ஆசீர்வாதமான வீடு!

“உம்முடைய ஆசீர்வாதத்தினாலே, உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பதாக என்றான்” (2 சாமு. 7:29).

வாலிப வயதில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த, தாவீதின் மேல் கர்த்தருடைய கண்கள் பட்டன. கர்த்தர் அவரை ஆசீர்வதித்ததினால் இஸ்ரவேல் தேசம் முழுவதிற்கும் பெரிய ராஜாவாக, சக்கரவர்த்தியாக மாறிவிட்டார். தாவீது அரசாண்ட காலமே இஸ்ரவேல் தேசத்தினுடைய பொற்காலமாகும். இப்பொழுது தாவீது கேதுரு மரங்களால் செய்யப்பட்ட அரண்மனையிலே வாழுகிறார். அந்த அரண்மனை பிரதிஷ்டையின்போது, பல தேசத்து ராஜாக்கள், பிரமுகர்கள், செல்வந்தர்கள் வந்து, அந்த வீட்டை பரிசு பொருட்களினால் நிறைத்திருப்பார்கள்.

ஆனால், தாவீதின் ஆசை என்ன? “கர்த்தருடைய ஆசீர்வாதம் என் வீட்டிற்கு வேண்டும்.” அந்த வாஞ்சையோடு ஜெபித்தார். “இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி, அதை ஆசீர்வதித்தருளும். உலக பொருட்களினால், உங்கள் வீடு நிரம்பியிருக்கிறதைப் பார்க்கிலும், தேவ பிரசன்னம், தேவ சமுகம், தேவ கிருபை, தேவ காருண்யத்தினால் உங்களுடைய வீடு நிரப்பப்பட்டிருக்கட்டும். கர்த்தருடைய ஆசீர்வாதத்திற்கு இணையானது ஒன்றுமில்லை.

ஒரு முறை ஒரு ஸ்திரீ, தாவீதின் ஞானம், தேவதூதர்களின் ஞானத்தைப் பார்க்கிலும் பெரியது என்று சொல்லி அவரைப் பாராட்டினாள். அவருக்கு வெள்ளி யும், பொன்னும் இருந்தது. வேலைக்காரரும், வேலைக்காரிகளும் இருந்தார்கள். யுத்த வீரம் இருந்தது. உலக ஆசீர்வாதங்கள் அவருக்கு இருந்தும்கூட, அவர் பரலோக ஆசீர்வாதத்திற்காக ஏங்கினார்.

கர்த்தருடைய பெரிய ஆசீர்வாதம், என்பது குடும்பத்திலே சமாதானமும், உள்ளத் திலே தெய்வீக சந்தோஷமும் ஆகும். வேதவசனம் சொல்லுகிறது, “கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார், கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்” (சங். 29:11). “என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக் கும்” (ஏசா. 32:18).

அமெரிக்கா தேசம், அநேக இந்தியர்களுக்கு ஒரு கனவு பூமியாய் இருக்கிறது. அங்கு போனவர்கள் திரும்ப வருவதில்லை. அநேக தேவ ஊழியர்களும், இந்தியாவிலுள்ள தங்களுடைய ஊழியத்தை விட்டுவிட்டு, அங்கே போய் நிரந்தரமாக தங்கிவிடலாமா? என்று பார்க்கிறார்கள். ஆனால், உண்மை என்ன? அமெரிக்காவில் தான் அதிகமான பைத்தியங்கள் வாழுகிறார்கள். பெரும்பாலான வாலிப ஆண்களும், பெண்களும், பெற்றோருடைய வார்த்தைக்கு அடங்காமல் மனம்போல் வாழ ஆரம்பித்துவிட்டார்கள். அமெரிக்கா தேசம் அநேக இந்திய குடும்பங்களை சீரழித்திருக்கிறது. திருமண வாழ்க்கையை பாழாக்கியிருக்கிறது.

அதுபோல, உலகத்திலே அதிகமான தனி நபருடைய வருமானம் ஏராளமாய் இருக்கிற தேசம் ஜப்பான். அங்கே மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை தற்கொலை நடக்கிறது. பணம் சம்பாதிக்க இரவும், பகலும் உள்ளத்தை திருப்பி, குடும்ப மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அழித்துப்போட்டார்கள். ஆனால், தாவீதோ உலக செல்வம், பணம், அழகு, பொருளைப் பார்க்கிலும், கர்த்தருடைய ஆசீர்வாதத்தையும், அவர் தரும் மேலான சமாதானத்தையுமே மேன்மையாய் கண்டார். தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையிலே சமாதானம் இருக்கிறதா? இல்லாவிட்டால், சமாதானப் பிரபுவாகிய இயேசுவை, அன்போடு அழையுங்கள்.

நினைவிற்கு:- “கர்த்தரின் ஆசீர்வாதமே, ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதி. 10:22).