ஆவியின் வரம்!

“உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டு கிறேன்” (2 இராஜா. 2:9).

கர்த்தர் மனுக்குலத்திற்குத் தரும் மாபெரும் ஆசீர்வாதங்களுக்குள்ளே, பரிசுத்த ஆவியின் அபிஷேகமும், வரங்களும் முக்கியமானவைகளாகும். நான் பரிசுத்த ஆவியை பெறாத நாட்களில், அதின் முக்கியத்துவத்தை அறியாமலிருந்தேன். ஆனால், அபிஷேகம் பெற்றுக்கொண்ட அந்த நாளில், பரலோகம் எவ்வளவு சந்தோஷப்பட்டது என்பதை உணர்ந்தேன். அன்று முதல் ஆவியானவர் எனக்குள் வந்து தங்கி, என்னை வழிநடத்த ஆரம்பித்தார். அன்று தெய்வீக அன்பெல்லாம் பூரணமாய் எனக்குள் ஊற்றப்பட்டது. அப்பொழுது வேதத்தின் இரகசியங்கள் எனக்கு புரிய ஆரம்பித்தது. வேதம், கர்த்தர் எனக்குக் கொடுத்த ஒரு அன்பின் நேச புத்தகமாக விளங்கினது. அதை வாசிக்க வாசிக்க தெவிட்டாத தேன் விருந்தாக இருந்தது.

ஆவியின் அபிஷேகம் மிகப் பெரிய ஆசீர்வாதம். அதைவிட ஆவியின் வரங்கள் இன்னும் பெரிய ஆசீர்வாதம். தீர்க்கதரிசன வரம், குணமாக்குகிற வரங்கள், அற்புதங்கள் செய்கிற வரங்கள் மிகப் பெரிய ஆசீர்வாதங்களாகும். எலியா எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக, அவருடைய சீஷனாக இருந்த எலிசா, தாகத்தோடும், வாஞ்சையோடும் கேட்டது என்ன? “உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய் கிடைக்கும்படி வேண்டுகிறேன்” என்றார். தேவபிள்ளைகளே, ஆவியின் வரங்கள் இருந்தால்தான், ஜனங்களுக்கு ஆவி, ஆத்துமா, சரீரத்தில் நன்மை செய்ய முடியும். ஆவியின் வரங்கள் இருந்தால்தான் புறஜாதி மக்களுக்கு “கர்த்தரே தேவன்” என்று நிரூபிக்க முடியும்.

ஆகவே பசிதாகத்தோடு ஆவியின் வரங்களை தேடுங்கள், வாஞ்சித்துப் பெற்றுக் கொள்ளுங்கள். எலியாவுக்கு ஆவியின் வரங்கள் இருந்ததினால், பஞ்சக்காலத்தில் சாறிபாத் விதவையின் வீட்டில் எண்ணெயும், மாவும் பெருகிக்கொண்டே வந்தன. அந்த ஆவியின் வரத்தால், மரித்துப்போன சாறிபாத் விதவையின் மகனை உயிரோடு எழுப்பினார். மழை பெய்யாதபடி, எலியா தன் வாக்கின்படியே வானத்தைக் அடைத்தார். வானத்திலிருந்து அக்கினியை இறங்கப்பண்ணி, பாகால் தீர்க்கதரிசிகளின் சவாலை உடைத்துப் போட்டார். அவருடைய வாழ்நாளெல்லாம், கர்த்தருக்காக அக்கினியாய் பற்றியெறிந்து, ஊழியம் செய்தார்.

எலிசா, ஏன் இரண்டு மடங்கு ஆவியின் வரங்களை விரும்பினார் தெரியுமா? ஒரு தலைமுறை தாண்டி, அடுத்த தலைமுறை வரும்போது, பாவமும், அக்கிரமமும் இரண்டு மடங்கு பெருகுகிறது. ஜனங்களின் தேவைகளும் இரண்டு மடங்கு பெருகு கிறது. ஆகவே, ஜனங்களுக்கு நன்மை செய்வதற்கு, எலியாவைப் பார்க்கிலும் இரண்டு மடங்கு ஆவியின் வரம் வேண்டும் என்பதே, எலிசாவின் விருப்பமாக இருந்தது.

இரட்டிப்பான வரம் பெறுவதற்கு எலிசா, எந்தத் தியாகமும் செய்ய ஆயத்தமாக இருந்தார். தான் உழுத ஏரை முறித்து, மாடுகளை சமைத்து, இனி நான் பின்னே திரும்பமாட்டேன் என்ற உறுதியோடு எலியாவைப் பின்பற்றினார். 14 வருடங்கள் தன் குருவாகிய எலியாவுக்கு, அடிமைபோல ஊழியம் செய்தார். முடிவாக, எலியா எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரட்டிப்பான வரங்களை பெற்றுக்கொண்டார். ஆவியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள், சீயோன் பர்வதத்திலே, அவரோடு காணப்படுவார்கள் அல்லவா? (வெளி. 14:4).

நினைவிற்கு:- “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்” (எபே. 3:20).