை நினைத்துக் கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:6) என்ற வசனத்தைச் சொல்லி, எங்களை ஆசீர்வதித்து அனுப்புவார். கர்த்தருடைய வாக்குத்தத்தம் என்ன? “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8). கடலிலே பயணம் செய்கிறவர்கள் வழியை அறிய, காந்த ஊசியைப் பயன்படுத்துவார்கள்.

வேறு சிலர், விடிவெள்ளி நட்சத்திரத்தை வைத்து, இடத்தையும், நேரத்தையும் குறித்துக்கொள்ளுவார்கள். நவீன காலத்தில், வழிகாட்டக்கூடிய எத்தனையோ நவீன கருவிகள் வந்தாலும் கூட, சமீபத்தில் மலேசியா விமானம் ஒன்று எங்கே போனதென்று தெரியாமல் மாயமாய் மறைந்து விட்டது. எந்தக் கருவிகளினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நீங்கள் கர்த்தரை சார்ந்துகொள்வீர்களானால், அவர் செவ்வையான பாதையிலே நடத்துவார். “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்” (யோவா. 16:13).

கர்த்தர், பூமிக்குரிய வழிகளை மட்டுமல்ல, நித்திய வழிகளையும் உங்களுக்கு காண்பித்து, அதிலே நடத்துவதற்கு உண்மையுள்ளவராக இருக்கிறார். உலகத்தில் பெரும்பாலானோர், பரலோகத்தின் வழி தெரியாமல், அலைந்துக்கொண்டிருக்கும் போது, இயேசு, “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று சொன்னார் (யோவா. 14:6). கிறிஸ்து நடத்தும் பாதையிலே, சமாதானமும், சந்தோஷமும் உண்டு. அந்த வழிகள் உங்களை நித்திய ஜீவனுக்குள்ளாக, மகிமையின் தேசத்திற்கு நேராக வழிநடத்தும்.

நினைவிற்கு:- “அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்து வருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும், திசைகெட்டுப் போவதில்லை” (ஏசா. 35:8).